Enable Javscript for better performance
போலி பாஸ்போர்ட் தயாரித்த நைஜீரியர்கள் 3 பேர் கைது - Dinamani

சுடச்சுட

    

    போலி பாஸ்போர்ட் தயாரித்த நைஜீரியர்கள் 3 பேர் கைது

    By புது தில்லி,  |   Published on : 05th April 2014 12:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    போலி பாஸ்போர்ட், விசாக்கள் தயாரித்து சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்த நைஜீரிய நாட்டைச் சேர்ந்த மூன்று பேரை தில்லி போலீஸார் கைது செய்தனர்.

    இது குறித்து தில்லி போலீஸ் தனிப் பிரிவு துணை ஆணையர் சஞ்சீவ் குமார் யாதவ், மத்திய தில்லி போலீஸ் துணை ஆணையர் அலோக் குமார் ஆகியோர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

    தில்லியில் வசித்துவரும் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த கெல்வின் (எ) இபாய் (28) மற்றும் இபிடோராகோ மெல்வில் (53) ஆகிய இருவரும் இணைந்து பல ஆப்பிரிக்க நாடுகளின் போலி பாஸ்போர்டுகள் மற்றும் இந்திய விசா ஸ்டிக்கர்களைத் தயாரித்து முறைகேடான செயல்களில் ஈடுபடுவதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, அவர்களைத் தொடர்ந்து கண்காணித்தோம். அதில், நகரின் பல பகுதிகளில் அவர்கள் வைத்திருந்த தொடர்புகளைக் கண்டறிந்தோம். இருவரும் கடந்த மார்ச் 19-ஆம் தேதி தாங்கள் வைத்திருந்த போலி பாஸ்போர்ட் மற்றும் விசாக்களை துவாரகா செக்டார் 13 மற்றும் 3 ஆகிய இடங்களுக்கு மாற்ற முயன்றனர். அப்போது, அவர்களைக் கையும் களவுமாகப் பிடித்தோம்.

    இருவரிடமும் விசாரணை நடத்தியதில் பல உண்மைகள் வெளியாகின. இருவரும் இந்தியாவில் தங்கியிருப்பதற்கான "விசா' காலம் முடிந்த பிறகும் தில்லியில் சட்ட விரோதமாக தங்கியிருந்தது தெரிய வந்தது. மேலும், பல ஆப்பிரிக்க நாட்டினருக்கு போலி பாஸ்போர்ட், தயாரித்து விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

    இதன் தொடர்ச்சியாக இருவருக்கும் இடைத்தரகர் போல செயல்பட்டு வந்த நைஜீரிய நாட்டைச் சேர்ந்த மார்ட்டின்ஸ் கிளெட்டஸ் ஓக்சுக்வூ (எ) சார்லஸ் (36) என்பவரை கடந்த மார்ச் 21-ஆம் தேதி தில்லியில் கைது செய்தோம். அவரிடம் போலி வீட்டு உரிமைக்கான பத்திரங்கள், கெல்வின் மற்றும் மெல்வில்லுக்கு உதவியதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

    இதையடுத்து, தில்லியில் அவர்கள் தங்கியிருந்த ஜனக்புரி, ஆனந்த் விஹார் மற்றும் லஜ்பத் நகர் ஆகிய இடங்களில் தனிப் படையினர் சோதனை நடத்தினர். அதில், 20 போலி பாஸ்போர்ட்டுகள், இந்திய விசாக்களின் ஸ்டிக்கர்கள், இந்தியா மற்றும் நைஜீரிய நாட்டு விமான நிலையங்களின் வருகை மற்றும் புறப்பாடுகளுக்கு பயன்படுத்தப்படும் 7-ரப்பர் ஸ்டாம்ப்புகள், கணிப்பொறி, பென் டிரைவ்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன' என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai