Enable Javscript for better performance
போலீஸ்-என்ஐஏ அதிகாரிகள் வெளியேற நீதிபதி உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    போலீஸ்-என்ஐஏ அதிகாரிகள் வெளியேற நீதிபதி உத்தரவு

    By புது தில்லி  |   Published on : 03rd April 2014 12:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்திய முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஜியா உர் ரகுமான் என்கிற வாகாஸ், தெஹ்சீன் அக்தர் என்கிற மோனு ஆகிய இரு பயங்கரவாதிகளை காவலில் எடுப்பது தொடர்பாக நீதிமன்றத்துக்குள் போட்ட்டிப் போட்டுக் கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட தில்லி போலீஸ், என்ஐஏ (தேசிய புலனாய்வு ஏஜென்சி) அதிகாரிகளையும் வழக்குரைஞர்களையும் வெளியேறும்படி என்ஐஏ நீதிமன்றம் உத்தரவிட்டது.

    தில்லி போலீஸாரால் அண்மையில் கைது செய்யப்பட்ட அவர்களை பயங்கரவாத வழக்குகளை விசாரிக்கும் என்ஐஏ நீதிமன்றத்தில் போலீஸார் புதன்கிழமை ஆஜர்படுத்தினர். அப்போது ஆஜரான என்ஐஏ அதிகாரிகளும், அதன் வழக்குரைஞர்களும் "இரு பயங்கரவாதிகளையும் 2013-ஆம் ஆண்டு ஹைதராபாதில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பாக விசாரிக்க வேண்டும். அவர்களை காவலில் எடுக்க எங்களை அனுமதிக்க வேண்டும்' என்று கோரினர்.

    இதைச் சற்றும் எதிர்பார்க்காத தில்லி போலீஸ் தரப்பு வழக்குரைஞர், "2011-ஆம் ஆண்டில் தில்லியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த ஆயுதத் தொழிற்சாலை தொடர்பாகவும், தலைமறைவாகவுள்ள பயங்கரவாதி ரியாஸ் பட்கல் தொடர்பாகவும் விசாரிக்க வேண்டியுள்ளது. ஆகவே, தொடர்ந்து அவர்களை தில்லி போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும்' என்றார்.

    ஆனால், இருவரையும் விசாரணைக்கு அழைத்து வரும்படி என்ஐஏ மேலிடம் உத்தரவிட்டிருந்ததால், "தில்லி போலீஸார் கூறும் விவகாரம் மாநிலம் தொடர்புடையது. ஆனால், என்ஐஏ விசாரித்து வருவது தேசிய பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்காகும்.

    ஆகவே, அவர்களை விசாரிக்கக் கோரும் உரிமை எங்கள் துறைக்கே உள்ளது. ஏற்கெனவே, தில்லி போலீஸ் காவலில் இருவரும் இருந்துள்ளனர். ஆகவே, இருவரையும் இம் முறை எங்களிடமே ஒப்படைக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டனர். அப்போது குறுக்கிட்ட வாகாஸ், தெஹ்சீன் அக்தர் ஆகியோரின் வழக்குரைஞர்கள் "10 நாள்கள் போலீஸ் காவலில் எங்கள் கட்சிக்காரர்களிடம் என்ன விசாரணை நடத்தப்பட்டது என்பதை விளக்க வேண்டும்' என்றனர். அதைத் தொடர்ந்து, "கைதிகளை முதலில் கைது செய்தது நாங்கள்தான். ஆகவே, எங்கள் காவலில்தான் அவர்கள் தொடர்ந்து இருப்பர்' என்று தில்லி போலீஸ் வழக்குரைஞர் கூறினார். அவருக்கு ஆதரவாக தில்லி போலீஸ் தனிப் பிரிவு அதிகாரிகளும் குரல் எழுப்பினர்.

    இதேபோல, "தில்லி போலீஸ் அதிகார வரம்பை மீறிச் செயல்படுகிறது. பயங்கரவாதிகளை எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் கைது செய்ய எங்களுக்கு அதிகாரம் உள்ளது. நீங்கள் ஒப்படைக்காவிட்டால் வலுக்கட்டாயமாக அவர்களை கொண்டு செல்வோம்' என்று என்ஐஏ அதிகாரிகள் குரல் எழுப்பினர்.

    இந்த அமளி அனைத்தும் நீதிபதி முன்னிலையில் நடைபெற்றது. இதனால், அதிருப்தி அடைந்த நீதிபதி, "இந்த விவகாரம் தொடர்பாக பிற்பகல் 3 மணிக்கு பிறகு உத்தரவு பிறப்பிக்கிறேன்' என்றார். அதைத் தொடர்ந்து பிற்பகலில் நீதிமன்றம் கூடியபோதும் இரு துறை அதிகாரிகள், வழக்குரைஞர்கள் இடையே வாக்குவாதம் முற்றியது.

    இதனால், அதிருப்தியடைந்த நீதிபதி "முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை இரு துறைகளும் விசாரிக்கின்றன. கைது செய்யப்பட்ட குற்றம்சாட்டப்பட்டவர்களை காவலில் எடுத்து விசாரிப்பதில் உங்களுக்குள்ளேயே முதலில் ஒத்துழைப்பு கிடையாது. இதுபோன்ற வழக்குகளை எப்படி நடத்தப் போகிறீர்கள்? முதலில் உங்களுக்குள் ஒரு முடிவுக்கு வந்த பிறகு நீதிமன்றத்துக்கு வாருங்கள். இப்போது இந்த நீதிமன்ற அறையை விட்டு வெளியேறுங்கள்' என்று நீதிபதி கண்டிப்புடன் கூறினார்.

    பின்னணி: கடந்த ஆண்டு அக்டோபர் 28-ஆம் தேதி தில்லி நகர்ப்புறத்துக்கு வெளியே உள்ள மீர் விஹார் பகுதியில் சட்டத்துக்கு புறம்பான வகையில் ஆயுதங்கள் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தியதாக போலீஸýக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சோதனை நடத்தியதில் பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக இந்திய முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் துணைத் தலைவர் யாசின் பட்கல் மற்றும் அசதுல்லா அக்தர் ஆகியோரை தில்லி தனிப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் கைது செய்தனர்.

    அதைத் தொடர்ந்து இருவர் மீதும் தில்லி உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை போலீஸார் தாக்கல் செய்தனர். இதற்கிடையே, இந்த வழக்கு தொடர்பாக இந்திய-நேபாள எல்லையில் அமைந்துள்ள மேற்கு வங்க மாநிலத்தின் காகர்விட்டா அருகே கடந்த மார்ச் 25-ஆம் தேதி தெஹ்சீன் அக்தரையும் மார்ச் 22-ஆம் தேதி அஜ்மீர் ரயில் நிலையத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜியா-உர்-ரகுமான் (எ) வாகாஸ் ஆகிய இருவரும் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai