Enable Javscript for better performance
வடமேற்கு தில்−யில் முத்திரை பதிப்பது யார்?- Dinamani

சுடச்சுட

    

    சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கிய வடமேற்கு தில்லி மக்களவை தனித் தொகுதியில் முத்திரை பதிக்கப் போவது யார் என்பதுதான் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படும் விஷயம்.

    கிராமங்கள், பல மறுகுடியேற்ற காலனிகளை உள்ளடக்கிய இத் தொகுதியில், சட்டம் - ஒழுங்கு பிரச்னை, நிலம் கையகப்படுத்தலுக்கான இழப்பீடு வழங்குதல், குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் உள்ளிட்டவற்றில் பிரச்னைகள் உள்ளதாகப் பேசப்படுகிறது.

    இங்கு நரேலா, பாட்லி, ரிடாலா, பவானா, முன்ட்கா, கிராரி, சுல்தான் பூன் மஜ்ரா, நாங்லாய் ஜாட், மங்கோல்புரி, ரோஹிணி ஆகிய 10 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் பாஜக 5, காங்கிரஸ், ஆம்ஆத்மி தலா 2-இல் வெற்றி பெற்றன. ஒரு சுயேச்சை வெற்றி பெற்றார்.

    போட்டிக் களத்தில் முக்கிய வேட்பாளர்களாக பாஜகவின் டாக்டர் உதித் ராஜ், காங்கிரஸின் கிருஷ்ணா தீரத், ஆம்ஆத்மியின் ராக்கி பிர்லா, பகுஜன் சமாஜ் கட்சியின் பசந்த் பன்வர் ஆகியோர் உள்ளனர்.

    கிருஷ்ணா தீரத்: இத் தொகுதியின் மக்களவை உறுப்பினரான கிருஷ்ணா தீரத் மீண்டும் காங்கிரஸ் சார்பில் களம் காண்கிறார்.

    முஸ்லிம்கள், நலிவடைந்த பிரிவினர் ஆகியோரின் வளர்ச்சிக்குப் பாடுபட்டுள்ளதையும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றியுள்ளதையும் மக்களிடம் கூறி நம்பிக்கையுடன் களத்தில் உள்ளார்.

    டாக்டர் உதித் ராஜ்: அண்மையில் பாஜகவில் இணைந்த டாக்டர் உதித் ராஜ், எஸ்.சி., எஸ்.டி. சம்மேளனத்தின் தலைவராவார். வருமான வரித் துறையில் ஐ.ஆர்.எஸ். அதிகாரியாக பணியாற்றிய இவர், கேஜரிவாலை கடுமையாக விமர்சித்து வருபவர்.

    தொகுதியில் உள்ள 1,700 வாக்குச் சாவடிக்குள்பட்ட பகுதிகளில் சுமார் 21 லட்சம் வாக்காளர்களைச் சென்றடையும் வகையில் பல்வேறு பிரசாரக் குழுக்களை அமைத்து நம்பிக்கையுடன் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார்.

    ராக்கி பிர்லா: மங்கோல்புரி சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆம்ஆத்மி கட்சியின் பெண் வேட்பாளர் ராக்கி பிர்லா, முன்னாள் பத்திரிகையாளர்.

    இத் தொகுதியில் அக்கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மகேந்தர் சிங், போட்டியிலிருந்து விலகியதால் ராக்கி பிர்லா நிறுத்தப்பட்டுள்ளார். தில்லி சட்டப்பேரவையின்போது கிடைத்த மக்கள் ஆதரவு இப்போதும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வீடு வீடாக வாக்கு சேகரித்து வருகிறார்.

    அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதி: 2008-ஆம் ஆண்டு மக்களவைத் தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகு தில்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளில் வடமேற்கு தில்லி தொகுதிதான் அதிக வாக்காளர்களைக் கொண்டதாகத் திகழ்கிறது.

    2013, டிசம்பர் நிலவரப்படி இத் தொகுதியில் வாக்களிக்கத் தகுதியானவர்கள் 20,72,202 என தேர்தல் ஆணையம் கண்டறிந்துள்ளது. இதில் ஆண்கள் சுமார் 14.11 லட்சம் பேர், பெண்கள் சுமார் 9.81 லட்சம் பேர் உள்ளனர். இத் தொகுதியில் அதிகபட்சமாக தலித் வாக்காளர்கள் 21 சதவீதம் பேர் உள்ளனர். தொகுதி மக்கள் தொகையில் சுமார் 16 சதவீதம் ஜாட் இனத்தவர்கள் 16 சதவீதம், பிராமணர்கள் 12 சதவீதம், பனியா சமூகத்தினர் 10-11 சதவீதம், இதர பிற்பட்ட சமூகத்தினர் 20 சதவீதம், முஸ்லிம்கள் 5-8 சதவீதம் பேர் இருப்பதாகக் கூறப்படுகிறது. குஜ்ஜர், ஜாட் மக்கள் அதிகம் வசிக்கும் ரிடாலா போன்ற பகுதிகள் பாஜகவுக்கும், மங்கோல்புரி, சுல்தான்புரி போன்ற பகுதிகள் ஆத்ஆத்மி கட்சிகளுக்கும் வலுவாக உள்ளதாக அக் கட்சியினர் கருதுகின்றனர்.

    கடந்தகால வெற்றிகள்: 1999 தேர்தலில் இத் தொகுதியில் பாஜக சார்பில் சாகிப் சிங் வர்மா, 2004-இல் காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமார் வெற்றி பெற்றனர்.

    2009-இல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கிருஷ்ணா தீரத் சுமார் 1.80 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் மீனா கன்வாரியா தோல்வியை சந்தித்தார். பகுஜன் சமாஜ் கட்சி 44 ஆயிரம் வாக்குகளே பெற்றார்.

    கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின்போது வடமேற்கு மக்களவைத் தொகுதிக்குள்பட்ட 10 பேரவைத் தொகுதிகளிலும் சுமார் 13.35 லட்சம் வாக்குகள் பதிவாகின. இதில், அதிகபட்சமாக பாஜகவுக்கு 4.96 லட்சம், ஆம்ஆத்மிக்கு 3.42 லட்சம், காங்கிரஸýக்கு 3.04 லட்சம் வாக்குகள் கிடைத்தன.

    இத் தொகுதியில் பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி வேட்பாளர்களிடையேதான் உண்மையான போட்டி உள்ளது என்று கூறப்படுகிறது. தனித் தொகுதியில் தனி முத்திரை பதிக்கப்போவது யார் என்பது வாக்கு எண்ணிக்கை தினமான மே 16-ஆம் தேதி தெரியும்.

    படங்கள்: டி.ராமகிருஷ்ணன்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai