Enable Javscript for better performance
பாஜக தேர்தல் அறிக்கை எங்கே?- Dinamani

சுடச்சுட

    

    மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கை எங்கே? என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.

    மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் பிரசார பொதுக்கூட்டம் தட்சிணபுரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில் தெற்கு தில்லி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரமேஷ் குமாருக்கு ஆதரவு கேட்டு அக் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசியது:

    மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்புப் பணிகள் ஆறு மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டு, சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களிடமும் கருத்துகள் கேட்கப்பட்டன. அக் கருத்துகளின் அடிப்படையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டது. ஆனால், முதல் கட்ட தேர்தல் தொடங்கவுள்ள நிலையிலும் பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிடவில்லை. தேர்தல் அறிக்கை தொடர்பாக மக்களிடம் கருத்துக் கேட்க வேண்டிய அவசியமில்லை என பாஜக கருதுகிறது போலும். பாஜகவைப் பொருத்த வரை நல்லது, கெட்டது ஆகியவற்றை ஒரு நபரே (மோடி) முடிவு செய்வதால், பாஜகவுக்கு தேர்தல் அறிக்கை வெளியிட வேண்டிய அவசியமில்லை.

    கடந்த 2004-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் "இந்தியா ஒளிர்கிறது' என முழங்கி தேர்தல் பிரசாரம் செய்த பாஜகவின் பலூன் வெடித்துச் சிதறியது. 2009-ஆம் ஆண்டும் தோல்வியைத் தழுவியது. இத் தேர்தலில் பறக்கவிட்டுள்ள "குஜராத் மாதிரி' பலூனும் வெடிக்கும். பாஜக முன்வைக்கும் "குஜராத் மாதிரி' போல பிற மாநிலங்களும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. பல்வேறு திட்டங்களிலும் செயல்பாடுகளிலும் குஜராத்தைவிட ஹரியாணா முன்னணியில் உள்ளது. அந்த வகையில் "ஹரியாணா மாதிரி' சிறந்தது. காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஊழல் செய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    ஆனால், ஊழல் பற்றி பேசி வரும் பாஜகவினர், ஊழலுக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. மாறாக பாஜக ஆளும் மாநிலங்களில் ஊழல்களுக்கு ஆதரவு அளிக்கப்படுகிறது.

    மக்களின் ஆதரவு ஆம்ஆத்மிக்கு இருப்பதை கருத்தில் கொண்டு தில்லியில் ஆட்சி அமைக்க அக் கட்சிக்கு ஆதரவு அளிக்க காங்கிரஸ் கட்சி முன் வந்தது. ஆனால், தொடர்ந்து ஆட்சியை நடத்தாமல் அக்கட்சியினர் ஓடிவிட்டனர் என்றார் ராகுல் காந்தி.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai