Enable Javscript for better performance
வாக்களிக்கத் தகுதியானவர்கள் 81.46 கோடி பேர்- Dinamani

சுடச்சுட

    

    நாடு முழுவதும் இந்த மாதம் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் மொத்தம் 81,45,91,184 பேர் வாக்களிக்கத் தகுதியானவர்கள் என்று தேர்தல் ஆணையம் கண்டறிந்துள்ளது. மக்களவைத் தேர்தல் நடைபெறுவதையொட்டி, இந்த ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி நிலவரப்படி உள்ள மொத்த வாக்காளர்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் அடங்கிய கையேட்டை தலைமைத் தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை தில்லியில் வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

    நாட்டில் உள்ள 28 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றில் மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கும் 9 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் எஸ்சி பிரிவினருக்கு 79 தொகுதிகள், எஸ்டி பிரிவினருக்கு 41 தொகுதிகள் என மொத்தம் 120 தொகுதிகள் தனித் தொகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

    இதன்படி நாட்டில் மொத்தம் 81,45,91,184 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இதில் ஆண்கள் 42,66,51,513 பேர் ஆண்கள் (52.40%), பெண்கள் 38,79,11,330 பேர் (47.60%), மற்றவர்கள் 28,341 பேர் (0.018%) உள்ளனர்.

    தமிழகம்: தமிழகத்தில் மொத்தம் 39 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் திருவள்ளூர், காஞ்சீபுரம், விழுப்புரம், நீலகிரி, சிதம்பரம், நாகப்பட்டினம், தென்காசி ஆகிய 7 தொகுதிகள் தனித் தொகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மொத்தம் 5,37,52,682 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் கண்டறிந்துள்ளது. இது நாட்டில் உள்ள மொத்த வாக்காளர்களில் 6.99 சதவீதமாகும். இவர்களில் ஆண்கள் 2,68,93,009 பேர், பெண்கள் 2,68,56,677 பேர், மற்றவர்கள் 2,996 பேர் உள்ளனர். பெண்களை விட ஆண் வாக்காளர்கள் 36,332 பேர் அதிகம் உள்ளனர்.

    புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் புதுச்சேரி மக்களவைத் தொகுதி ஒன்றுதான் உள்ளது. இத் தொகுதியில் மொத்தம் 8,85,458 வாக்காளர்கள் உள்ளனர். இதில் நாட்டில் உள்ள மொத்த வாக்காளர்களில் 0.109 சதவீதமாகும். இவர்களில் ஆண்கள் 4,24,958 பேர், பெண்கள் 4,60,488 பேர், மற்றவர்கள் 12 பேர் உள்ளனர். இதில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் 35,530 பேர் அதிகம் உள்ளனர்.

    தில்லி: தில்லியில் 70 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய 7 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் வடகிழக்கு தில்லி தொகுதி எஸ்சி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டு தனித் தொகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தில்லியில் மொத்தம் 1,20,60,493 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணையம் கண்டறிந்துள்ளது. இது நாட்டில் உள்ள மொத்த வாக்காளர்களில் 1.48 சதவீதமாகும். இவர்களில் 66,84,476 பேர் ஆண்கள், 53,75,379 பேர் பெண்கள், மற்றவர்கள் 638 பேர் உள்ளனர். பெண்களை விட ஆண் வாக்காளர்கள் 13,09,097 பேர் அதிகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    பெண்கள் அதிகம்-புதுச்சேரி முன்னிலை: நாட்டில் உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ள பட்டியலில் புதுச்சேரி (52%-48%) முன்னிலை வகிக்கிறது. இதற்கு அடுத்தபடியாக கேரளம் (51.9%-48.1%), மணிப்பூர் (51.0%-49.1%), மிúஸாரம் (50.9%-49.10%), டாமன் அண்ட் டையு (50.50%-49.50%), மேகலாயம் (50.40%-49.60%), கோவா (50.10%-49.90%)),அருணாசலப் பிரதேசம் (50.10%-49.90%) ஆகியவை உள்ளன. நாட்டில் மொத்த வாக்காளர்களில் 19 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 79,14,29,888 பேர் உள்ளனர். இது 97.20% சதவீதமாகும். 18-19 வயதுக்குள்பட்டவர்கள் 2,31,61,296 பேர் உள்ளனர். இது மொத்த வாக்காளர்களில் 2.8 சதவீதமாகும்.

    தமிழகத்தில் 19 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 5,25,53,373 பேர் உள்ளனர். இது மாநில மொத்த வாக்காளர்களில் 97.80 சதவீதமாகும். 18-19 வயதுக்குள்பட்ட வாக்காளர்கள் 1,18,33,660 பேர் உள்ளனர். இது 2.80 சதவீதமாகும். 19 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் புதுச்சேரியில் 8,56,271 பேர் (96.70%), தில்லியில் 1,18,33,660 பேர் (98.10%) உள்ளனர். 18-19 வயதுக்குள்பட்டவர்கள் புதுச்சேரியில் 29,187 பேர் (3.30%), தில்லியில் 2,26,833 பேர் (1.90%) உள்ளனர்.

    புதிதாக சேர்ந்தவர்கள்: நாடு முழுவதும் 2,31,61,296 வாக்காளர்கள் புதிதாக வாக்காளர்கள் பட்டயிலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் ஆண்கள் 1,35,64,730 பேர் (57.40%), பெண்கள் 95,92,389 பேர் (41.40%), மற்றவர்கள் 4,177 பேர் (0.018%) உள்ளனர்.தமிழகத்தில் 11,99,309 பேர் புதிதாகச் சேர்ந்துள்ளனர். இதில் ஆண்கள் 6,92,597 பேர் (57.70%), பெண்கள் 5,06,588 பேர் (42.20%), மற்றவர்கள் 124 பேர் (0.010%) உள்ளனர். புதுச்சேரியில் 29,187 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் ஆண்கள் 15,501 பேர் (53.10%), பெண்கள் 13,685 பேர் (46.90%), மற்றவர் ஒருவர் (0.003%) உள்ளனர்.

    தில்லியில் 2,26,833 வாக்காளர்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் ஆண்கள் 1,38,484 பேர் (61.10%), பெண்கள் 88,311 பேர் (38.90%) மற்றவர்கள் 38 பேர் (0.017%) உள்ளனர்.

    தொகுப்பு: எம்.சடகோபன்

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai