Enable Javscript for better performance
வெற்றியை நிர்ணயிக்கும் ஜாட், சீக்கியர்கள் வாக்குகள்! - Dinamani

சுடச்சுட

  

  வெற்றியை நிர்ணயிக்கும் ஜாட், சீக்கியர்கள் வாக்குகள்!

  By புது தில்லி,  |   Published on : 05th April 2014 12:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மேற்கு தில்லி மக்களவைத் தொகுதியில் வேட்பாளரின் வெற்றியை சீக்கியர்கள், ஜாட் இனத்தவர்களின் வாக்குகள் தீர்மானிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  தில்லி பிரதேசத்தில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 10-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதுவரை ஒரே ஒரு தேர்தலை மட்டுமே சந்தித்துள்ள மேற்கு தில்லி தொகுதியில், இந்த முறை பல முனைப் போட்டி நிலவுகிறது.

  2008-ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பை தொடர்ந்து உருவானது மேற்கு தில்லி. தில்லிக்கு வெளிப்புறம் உள்ள பகுதிகள் மற்றும் தெற்கு தில்லியில் சில பகுதிகளும் இதில் அடங்கும். இத் தொகுதியில் சீக்கியர்கள், ஜாட் இனத்தைச் சேர்ந்தவர்கள் கணிசமான அளவு உள்ளனர். மேலும், தென்னிந்திய மக்கள், ஹரியாணா மாநிலத்திலிருந்து வந்தவர்கள் பெருமளவு வசித்து வருகின்றனர்.

  கடந்த 2014, ஜனவரி 31 நிலவரப்படி இத் தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 19,22,339 பேர். இதில் ஆண்கள் 10,44,480 பேர். பெண்கள் 8,77,771 பேர். மற்றவர்கள் 88 பேர் உள்ளனர். 18-19 வயதுக்குள்பட்ட வாக்காளர்கள் 37,248 பேர் உள்ளனர். அனைவருக்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

  இத்தொகுதியில் மதிப்பூர், ரஜெüரி கார்டன், ஹரி நகர், திலக் நகர், ஜனக்புரி, விகாஸ் புரி, உத்தம் நகர், துவாரகா, மட்டியாலா, நஜஃப்கர் ஆகிய 10 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.

  கடந்த 2013-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 6 இடங்களிலும், ஆம்ஆத்மி 4 இடங்களிலும் வெற்றி பெற்றன. காங்கிரஸ் ஓர் இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இதே நிலை மக்களவைத் தேர்தலின்போதும் எதிரொலிக்குமா என்பதே அரசியல் பார்வையாளர்களிடம் மேலோங்கியுள்ள கேள்வியாகும்.

  கடந்த 2009 தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மஹாபல் மிஸ்ரா 4,79,899 வாக்குகள் (54.32%) பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஜெகதீஷ் முகி 3,50,889 வாக்குகள் (39.72%) பெற்றுத் தோல்வி கண்டார்.

  இத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் மஹாபல் மிஸ்ரா, பாஜக சார்பில் பர்வேஸ் சாகிப் சிங் வர்மா, ஆம்ஆத்மி சார்பில் ஜர்னைல் சிங், பகுஜன் சமாஜ் சார்பில் ராஜ்பால் சிங், சுயேட்சைகள் 4 பேர் உள்பட 14 பேர் இத் தொகுதியில் களம் காண்கின்றனர்.

  இத் தொகுதியில் பல இடங்களில் குடிநீர், கழிவுநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகள் தீர்க்கப்படாமல் அதிருப்தியில் உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், சாலைப் போக்குவரத்து சரிவர பராமரிக்கப்படவில்லை என்ற குறைபாடும்உள்ளது.

  இப் பிரச்னைகள் அனைத்தும் மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  மஹாபல் மிஸ்ரா (காங்கிரஸ்): இத் தொகுதியின் தற்போதைய எம்பியான மஹாபல் மிஸ்ராவையே காங்கிரஸ் மீண்டும் களம் இறக்கியுள்ளது. எனினும், 2013-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் மேற்கு தில்லிக்கு உள்பட்ட 10 தொகுதிகளில் ஒன்றில் கூட காங்கிரஸ் வெற்றி பெறாதது அக் கட்சிக்கு பெரும் பின்னடைவைத் தந்துள்ளது. இந் நிலையில், பாஜக, ஆம்ஆத்மி ஆகியவற்றின் கடும் போட்டியையும் சந்திக்க வேண்டிய கட்டாயம் காங்கிரஸýக்கு ஏற்பட்டுள்ளது.

  பர்வேஷ் வர்மா (பாஜக): பாஜக மூத்த தலைவரும், தில்லி முன்னாள் முதல்வருமான சாகிப் சிங் வர்மாவின் மகனான பர்வேஸ், கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மெஹ்ரெüலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றார். இப்போது பாஜக சார்பில் மேற்கு தில்லி தொகுதியில் களம் இறக்கப்பட்டுள்ளார். இத் தொகுதியில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது அக் கட்சியினருக்கு கூடுதல் பலமாக உள்ளது. இதனால், எப்படியும் தொகுதியைக் கைப்பற்றும் நோக்கில் பாஜகவினர் உற்சாகமாக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

  ஜர்னைல் சிங் (ஆம்ஆத்மி): பத்திரிகையாளராக இருந்து அரசியல் களத்துக்குள் நுழைந்திருப்பவர் ஜர்னைல் சிங். கடந்த 2009-ஆம் ஆண்டு செய்தியாளர்கள் சந்திப்பின் போது மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மீது செருப்பு வீசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர். கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மேற்கு தில்லி தொகுதிக்கு உள்பட்ட திலக் நகரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இது அவருக்கு கூடுதல் பலத்தைத் தந்துள்ளது. சீக்கியரான இவருக்கு தொகுதியில் கணிசமான சீக்கியர் வாக்குகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் களத்தில் நிற்கிறார்.

  ஏற்கெனவே சட்டப்பேரவைத் தேர்தலில் 4 தொகுதிகளில் அக் கட்சி வெற்றி பெற்றது கூடுதல் பலமாகப் பார்க்கப்படுகிறது. கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவாலும் தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai