Enable Javscript for better performance
வெளிநாட்டில் உள்ள கருப்புப் பணம் மீட்கப்படும்- Dinamani

சுடச்சுட

  

  வெளிநாட்டில் உள்ள கருப்புப் பணம் மீட்கப்படும்

  By புது தில்லி,  |   Published on : 04th April 2014 12:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணம் மீட்கப்படும் என்று மக்களவைத் தேர்தலையொட்டி ஆம்ஆத்மி கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  தேர்தல் அறிக்கையை அக் கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை மாலையில் வெளியிட்டார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

  வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்க முழுமையான ஈடுபாடு வேண்டும். குறிப்பாக தேர்தல் நேரத்தில் புழக்கத்துக்கு வரும் கருப்புப் பணத்தைத் தடுக்க ரூ.20 ஆயிரத்துக்கும் குறைவாக கட்சி நிதி அளிப்பவரின் விவரங்களை அளிக்கத் தேவையில்லை என்ற வருமான வரித் துறையின் விதியை நீக்க வேண்டும். தேர்தல் நேரத்தில் அரசியல் தலைவர்கள் செலவிடும் ஒவ்வொரு ரூபாய்க்கும் அரசியல் கட்சிகள் முறையாக அதற்குரிய வரவு - செலவு விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

  வலுவான ஜன லோக்பால்:தேசிய அளவில் ஊழலை ஒழிக்க வலுவான ஜன லோக்பால் சட்டம் நிறைவேற்றப்படும். பிரதமர், மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் அச்சட்ட வரம்புக்குள் கொண்டு வரப்படுவர். உள்ளாட்சி அளவில் ஊழலை ஒழிக்க கிராம சபைகள், "மொஹல்லா' சபைகள் ஆகியவற்றுக்கு அதிகாரம் அளிக்க ஸ்வராஜ் சட்டம் நிறைவேற்றப்படும். கிராமங்களை மேம்படுத்த கிராம சபைகளுக்கு போதுமான நிதி அளிக்கப்படும்.

  சாதாரண மக்களுக்கும் நீதி: சாதாரண மக்களுக்கும் சமமான நீதி கிடைக்க தற்போதுள்ள நீதித்துறை வழிமுறைகளில் சீர்திருத்தம் செய்யப்படும். கிராம நீதிமன்றங்கள் (கிராம நியாயலயா) அதிக அதிகாரத்துடன் உருவாக்கப்படும். நீதிபதிகளை தேர்வு செய்ய நீதித்துறை நியமன ஆணையம் அமைக்கப்படும். உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி காவல் துறையில் சீர்திருத்தம் செய்யப்படும்.

  தேர்தல் சீர்திருத்தம்: நாட்டில் நியாயமாகவும் வெளிப்படையாகவும் தேர்தல்களை நடத்த தேர்தல் சீர்திருத்தம் செய்யப்படும். இதற்காக, தேர்தல் ஆணையர்களை அரசு நியமிக்காமல், பல நபர் அடங்கிய அரசியல் சட்ட நிபுணர்கள் குழுவை அமைக்க வகை செய்யப்படும். தேர்தலில் வெற்றி பெறும் பிரதிநிதிகளைத் திரும்பப் பெறும் சட்டம் (ரைட் டு ரீகால்), பிரதிநிதிகளை நிராகரிக்கும் (ரைட் டு ரிஜெக்ட்) ஆகிய வாய்ப்புகள் அறிமுகப்படுத்தப்படும்.

  கல்வி, சுகாதாரம்: நாட்டின் பொது சுகாதாரம் வலுப்படுத்தப்படும். சாதாரண மக்களுக்கும் தரமான மருத்துவம் உள்ளிட்ட சுகாதார வசதிகள் கிடைக்க வகை செய்யப்படும். ஆரம்பர சுகாதார நிலையம் முதல் அரசுத் தலைமை மருத்துவமனை வரை அத்தியாவசிய மருந்துப் பொருள்கள் இருப்பில் வைக்கப்படும். "ஆயுஷ்' (ஆயுர்வேத, யோகா, நேச்சுரோபதி, யுனானி, சித்தா, ஹோமியாபதி) துறை மேம்படுத்தப்படும். நாட்டின் பாரம்பரிய மருத்துவம் ஊக்குவிக்கப்படும். தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்கும் வகையில் அரசு கல்வி நிறுவனங்களில் சர்வதேச தரத்துக்கு இணையாக கல்வித் தரம் மேம்படுத்தப்படும். ஐஐடி, எய்ம்ஸ் போன்ற கல்வி நிறுவனங்கள் அனைத்து மாநிலங்களிலும் உருவாக்கப்படும்.

  பொருளாதாரம், சூழலியல்: எல்லா குடிமக்களுக்கும் உணவு, குடியிருப்பு, கல்வி, சுகாதாரம், மின்சாரம், குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை நிர்ணியிக்கப்படும். அது தொடர்பான எம்.எஸ். சுவாமிநாதன் பரிந்துரைகள் அமல்படுத்தப்படும். இளைஞர், விவசாயிகள் நலன் பாதுகாக்கப்படும்.

  புதிய தொழில் முனைவோருக்கு ஊக்கம் அளித்து புதிய வாய்ப்புகள் உருவாக்கப்படும். நகரங்களுக்கு இணையாக கிராமப்புறங்களில் அனைத்து அடிப்படை வசதிகளும் உருவாக்கப்படும். அன்னிய நேரடி முதலீட்டை முற்றிலுமாக எதிர்க்க வேண்டியதில்லை. ஆனால், அவை அனுமதிக்கும் துறைகளைப் (சில்லறை வர்த்தகம்) பொருத்தே எங்களுடைய எதிர்ப்பு அமைகிறது. இயற்கை வளங்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். கனிமங்கள், தாதுக்கள், தண்ணீர், வனம் உள்ளிட்டவை அரசின் கட்டுப்பாட்டில் வைக்கப்படும். சிறிய அளவிலான இயற்கை வளங்களின் அதிகாரங்கள் உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். மத்திய சுற்றுப்புற சூழல் துறையில் சீர்திருத்தம் செய்யப்படும்.

  நிலம் கையகப்படுத்தும் சட்டம்: நாட்டில் பல்வேறு அரசு, தனியார் திட்டங்களுக்கு விவசாயிகளின் நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன. இதில் விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் நிலம் கையகப்படுத்தும் சட்டம் திருத்தப்படும்.

  ஒப்பந்த பணியாளர்கள்: நாடு முழுவதும் அரசு, தனியார் துறைகளில் உள்ள ஒப்பந்த பணியாளர்கள் முறை முடிவுக்குக் கொண்டு வரப்படும். குறிப்பாக மருத்துவர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள், சுகாதார ஊழியர்கள் உள்ளிட்ட ஒப்பந்த பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர். குறைந்தபட்ச ஊதிய முறை கடுமையாக அமல்படுத்தப்படும். அமைப்புசாரா தொழிலாளர்களின் நலன் பாதுகாக்கப்படும்.

  விலைவாசி உயர்வு: விலைவாசி உயர்வால் ஏற்படும் பாதிப்பிலிருந்து சாதாரணமானவர்கள் பாதுகாக்கப்படுவர். அத்தியாவசியப் பொருள்களின் விலை கட்டுப்பாட்டில் வைக்கப்படும். பதுக்கல் செய்வோருக்கு கடும் தண்டணை அளிக்கப்படும். அத்தியாவசிய உணவுப் பொருள்களை பொது விநியோக முறையில் வழங்குவதற்கான நடவடிக்கை வலுப்படுத்தப்படும்.

  மத நல்லிணக்கம்: மதச்சார்ப்பின்மை கடைப்படிக்கப்பட்டு, அனைத்து மதத்தினரும் அமைதியாகவும், சகோதரத்துவத்துடனும் வாழ மத நல்லிணக்கம் பேணப்படும்.சிறுபான்மையினர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோரின் நலன்கள் பாதுகாக்கப்படும்.

  பாதுகாப்பு: பயங்கரவாதத் தாக்குதல் உள்ளிட்ட அச்சுறுத்தல்களை முறியடிக்க நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். அதற்காக முப்படைகளின் ஒருங்கிணைப்பும், ராணுவம், அரசு நிர்வாகம், அரசியல் தலைமை ஆகிவற்றுக்கு இடையே ஒருங்கிணைப்பு உருவாக்கப்படும். உள்நாட்டு பாதுகாப்பு மேம்படுத்தப்படும். அனைத்து நாடுகள், அண்டை நாடுகள் ஆகியவற்றுடன் நட்புறவைப் பேணும் வகையில் வலுவான வெளியுறவுக் கொள்கை உருவாக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் ஆம்ஆத்மி கூறியுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai