Enable Javscript for better performance
அயோத்தி சம்பவம் திட்டமிட்ட நிகழ்வு: கோப்ரா போஸ்ட்- Dinamani

சுடச்சுட

    

    அயோத்தி சம்பவம் திட்டமிட்ட நிகழ்வு: கோப்ரா போஸ்ட்

    By புது தில்லி,  |   Published on : 05th April 2014 12:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அயோத்தி பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தை முன்கூட்டியே பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அறிந்திருந்தனர்; அது திட்டமிட்டு நடத்தப்பட்ட நிகழ்வு' என்று "கோப்ரா போஸ்ட்' என்ற புலனாய்வு இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது.

    பாபர் மசூதி இடிப்பு சம்பவம் தொடர்பான தனது புலனாய்வு பதிவுகளை அந்த இணையதளம் கண்டறிந்துள்ளதை விளக்கி புது தில்லியில் இணையதள ஆசிரியர் அனிருத் பெஹல் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:

    "1992, டிசம்பர் 6-ஆம் தேதி அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அந்த சம்பவம் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டதாகும். அதற்கான ஆதாரங்களை கடந்த இரண்டு ஆண்டுகளாகத் திரட்டினோம். கடந்த 22 ஆண்டுகளாக சிபிஐ கண்டுபிடிக்க முடியாத பல தகவல்களை நாங்கள் கண்டறிந்துள்ளோம்.

    ராமஜன்ம பூமி இயக்கம், விஎச்பி, ஆர்எஸ்எஸ், பஜ்ரங் தளம், பாஜக ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த ரமேஷ் பிரதாப் சிங், வினய் கட்டியார், தர்மேந்திர சிங் குர்ஜர், உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங், உமாபாரதி உள்ளிட்ட 23 தலைவர்களை "கோப்ரா போஸ்ட்' ஆசிரியர் குழுவைச் சேர்ந்த ஆசிஷ் நேரில் சந்தித்து அயோத்தி சம்பவம் தொடர்பான தகவல்களை சேகரித்தார்.

    ஆர்எஸ்எஸ், பாஜக உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த அசோக் சிங்கல், வினய் கட்டியார், வி.எச். டால்மியா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்ற ரகசியக் கூட்டம் 1992-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி அயோத்தியின் இந்து தாம் என்ற இடத்தில் நடைபெற்றது.

    அதேபோல் ஹனுமான் பாக் என்ற இடத்தில் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக இடையே நடைபெற்ற ரகசியக் கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் சார்பில் எச்.வி.சேஷாத்ரி, பாஜக சார்பில் மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, உமா பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    அப்போதைய உத்தர பிரதேச முதல்வராக இருந்த கல்யாண் சிங், பாபர் மசூதி இடிக்கப்படும் சம்பவத்தை அறிந்திருந்தார். சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கு கலவரம் வெடித்தபோது, ராணுவ நடவடிக்கைகள் எடுப்பதில் தொய்வு காணப்பட்டது. மேலும், அப்போது பிரதமராக இருந்த பி.வி. நரசிம்ம ராவ் இதற்கு உடந்தையாக செயல்பட்டதை விளக்கும் விடியோ ஆதாரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தில் உள்ள உண்மை நிலையை மக்களுக்கு தெரிவிக்கவே இம் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். மக்களவைத் தேர்தலுக்கும் இப்போது விடியோ ஆதாரங்களை வெளியிட்டதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது' என்றார் அனிருத் பெஹல்.

    தமிழகத்தில் பயிற்சி: பாபர் மசூதி இடிப்பு சம்பவத்துக்கு முன்பாக, கரசேவகர்களுக்கு ஆர்எஸ்எஸ், விஎச்பி உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் தமிழ்நாடு, மத்திய பிரதேசம், குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழகத்தில் கே. நாகராஜன் என்பவர் பயிற்சி அளித்ததாக கோப்ரா போஸ்ட் ஒளிபரப்பிய விடியோ ஆதாரத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்த விடியோவில் நாகராஜன் இடம்பெறவில்லை.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai