Enable Javscript for better performance
முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார் கேஜரிவால்- Dinamani

சுடச்சுட

    

    முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார் கேஜரிவால்

    By புது தில்லி,  |   Published on : 04th April 2014 12:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    "ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் தனது கருத்தை அடிக்கடி மாற்றிக் கூறி வருகிறார்; அவரது பேச்சு முன்னுக்குப்பின் முரணாக உள்ளது' என்று தில்லி பிரதேச மூத்த பாஜக தலைவர் வி.கே. மல்ஹோத்ரா விமர்சித்துள்ளார்.

    "பிரதமராக வந்த பிறகு இயற்கை எரிவாயு விலையை உயர்த்த மாட்டேன் என்று நரேந்திர மோடி எழுத்துப்பூர்வ வாக்குறுதி அளித்தால் பாஜகவில் சேருவேன்' என்று தேர்தல் பிரசாரத்தின்போது அரவிந்த் கேஜரிவால் பேசியதாகக் கூறப்படுகிறது.

    பிறகு, "நான் அவ்வாறு கூறவில்லை. எனது கருத்து ஊடகங்களில் திரித்து வெளியிடப்பட்டது. பாஜக, காங்கிரஸ் போன்ற கட்சிகளில் ஒருபோதும் சேர மாட்டேன்' என்று கேஜரிவால் மறுப்பு தெரிவித்தார். இந்நிலையில், "அரவிந்த் கேஜரிவாலின் கருத்து முன்னுக்குப் பின் முரணாக உள்ளது' என்று தில்லி பிரதேச மூத்த பாஜக தலைவர் வி.கே. மல்ஹோத்ரா விமர்சித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது: தேர்தல் பிரசாரத்தின்போது அரவிந்த் கேஜரிவால் ஒரு கருத்தைக் கூறினார். பின்னர், ஐந்து மணி நேரங்களுக்குப் பிறகு தான் அப்படி கூறவில்லை என்று அந்தர்பல்டி அடிக்கிறார். அவர் தனது கருத்தை அடிக்கடி மாற்றிக்கூறுவதைப் பார்த்தால் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற விரும்புகிறார் என்று நினைக்கிறேன்.

    பதவியேற்ற பிறகும், இதேபோன்றுதான் அவர் அந்தர்பல்டி அடித்தார். தில்லியில் அரசு அமைக்க காங்கிரஸ் ஆதரவை நாடவில்லை என்று கூறினார். அதேபோன்று, அரசுக் குடியிருப்பையும், பாதுகாப்பையும் கோர மாட்டேன் என்று கூறிவந்த அவர், முதல்வராகப் பதவியேற்ற பிறகு அந்த இரு வசதிகளையும் ஏற்றுக் கொண்டார். தனது அமைப்புக்காக ஃபோர்டு பவுண்டேஷன் நிறுவனத்திடம் இருந்து நிதி ஏதும் பெறவில்லை என்று கூட அவர் கூறிவந்தார். ஆனால், பிறகு குட்டு வெளிப்பட்ட பிறகு அதை ஒப்புக்கொண்டார்.

    அவரது சொல்லுக்கும், செயலுக்கும் பெரிய வித்தியாசமும், முரண்பாடும் உள்ளது. தில்லியில் ஆட்சி அமைத்த 49 நாள்களுக்குப் பிறகு ஆட்சியில் இருந்து ஓடிவிட்ட கேஜரிவால் போன்ற அராஜகப் பேர்வழிக்கு பாடம் புகட்ட தில்லி மக்கள் தயாராகி விட்டார்கள் என்றார் வி.கே. மல்ஹோத்ரா.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai