Enable Javscript for better performance
விதவை பலாத்கார வழக்கில் இளைஞர் விடுதலை- Dinamani

சுடச்சுட

    

    திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றி விதவைப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் அரசுத் தரப்பு சாட்சியங்கள் போதுமானதாக இல்லாததால் குற்றம்சாட்டப்பட்ட இளைஞரை விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இது தொடர்பான வழக்கு தில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின்போது, "தில்லியைச் சேர்ந்த இரு குழந்தைகள் பெற்ற 27 வயது விதவைப் பெண்ணுக்கும் டாப்ரி காவல் சரகப் பகுதியைச் சேர்ந்த "ஏர்கூலர்' பழுதுபார்ப்பு பணி செய்துவரும் மகேந்தர் சிங் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

    இந் நிலையில், விதவையிடம் திருமணம் செய்ய விரும்புவதாக மகேந்தர் சிங் கூறினார். இதையடுத்து, 2011, பிப்ரவரி மாதத்தில் விதவையின் வீட்டுக்கு மகேந்தர் சிங் சென்றார். அப் பெண்ணின் நெற்றியில் திலகமிட்டார். இதுவே திருமணத்தின் அடையாளம் என்றும் கூறினார். இதை அப் பெண்ணும் நம்பினார். இதைத் தொடர்ந்து இருவரும் பாலியல் உறவு மேற்கொண்டனர். இந் நிலையில், மகேந்தர் சிங் ஏற்கெனவே திருமணம் ஆனவர் என்பது விதவைக்குத் தெரியவந்தது. தன்னிடம் திருமணம் ஆனதை மறைத்து, பொய்யாக வாக்குறுதி அளித்து மகேந்தர் சிங் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக டாப்ரி காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட பெண் புகார் அளித்தார்' என்று அரசுத் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

    இருதரப்பு வழக்கு விசாரணைக்குப் பிறகு கூடுதல் செஷன்ஸ் நீதிபதி விரேந்தர் பட் அளித்த உத்தரவு: இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராகப் போதிய சாட்சியங்களை அளிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டது. வழக்குக்கு வலுசேர்க்கும் வகையில் நம்பகமான ஆதாரங்களையும் அளிக்கவில்லை. மேலும், குற்றம்சாட்டப்பட்டவருக்கு திருமணம் ஆகியது தனக்குத் தெரியவில்லை என்ற விதவையின் வாதத்திற்கு வலுசேர்க்கும் ஆதாரங்களும் இல்லை. ஹிந்து மதத்தின் திருமணச் சடங்குகள் தெரிந்திருந்தும்,

    நெற்றியில் திலகமிட்டதால் அதையே திருமணம் முடிந்ததன் அடையாளம் என்று தான் நம்பி ஏற்றுக் கொண்டதாக புகார்தாரர் கூறுவதை ஏற்க முடியாது.

    மேலும், சம்பந்தப்பட்ட பெண்ணின் சுதந்திரமான விருப்பத்தின் பேரிலேயே பாலியல் உறவு நிகழ்ந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆகவே, குற்றம்சாட்டப்பட்டவரை பாலியல் குற்றச்சாட்டில் இருந்து விடுவித்து நீதிமன்றம் உத்தரவிடுகிறது' என்று நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai