Enable Javscript for better performance
\\\"தில்லியில் 4 தொகுதிகள் வரை பாஜக கைப்பற்றும்\\\'- Dinamani

சுடச்சுட

    

    "தில்லியில் 4 தொகுதிகள் வரை பாஜக கைப்பற்றும்'

    By புது தில்லி,  |   Published on : 06th April 2014 12:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லியில் மொத்தம் உள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் தொடர்பாக தனியார் தொலைக்காட்சி நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜகவுக்கு 3-4, ஆம்ஆத்மிக்கு 2-3, காங்கிரஸýக்கு ஓர் இடம் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பிரபல ஆங்கில தனியார் 24 மணி நேர செய்தித் தொலைக்காட்சியான சிஎன்என்-ஐபிஎன் நிறுவனமும் சென்டர் ஃபார் டெவலபிங் சயின்ஸ், லோக்நிதி என்ற தேர்தல் ஆய்வு செய்யும் தனியார் அமைப்பு ஆகியவையும் அண்மையில் தில்லியில் தேர்தல் முடிவு தொடர்பாக கருத்துக் கணிப்பு நடத்தின. அதன் ஆய்வு முடிவுகள் விவரம்: "வரும் மக்களவைத் தேர்தலில் தில்லியில் பாஜகவுக்கு 40 சதவீதம், ஆம்ஆத்மி கட்சிக்கு 29 சதவீதம், காங்கிரஸýக்கு 22 சதவீதம், பகுஜன் சமாஜ் கட்சிக்கு 4 சதவீதம், பிற கட்சிகளுக்கு 5 சதவீதம் வாக்குகள் கிடைக்க வாய்ப்புள்ளது.

    தில்லியை பொருத்தவரை சாந்தினி சௌக், கிழக்கு தில்லி, புது தில்லி, வடகிழக்கு தில்லி, வடமேற்கு தில்லி, தெற்கு தில்லி, மேற்கு தில்லி ஆகிய மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இங்குள்ள 18 முதல் 25 வயதுடைய வாக்காளர்களில் 35 சதவீதத்தினர் பாஜக வெற்றி பெற வேண்டும் எனவும் 33 சதவீதத்தினர் ஆம்ஆத்மி வெற்றி பெற வேண்டும் எனவும் விரும்புகின்றனர்.

    தில்லியில் முஸ்லிம் சமுதாய வாக்காளர்கள் எல்லா தொகுதிகளிலும் பரவலாக உள்ளனர். இவர்கள் காங்கிரஸ், ஆம்ஆத்மி ஆகிய கட்சிகளுக்கு ஆதரவாக இருப்பதால் அந்த வாக்குகள் வரும் தேர்தலில் பிரிந்து விடக் கூடும். இதேபோல, தலித் சமுதாய வாக்குகளும் காங்கிரஸ், ஆம்ஆத்மி ஆகிய கட்சிகளிடையே பிரிந்துள்ளது. இவர்களிடையே நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், "காங்கிரஸýக்கு 56 சதவீதம், ஆம்ஆத்மிக்கு 36 சதவீதம், பாஜகவுக்கு 7 சதவீதம், பிற கட்சிகளுக்கு 1 சதவீதம் என்ற நிலையில் ஆதரவு உள்ளது.

    பாலின அடிப்படையில் ஆண்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பில், பாஜகவுக்கு 46 சதவீதம், ஆம்ஆத்மிக்கு 26 சதவீதம், காங்கிரஸýக்கு 19 சதவீதம், பிற கட்சிகளுக்கு 9 சதவீதம் என்ற வகையில் ஆதரவு காணப்படுகிறது.

    பெண்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பில், பாஜகவுக்கு 34 சதவீதம், ஆம்ஆத்மிக்கு 32 சதவீதம், காங்கிரஸýக்கு 25 சதவீதம் என்ற வகையில் ஆதரவு காணப்படுகிறது. தில்லியில் கடந்த டிசம்பரில் சட்டப்பேரவையைக் கைப்பற்றிய ஆம்ஆத்மி கட்சி, பதவிக்கு வந்த 49 நாள்களில் ஆட்சியில் இருந்து விலகியதை ஒரு பிரிவு மக்கள் ஏமாற்றமாகக் கருதுகின்றனர். அவர்களின் அதிருப்தி அலையும் தலைநகரில் பரவலாகக் காணப்படுகிறது.

    ஆம்ஆத்மி தலைமையின் அரசு ராஜிநாமா செய்தது தவறு என்று 47 சதவீதத்தினரும், சரி என்று 34 சதவீதத்தினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

    பிரதமர் வேட்பாளர் தொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் நரேந்திர மோடிக்கு 38 சதவீதம், கேஜரிவாலுக்கு 20 சதவீதம், ராகுல் காந்திக்கு 10 சதவீதம் ஆதரவு காணப்படுகிறது. 24 சதவீதத்தினர் தேர்தல் முடியட்டும் பார்க்கலாம் என்றவாறு கருத்து தெரிவித்துள்ளனர். மீதமுள்ளோர் எக் கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை என கூறியுள்ளனர்.

    ஒருவேளை தேர்தல் முடிந்ததும் ஆட்சி அமைக்க பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு தேவைப்பட்டால், அக் கூட்டணி அரசை ஆம்ஆத்மி ஆதரிக்க வேண்டும் என 25 சதவீதமும், பாஜகவை புறக்கணித்து காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தர வேண்டும் என 15 சதவீதம் மக்களும் கருத்து கூறியுள்ளனர்.

    மேற்கண்ட கருத்துகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வில் பாஜகவுக்கு 3-4, ஆம் ஆத்மி கட்சிக்கு 2-3, காங்கிரஸýக்கு ஓர் இடம் கிடைக்கும் எனத் தெரிய வந்துள்ளது' என கருத்துக் கணிப்பு நடத்திய நிறுவனங்கள் கூறியுள்ளன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai