Enable Javscript for better performance
தெற்கு தில்−யில் வெற்றியைத் தீர்மானிக்கும் சமுதாய வாக்கு!எம்.வெங்கடேசன்- Dinamani

சுடச்சுட

    

    தெற்கு தில்−யில் வெற்றியைத் தீர்மானிக்கும் சமுதாய வாக்கு!எம்.வெங்கடேசன்

    By புது தில்லி,  |   Published on : 04th April 2014 12:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிராமப்புறங்களையும், வளர்ந்து வரும் நகரங்களையும் உள்ளடக்கிய தெற்கு தில்லி மக்களவைத் தொகுதியில் வேட்பாளரின் வெற்றியை சமுதாய வாக்குகள்தான் தீர்மானிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தில்லியின் அதிக மக்கள் தொகை கொண்ட தொகுதியாக உள்ள தெற்கு தில்லி மக்களவைத் தொகுதியில், சதுர கிலோ மீட்டருக்கு 10,935 பேர் வசிக்கின்றனர். குறிப்பாக பேகம்பூர், ஜியோ சராய், கட்வாரியா சராய், பதர்பூர், ஹோஸ் காஸ், லடோ சராய், பேர் சராய், சி.ஆர் பார்க் ஆகிய பகுதிகளில் மக்கள் நெருக்கமாக வசிக்கின்றனர். கால்காஜி, மெஹரெüலி, அம்பேத்கர் நகர், சத்தர்பூர் ஆகிய பகுதிகளில் குடிசைப் பகுதிகள், மறுகுடியமர்த்தப்பட்ட காலனிகள், குடியிருப்பு காலனிகள் ஆகியன அமைந்துள்ளன.

    வரலாற்றுச் சிறப்புமிக்க துக்ளகாபாத் கோட்டை, குதுப்மினார் ஆகியன இத் தொகுதியில் அமைந்துள்ளன. இத் தொகுதி, மறுசீரமைக்கப்படும் வரை, அதாவது 2008-ஆம் ஆண்டு வரை பாஜகவின் கோட்டை என்று அறியப்பட்டது.

    இத் தொகுதியின் மக்களவை உறுப்பினராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரமேஷ் குமார் உள்ளார். இவர், காங்கிரஸ் மூத்த தலைவர் சஜ்ஜன் குமாரின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

    களம் காணும் வேட்பாளர்கள்: இந் நிலையில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் மீண்டும் ரமேஷ் குமார் களம் இறக்கப்பட்டுள்ளார். பாஜக சார்பில் துக்ளகாபாத் சட்டப்பேரவை உறுப்பினர் ரமேஷ் பிதூரி, ஆம் ஆத்மி சார்பில் தேவேந்தர் ஷெராவாத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஸ்ரீசந்த் தன்வர் ஆகிய தேசியக் கட்சிகளின் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். சஞ்சய் குமார் (பகுஜன் சமாஜ்), ஸ்ரீரூபா மித்ரா செüத்ரி (திரிணமூல் காங்கிரஸ்), ஓம்பீர் சிங் நெüவர் (பிஎச்பிபி), மோகன் கனுகா (ஜேகேஎன்பிபி) உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள், 10 சுயேச்சைகளும் சேர்த்து மொத்தம் 18 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    தெற்கு தில்லியில் பிற்படுத்தப்பட்டோர் 31.61 சதவீதம், தாழ்த்தப்பட்டோர் 18.47 சதவீதம், பிராமணர்கள் 9.38 சதவீதம், குஜ்ஜர் 9.4 சதவீதம், முஸ்லிம்கள் 6.05 சதவீதம், பஞ்சாபிகள் 5.3 சதவீதம், ஜாட் 5.29 சதவீதம், பிற சமூகத்தினர் 14.83 சதவீதம் என்ற அடிப்படையில் பல்வேறு சமூகத்தினர் உள்ளனர். இத் தொகுதியில், ஜனவரி மாதம் இறுதி நிலவரப்படி மொத்தம் 16,42,875 வாக்களார்கள் உள்ளதாக தேர்தல் ஆணையம் கண்டறிந்துள்ளது. இவற்றில் 9,40,801 பேர் ஆண்கள், 7,01,982 பேர் பெண்கள், திருநங்கைகள் 92 பேர் உள்ளனர்.

    சட்டப்பேரவைத் தொகுதிகள்:தெற்கு தில்லி மக்களவைத் தொகுதியில் பதர்பூர், சங்கம் விஹார், துக்ளகாபாத், கால்காஜி, அம்பேத்கர் நகர், தியோலி, சத்தர்பூர், மெஹரெüலி, பிஜ்வாஸன், பாலம் ஆகிய 10 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில், தில்லியில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 7 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 3 இடங்களிலும் வெற்றி பெற்றன. காங்கிரஸ் ஓர் இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

    கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ரமேஷ் குமார் 3,60,278 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை அடுத்து பாஜக சார்பில் கடந்த தேர்தலிலும் போட்டியிட்ட ரமேஷ் பிதூரி 2,67,059 வாக்குகள் பெற்றார். மூன்றாம் இடத்தை பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த கன்வர் சிங் தன்வார் 88,120 வாக்குகளைப் பெற்றார்.

    ரமேஷ் குமார் (காங்கிரஸ்): கடந்த 10 ஆண்டுகளாக இத் தொகுதியில் உறுப்பினராக உள்ளார். மீண்டும் வெற்றி பெறும் நம்பிக்கையில் தான் செய்த வளர்ச்சித் திட்டங்களை முன்னிறுத்தி பிரசாரம் செய்து வருகிறார். இருப்பினும், தொகுதி மேம்பாட்டுக்கு வழங்கப்பட்ட ரூ. 10.32 கோடியில் ரூ.3.03 கோடி மட்டுமே செலவிட்டார் என்ற புகார் கூறப்படுகிறது. தான் சார்ந்த் ஜாட் சமூகத்தின் வாக்குகளை குறித்து வைத்து பிரசாரம் செய்து வருகிறார்.

    ரமேஷ் பிதூரி (பாஜக): மூன்றாவது முறை தொடர்ந்து துக்ளகாபாத் சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரமேஷ் பிதூரி, இம்முறை மீண்டும் உற்சமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். குஜ்ஜர் சமூகத்தைச் சேர்ந்த இவர், அச் சமூகத்தினரின் வாக்குகளை குறிவைத்தும், மோடி தலைமையில் நல்லாட்சி தருவோம் என்று நம்பிக்கையூட்டியும் பிரசாரம் செய்து வருகிறார். இவர் மீது 6 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது இவருக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

    தேவேந்தர் ஷெராவத் (ஆம் ஆத்மி): ஐ.ஐ.டி. ஆமதாபாத்தில் பயின்றவர் தேவேந்தர் ஷெரவாத். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் ஆம் ஆத்மி கட்சிச் சார்பில் பிஸ்வாஸன் தொகுதியில் போட்டியிட்டு 2,414 வாக்குள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். ஊழல் ஒழிப்பு, ஆம் ஆத்மியின் 49 நாள் ஆட்சி, அரசியல் மாற்றம் உள்ளிட்டவற்றை முன்னிறுத்தி பிரசாரம் செய்து வருகிறார்.

    இத் தொகுதியில் மொத்தம் உள்ள 42 கிராமங்களின் 18 கிராமங்களில் ஜாட் சமூகத்தினரும், 12 கிராமங்களில் குஜ்ஜர் சமூகத்தினரும் பெரும்பான்மையாக உள்ளனர். இவ்விரு சமூகங்களும் இத் தொகுதியில் வெற்றி, தோல்விகளை தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

    படங்கள்: டி.ராமகிருஷ்ணன்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai