Enable Javscript for better performance
கேஜரிவால் வீதி, வீதியாக பிரசாரம்- Dinamani

சுடச்சுட

    

    மேற்கு தில்லி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் திறந்தவெளி ஜீப்பில் ஆம்ஆத்மி கட்சி வேட்பாளரை ஆதரித்து அக் கட்சியின் தேசிய அமைப்பாளர் அர்விந்த் கேஜரிவால் திங்கள்கிழமை தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

    திங்கள்கிழமை காலை 11 மணிக்கு தனது பிரசாரத்தை கேஜரிவால் தொண்டர்கள் புடைசூழ தொடங்கினார். மேற்கு தில்லி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட ரஜௌரி கார்டன் சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து திறந்தவெளி ஜீப்பில் பிரசாரம் மேற்கொண்டார். அவருடன் கட்சியின் வேட்பாளர் ஜர்னைல் சிங் உடன் சென்றார். திலக் நகர், ஹரி நகர் உள்ளிட்ட பல இடங்கள் வழியாக, ஜனக்புரி பகுதியில் பிரசாரத்தை முடித்தார்.

    பிரசாரத்தின்போது பத்திரிகையாளர்களிடமும், பொது இடத்திலும் பேசுவதை அவர் தவிர்த்தார்.

    அண்மையில் தட்சிணபுரி பகுதியில் பிரசாரத்தின்போது கேஜரிவால் மீது ஒருவர் பாய்ந்து அறைந்த சம்பவம் நிகழ்ந்தது. இதன் காரணமாக, கேஜரிவால் பிரசாரத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.

    தில்லியில் வாக்களிக்கவுள்ளார் கேஜரிவால்

    தில்லி முன்னாள் முதல்வரும் ஆம்ஆத்மியின் தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால், தில்லியில் வரும் 10-ஆம் தேதி நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க உள்ளார்.

    உத்தர பிரதேச மாநிலம், வாராணசியில் பாஜகவின் பிரதமர் பதவி வேட்பாளரும் குஜராத் முதல்வருமான நரேந்திர மோடியை எதிர்த்து அவர் போட்டியிடுகிறார். எனினும், வரும் மக்களவைத் தேர்தலில் தில்லியில்தான் அவர் வாக்களிப்பார் என்று அக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

    "மத்திய தில்லியில் உள்ள திலக் லேன் முகவரியில் வாக்காளர் அடையாள அட்டைக்காக அவர் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்துள்ளார். அவர் வாராணசியில் வாக்களிக்க மாட்டார்' என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

    முன்னதாக, அவர் தில்லி முதல்வராக இருந்தபோது புது தில்லியில் உள்ள அரசு பங்களாவில் தங்கியுள்ளார். பதவியில் இருந்து ராஜிநாமா செய்தாலும், அவரது கோரிக்கையை ஏற்று அரசு பங்களாவில் ஜூலை மாதம் வரை தங்கியிருக்க பொதுப் பணித் துறை அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai