Enable Javscript for better performance
ஆம்ஆத்மி வேட்பாளர் எனக்குப் போட்டியில்லை- Dinamani

சுடச்சுட

    

    "ஆம்ஆத்மி கட்சியின் வேட்பாளர் எனக்குப் போட்டியில்லை; பாஜகதான் போட்டிக் களத்தில் உள்ளது' என்று காஜியாபாத் மக்களவைத் தொகுதி பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) வேட்பாளர் முகுல் உபத்யாய கூறினார்.

    இத் தொகுதிக்கு ஏப்ரல் 10-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தொகுதிக்குள்பட்ட பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட அவர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டி:

    பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஆம்ஆத்மி கட்சி போட்டியில்லை. இத் தேர்தலில் அக் கட்சி வேட்பாளர் சில ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெறுவார். ஆனால், எங்கள் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையேதான் போட்டி. தேர்தலில் எனக்கு அடுத்தபடியாக அதிக வாக்குகளைப் பெறும் கட்சியாக பாஜக வேட்பாளர் வி.கே. சிங் இரண்டாம் இடத்தைப் பெறலாம்.

    தலித், பிராமணர்கள், முஸ்லிம்கள், வைசியர்கள், குஜ்ஜர்கள் ஆகிய சமூகத்தினரின் வாக்குகள் அதிகம் கொண்ட காஜியாபாத் மக்களவைத் தொகுதியில் எனக்குத்தான் அதிகமான வாக்குகள் கிடைக்கும். அதற்குக் காரணம், அனைத்து சமூகத்தினரின் ஆதரவைப் பெற்ற வேட்பாளராக நான் களத்தில் உள்ளேன்.

    பாஜகவுக்கு தொகுதியில் தாகுர் சமூகத்தவரின் வாக்குகள் அதிகமாகக் கிடைக்கலாம். எனக்கு குறைவாகக் கிடைக்கலாம். அதேபோன்று, முன்பு பாஜகவுக்கு ஆதரவுக் கரம் நீட்டிய வைசியர் சமூக மக்கள் இந்த முறை என் பக்கம் உள்ளனர். தங்கள் சமூகத்தைச் சேர்ந்தவரை களத்தில் நிறுத்துவதற்கு பாஜக வாய்ப்பு அளிக்காததால் வைசியர் சமூக மக்கள் அக் கட்சியின் மீது அதிருப்தியில் உள்ளனர்.

    கடந்த இரண்டரை ஆண்டுகளாக இங்குள்ள மக்களுக்காக பல்வேறு பணிகளைச் செய்துள்ளேன். ஏராளமான முதியவர்களின் ஆசீர்வாதமும் எனக்கு உண்டு. மக்களுடைய ஆதரவு என்பக்கம் உள்ளது. அதனால் நான் வெற்றி பெறுவது உறுதி என்றார் அவர்.

    பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளராக களம் காணும் முகுல் உபாத்யாய (41) பிராமணர் சமூகத்தைச் சேர்ந்தவர்.

    இவரை எதிர்த்து பாஜக சார்பில் முன்னாள் ராணுவத் தலைமை தளபதி வி.கே.சிங், காங்கிரஸ் சார்பில் ராஜ் பப்பர், ஆம்ஆத்மி சார்பில் ஷாஸியா இல்மி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    இத் தொகுதியில் 22.64 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் தலித், முஸ்லிம்கள் தலா 4.5 லட்சம் பேர், பிராமணர்கள் 4 லட்சம் பேர், தாகுர் சமூகத்தினர் 1.5 லட்சம் பேர், வைசியர்கள் 2 லட்சம் பேர், பஞ்சாபி, ஜாட் சமூகத்தினர் தலா ஒரு லட்சம் பேர் உள்ளதாக அரசியல் கட்சியினர் கூறுகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai