Enable Javscript for better performance
வடகிழக்கு தில்−யில் குறைந்த வாக்குகளில்தான் வெற்றி! எம். வெங்கடேசன்- Dinamani

சுடச்சுட

  

  வடகிழக்கு தில்−யில் குறைந்த வாக்குகளில்தான் வெற்றி! எம். வெங்கடேசன்

  By புது தில்லி  |   Published on : 07th April 2014 12:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ள வடகிழக்கு தில்லி மக்களவைத் தொகுதியில் யார் வெற்றி பெற்றாலும் அது குறைவான வாக்கு வித்தியாசத்தில்தான் இருக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். முஸ்லிம்கள், இதர பிற்படுத்தப்பட்டோர் விகிதம் கிட்டத்தட்ட சம அளவில் உள்ளதே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

  தொகுதி மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ், இத் தொகுதி 2008-ஆம் ஆண்டு உருவானது. இப்போதைய தேர்தலில் காங்கிரஸ் சார்பில் தற்போதைய மக்களவை உறுப்பினர் ஜெய் பிரகாஷ் அகர்வால் மீண்டும் களம் இறக்கப்பட்டுள்ளார். போஜ்புரி நடிகரும் பாடகருமான மனோஜ் திவாரி (பாஜக), பேராசிரியர் ஆனந்த் குமார் (ஆம்ஆத்மி), அப்துல் சாமி சல்மானி (பிஎஸ்பி) உள்ளிட்ட முக்கிய கட்சி வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மேலும், அரசியல் கட்சிகளைச் சேர்ந்த ஒம் தத்தா (எஸ்எச்எஸ்), பேராசிரியர் நரேந்தர் சர்மா (எஸ்யுசிஐ-சி), பிரதேஷ் குமார் (ஏஎன்சி), முகமது ஆரீஃப் சித்திக் (ஏஐடிசி), ராஜன் லால் (பிஆர்பிபி), ரோஷன் அலி (என்எல்பி), வினய் (பிஎஸ்கேபி), முகமது ஹசன் கான் (ஜேகேஎன்பிபி) மற்றும் எட்டு சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 20 பேர் களமிறங்கியுள்ளனர்.

  இத் தொகுதியில் மொத்தம் (2014, ஜனவரி 31 நிலவரப்படி) 18,67,000 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 10,290,98 பேர், பெண்கள் 8,37,810 பேர், திருநங்கைகள் 92 பேர் உள்ளனர். முஸ்லிம்கள் 22 சதவீதம், பிற்படுத்தப்பட்டோர் 21 சதவீதம், தாழ்த்தப்பட்டோர் 16 சதவீதம், பிராமணர்கள் 11 சதவீதம், ஜாட் சமூகத்தினர் 3.5 சதவீதம், குஜ்ஜர்கள் 8 சதவீதம், வைசியர்கள் 4 சதவீதம், பஞ்சாபிகள் 4 சதவீதம், பிற சமூகத்தினர் 10.5 சதவீதம் என்ற அடிப்படையில் வாக்காளர்கள் உள்ளனர்.

  கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் இம் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் 2, ஆம்ஆத்மி 3, பாஜக 5 இடங்களில் வெற்றி பெற்றன.

  2009 தேர்தல்: கடந்த 2009 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஜெய் பிரகாஷ் அகர்வால் 5,18,191 வாக்குகளைப் பெற்று 2,22,243 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவருக்கு அடுத்துவந்த பாஜக வேட்பாளர் பி.எல். சர்மா பிரஷ் 29,59,48 வாக்குகளையும், பகுஜன் சமாஜ் வேட்பாளர் ஹாஜி தில்ஷாத் அலி 44,111 வாக்குகளையும் பெற்றார்.

  ஜெய் பிரகாஷ் அகர்வால் (காங்கிரஸ்): இத் தொகுதியில் கடந்த ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சித் திட்டங்களை முன்வைத்து ஜெய் பிரகாஷ் அகர்வால் வாக்கு கேட்டுவருகிறார்.

  மக்களவைத் தொகுதி மேம்பாட்டு நிதியை முழுமையாக செலவிட்டு மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொண்டுள்ளதாகக் கூறி ஆதரவு கோருகிறார். இருப்பினும், கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அதிருப்தி அலை வீசுவது அவருக்கு பாதகமாகக் கருதப்படுகிறது.

  பேராசிரியர் ஆனந்த் குமார் (ஆம்ஆத்மி): ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையின் பேராசிரியராக உள்ள ஆனந்த் குமார், குடிநீர் பற்றாக்குறை, சீரற்ற மின் விநியோகம், சுகாதார வசதியின்மை, கல்வி நிறுவனங்களின் உள்கட்டமைப்பு உள்ளிட்ட பிரச்னைகளை முன்வைத்து பிரசாரம் செய்துவருகிறார்.

  அடிப்படை பிரச்னைகளுக்கானத் தீர்வை உள்ளடக்கிய தொகுதிக்கான பிரத்யேக தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டுள்ளார்.

  மனோஜ் திவாரி (பாஜக): இத் தொகுதியில் வசிக்கும் பூர்வாஞ்சலிகளின் வாக்குகளைக் குறிவைத்து அந்த சமூகத்தைச் சேர்ந்த மனோஜ் திவாரி பாஜக சார்பில் களம் இறக்கப்பட்டுள்ளார். நரேந்திர மோடியை முன்னிறுத்தி பிராசரத்தை இவர் தீவிரப்படுத்தியுள்ளார். அங்கீகாரமற்ற காலனிகள், தொகுதியின் அடிப்படை பிரச்னைகளை தீர்ப்பதாக வாக்குறுதி அளித்துள்ளார்.

  மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளைக் கொண்ட இத் தொகுதியில் கழிவுநீர்க் கால்வாய் பிரச்னை, தரமான கல்வி, மருத்துவ வசதி சரிவர இல்லாதது உள்ளிட்டவை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது.

  கடந்த முறை 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற காங்கிரஸைக்கு இத்தொகுதி இம் முறை மீண்டும் "கை' கொடுக்குமா? அல்லது புதுவரவான ஆம்ஆத்மியின் சட்டப்பேரவை வெற்றி மக்களவைத் தேர்தலிலும் எதிரொலிக்குமா? அல்லது பூர்வாஞ்சலிகளின் ஆதரவால் பாஜகவுக்கு வெற்றி கிடைக்குமா? என்பதே அரசியல் பார்வையாளர்களின் கேள்வியாக உள்ளது.

  சிறுபான்மையினர், இதர பிற்படுத்தப்பட்டோர் வாக்காளர்கள் அதிகம் உள்ள இத் தொகுதியில் வெற்றி வித்தியாசம் குறைவாகவே இருக்கும் என்று பேசப்படுகிறது.

  படங்கள்: டி.ராமகிருஷ்ணன்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai