Enable Javscript for better performance
தெலங்கானா விவகாரம்: மத்திய அமைச்சரவையில் இருந்து கே.எஸ். ராவ் விலகல்- Dinamani

சுடச்சுட

  

  தெலங்கானா விவகாரம்: மத்திய அமைச்சரவையில் இருந்து கே.எஸ். ராவ் விலகல்

  By புது தில்லி,  |   Published on : 04th April 2014 12:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தெங்கானா தனி மாநிலத்தை உருவாக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆந்திரத்தைச் சேர்ந்த மத்திய ஜவுளித் துறை அமைச்சர் கே.எஸ். ராவ் தனது பதவியை வியாழக்கிழமை ராஜிநாமா செய்தார். இதற்கான கடிதத்தை பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து அவர் நேரில் அளித்தார்.

  இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவது தொடர்பாகவும் கே.எஸ். ராவ், தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்து வருகிறார்.

  ஆந்திரப் பிரதேச மாநிலத்தை பிரித்து தனித் தெலங்கானா மாநிலம் அமைக்கும் சட்டத்தை கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய அரசு நிறைவேற்றியது. அதைத் தொடர்ந்து தனி மாநில உருவாக்கம் தொடர்பான குழுவையும் மத்திய அரசு அண்மையில் நியமித்து பணிகளைத் தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில், தெலங்கானா மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை கடந்த பிப்ரவரி முதல் வாரத்தில் ஒப்புதல் தெரிவித்தது. இதை ஆந்திரத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மத்திய அமைச்சர்களில் ஒரு பிரிவினர் கடுமையாக எதிர்த்தனர். இருப்பினும், கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரண்டிலும் தெலங்கானா மசோதா நிறைவேற்றப்பட்டது.

  இதையடுத்து, ஒருங்கிணைந்த ஆந்திரத்தை வலியுறுத்தி வந்த அமைச்சர்களில் ஒருவரான புரந்தேஸ்வரி, தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ததுடன் காங்கிரஸில் இருந்தும் விலகினார். அதே வேகத்தில் அவர் பாஜகவில் உறுப்பினராகச் சேர்ந்தார்.

  முன்னதாக, தெலங்கானாவுக்கு எதிரான போராட்டத்தில் புரந்தேஸ்வரியுடன் சேர்ந்து மத்திய அமைச்சர் பல்லம் ராஜு, இணை அமைச்சர் சிரஞ்சீவி உள்ளிட்டோரும் இணைந்து செயல்பட்டு வந்தனர். இந் நிலையில், புரந்தேஸ்வரி பாஜகவில் சேர்ந்ததால், தெலங்கானா அதிருப்தி அமைச்சர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் வியாழக்கிழமை காலையில் திடீரென தான் வகித்து வந்த மத்திய ஜவுளித் துறை அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்யும் கடிதத்தை பிரதமரிடம் ராவ் அளித்தார். இதையடுத்து, உடனடியாக தன்னை பணியில் இருந்து விடுவிக்கும்படியும் அவர் பிரதமரைக் கேட்டுக் கொண்டார்.

  ராஜிநாமா ஏன்?: பின்னர் செய்தியாளர்களிடம் கே.எஸ். ராவ் கூறியது: தெலங்கானா விவகாரத்தில் அதிருப்தி அமைச்சர்களின் கருத்தை மதிக்கவும், ஆந்திர மக்களின் உண்மையான உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவும் மத்திய அரசு தவறி விட்டது. தனி மாநிலத்தை பிரிக்க உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை.

  பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது தர்மசங்கடத்தை ஏற்படுத்தக் கூடாது என்ற ஒரே காரணத்துக்காக அமைச்சரவையில் தொடர்ந்து நீடித்து வந்தேன். மத்திய அரசின் தெலங்கானா தனி மாநிலக் கொள்கையில் எனக்கு உடன்பாடு கிடையாது. அந்த வகையில் விருப்பமில்லாத அமைச்சரவையில் நீடிப்பதும் சரியாக இருக்காது.

  ஆகவே, எனது பதவியை ராஜிநாமா செய்து விட்டேன். எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் எண்ணம் எனக்கு இல்லை. அண்மையில் ராஜ்நாத் சிங்கை சந்தித்துப் பேசினேன். ஆனால், அதன் விவரங்களை இப்போதைக்குத் தெரிவிக்க விரும்பவில்லை. எனது ஆதரவாளர்கள் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அல்லது தெலுங்கு தேசம் கட்சியில் சேரும்படி அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால், எதைப் பற்றியும் இப்போதைக்கு நான் முடிவு செய்யவில்லை என்றார் கே.எஸ். ராவ்.

  1984-ஆம் ஆண்டில் முதன்முறையாக காங்கிரஸ் சார்பில் மக்களவைக்கு கே.எஸ். ராவ் தேர்வானார். அதைத் தொடர்ந்து, 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஐந்தாவது முறையாக உறுப்பினரானார். 2013-ஆம் ஆண்டு ஜுன் மாதம் மத்திய அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டது. அதில், கே.எஸ். ராவின் நாடாளுமன்ற பணியைக் கௌரவிக்கும் வகையில் அவருக்கு கேபினட் அமைச்சர் பதவியை மன்மோகன் சிங் வழங்கினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai