Enable Javscript for better performance
கவர்ச்சிகர முதலீட்டுத் திட்டம் மூலம் பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் மோசடி- Dinamani

சுடச்சுட

    

    கவர்ச்சிகர முதலீட்டுத் திட்டம் மூலம் பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் மோசடி

    By புது தில்லி,  |   Published on : 05th April 2014 12:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    "கவர்ச்சிகர முதலீட்டுத் திட்டத்தில் சேர்ந்தால் பல மடங்கு பணம் கிடைக்கும்' என்று ஆசை வார்த்தை கூறி பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக பெங்களூரைச் சேர்ந்த தனியார் நிறுவன நிர்வாகியை தில்லி போலீஸார் கைது செய்தனர்.

    இதுகுறித்து தில்லி காவல் துறையின் அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை கூறியதாவது: "இண்டஸ் கார் அண்ட் ஏர் ரென்டல்ஸ் இன்டியா லிமிட்டெட்' என்ற பெயரிலான நிறுவனத்தின் முதலீட்டுத் திட்டத்தில் சேர்ந்தால் அதிகப் பணம் தருவதாகக் கூறி பெரும் தொகை மோசடி செய்யப்பட்டுள்ளதாக தில்லியின் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாருக்குப் புகார் வந்தது. இதையடுத்து, விசாரணை நடத்தப்பட்டது.

    "பெங்களூரைச் சேர்ந்த எஸ்.ஆர். நந்தன் (எ) ரமேஷ் (எ) ரமேஷ் பாபு மற்றும் அவரது கூட்டாளிகள் விமல், அகர்வால், கமல் காந்த் கௌசிக், ராம் குமார் ஆகியோர் சேர்ந்து மேற்கண்ட நிறுவனத்தைத் தொடங்கி கிளைகளை நாட்டின் பல இடங்களிலும் ஆரம்பித்தனர்.

    மேலும், பரஸ்பர நிதி வளர்ச்சித் திட்டத்தில் முதலீடு செய்தால் பல மடங்கு பணம் கிடைக்கும் என்று இணையதளத்திலும் செய்தித் தாள்களிலும் கவர்ச்சிகர விளம்பரங்கள் செய்தனர்.

    இத் திட்டத்தில் ரூ. 1.25 லட்சம் முதலீடு செய்தால் 5 ஆண்டுகளில் திரும்ப ரூ. 5.45 லட்சம் கிடைக்கும் என்றும், மாதம்தோறும் ரூ. 8,200 முதல் ரூ. 36,500 வரை உறுயளிக்கப்பட்ட தொகை கிடைக்கும் என்றும் கூறப்பட்டது. திட்ட முதிர்வுத் தொகைக்கான முன் தேதியிட்ட காசோலைகளையும் அவர்கள் வழங்கினர்.

    இதையடுத்து, பலரும் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். தொடக்கத்தில் சிலருக்கு வங்கிக் காசோலைகள் மூலம் பணம் தரப்பட்டது. ஆனால், முதலீடு செய்த பலருக்கு திடீரென முதிர்வுத் தொகை கிடைக்கவில்லை. இதையடுத்து, நிறுவனத்திடம் அவர்கள் முறையிட்டனர்.

    அப்போது வட்டியுடன் தரக்கூடிய வகையில் மறு உடன்பாட்டை வாடிக்கையாளர்களிடம் நிறுவனம் மேற்கொண்டது. ஆனாலும், சில மாதங்களுக்குப் பிறகு அந்தத் தொகையும் திரும்ப வழங்கப்படவில்லை. இதனால், தில்லி நேரு பிளேஸில் உள்ள சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எஸ்.ஆர். நந்தன் உள்ளிட்டோர் பணம் மோசடி செய்துவிட்டதாக தில்லி பொருளாதார குற்றப் பிரிவு போலீஸில் சுமார் 150 பேர் புகார் அளித்தனர்.

    இதைத் தொடர்ந்து பொருளாதார குற்றப் பிரவு போலீஸார் வழக்குப் பதிந்து நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எஸ்.ஆர். நந்தனை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதனிடையே, அவர் தலைமறைவாகிவிட்டதால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். சில மாதங்களாக அவரை போலீஸார் தேடி வந்தனர். இந் நிலையில், மார்ச் 29-ஆம் தேதி அவரை தில்லி பொருளாதார குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

    அவர் எம்.பி.ஏ. பட்டதாரி என்பதும், நிறுவனத்தில் சுமார் 900 பேர் ரூ. 15 கோடி வரை முதலீடு செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. அந் நிறுவனத்தின் பங்குதாரர்கள் விமல் அகர்வால், கமல் காந்த் கௌசிக், ராம் குமார் பாடக், ஆகியோரையும் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்று அந்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai