Enable Javscript for better performance
லஞ்ச வழக்கில் கலால் துறை அதிகாரிக்கு சிறை- Dinamani

சுடச்சுட

    

    ரூ.7.50 லட்சம் லஞ்சம் கேட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் கிழக்கு தில்லியைச் சேர்ந்த மத்திய கலால் துறையின் அதிகாரிக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து தில்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

    இந்த வழக்கு பற்றிய விவரம் வருமாறு:

    கிழக்கு தில்லி சக்கர்பூரைச் சேர்ந்தவர் ரவீந்தர் மோகன். இவர் ஹரியாணா சோனிபட் பகுதியில் உள்ள மத்திய கலால் கோட்டக் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்தார். மேற்கூரை கட்டுமான வேலைகளை மேற்கொண்டு வரும் தில்லியைச் சேர்ந்த "டிஆர்எஸ் ரூஃப்டெக் அண்ட் இன்ஃப்ரா' என்ற தனியார் நிறுவனம், 2008-ஆம் ஆண்டில் சோனிபட்டில் உள்ள "ஹிந்துஸ்தான் டின் ஓர்க்ஸ்' என்ற நிறுவனத்தின் இடத்தில் மேற்கூரை கட்டுமான வேலைகளுக்கான பணி உத்தரவுகளைப் பெற்றது.

    பின்னர் அதற்கான வேலைகளைத் தொடங்கியிருந்தது. இந் நிலையில், 2009-ஆம் ஆண்டு டிசம்பரில் ஹரியாணா மாநிலம், ரோட்டக்கில் உள்ள மத்திய கலால் துறை அலுவலகத்திடம் இருந்து டிஆர்ஸ் ரூஃப்டெக் அண்ட் இன்ஃப்ரா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநருக்கு விளக்கம் கேட்டு ஒரு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.

    அதில், "மத்திய கலால் சட்டம்-2000'இன் விதிகளை மீறும் வகையில் உங்கள் நிறுவனம் செயல்பட்டுள்ளது. அதனால், இச் சட்டத்தின் கீழ் தண்டனை நடவடிக்கைக்கு உங்கள் நிறுவனம் உள்ளாகிறது' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதையடுத்து, மத்திய கலால் கண்காணிப்பாளர் ரவீந்தர் மோகன் சக்கர்பூரில் உள்ள தனது வீட்டுக்கு அத் தனியார் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜே.எஸ். அலுவாலியாவை 2010, ஜனவரி 10-ஆம் தேதி வரழைத்து சந்தித்தார்.

    தனக்கு ரூ.7.50 லட்சம் லஞ்சம் அளித்தால் மூன்று நாள்களில் பிரச்னையை தீர்த்துவைப்பதாக மோகன் கூறியதாக மத்திய புலனாய்வுத் துறையிடம் ஜே.எஸ். அலுவாலியா புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து, சிபிஐ போலீஸாரின் அறிவுரையின்பேரில் ரூ.1.50 லட்சத்தை ரவீந்தர் மோகனிடம் அலுவாலியா அளித்தார்.

    அப்போது மறைந்திருந்த போலீஸார் கையும் களவுமாக ரவீந்தர் மோகனை பிடித்தனர். பணமும் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பான வழக்கு தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

    இந்த வழக்கில் இருதரப்பின் வாத, பிரதிவாதங்களுக்குப் பிறகு சிபிஐ சிறப்பு நீதிபதி ராஜிவ் மெஹ்ரா அளித்த தீர்ப்பு: குற்றம்சாட்டப்பட்ட ரவீந்தர் மோகன் மீதான குற்றம் அரசுத் தரப்பில் போதிய சாட்சிகள், ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளதால், ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது.

    தண்டனைக்கு எதிராக ரவீந்தர் மோகன் மேல்முறையீடு செய்ய ரூ.1 லட்சம் ஜாமீன் உத்தரவாதத்தின் பேரில் அவரது சிறைத் தண்டனையை ஏப்ரல் 28-ஆம் தேதி வரை தாற்காலிகமாக நிறுத்திவைக்க அனுமதிக்கப்படுகிறது என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

    மேலும், "தற்போது நமது சமூகத்தில் ஊழல் ஆழமாக வேரூன்றி இருக்கிறது.

    இது ஏறக்குறைய தடையற்ற மற்றும் கட்டுப்பாடற்ற வகையிலும் உள்ளது. பேராசை எல்லையற்றது. ஒவ்வொருவரும் எளிதாகப் பணம் ஈட்ட விரும்புகின்றனர். சட்டப்பூர்வமற்ற வகையில் இருந்தாலும் அதைப்பற்றி கவலைப்படுவதில்லை. இது உண்மையிலேயே வருந்தத்தக்கது' என்று நீதிபதி குறிப்பிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai