Enable Javscript for better performance
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு: விசாரணை 3 வாரங்களுக்கு நிறுத்திவைப்பு - Dinamani

சுடச்சுட

    

    ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு: விசாரணை 3 வாரங்களுக்கு நிறுத்திவைப்பு

    By புது தில்லி  |   Published on : 08th April 2014 12:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோருக்கு எதிராக பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வழக்கின் விசாரணையை மூன்று வாரங்களுக்கு நிறுத்திவைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இது தொடர்பாக அந்த வழக்கில் ஆஜராகிவரும் சிறப்பு வழக்குரைஞர் பவானி சிங் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.எஸ். சௌஹான், ஜே. செலமேஸ்வர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

    பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோருக்கு எதிரன வழக்கில் அரசு சிறப்பு வழக்குரைஞராக பவானி சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

    ஆனால், அந்த வழக்கு தொடர்பான சில விசாரணைகளின்போது அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து, அவருக்கு ரூ. 65 ஆயிரம் அபராதம் விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து பவானி சிங் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனு நீதிபதிகள் பி.எஸ். சௌஹான், ஜே. செலமேஸ்வர் அடங்கிய அமர்வு முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, பவானி சிங் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் நாகேந்திர ராய், "பவானி சிங்குக்கு உடல் நலம் சரியில்லாததால் அவரால் ஒன்பது விசாரணைகளில் ஆஜராக இயலாமல் போனது.

    ஆனால், அவரது நிலையை கவனத்தில் கொள்ளாமல் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். உடல் நலக் குறைவு காரணமாக, மேலும் அவர் மூன்று வாரங்களுக்கு வழக்கில் ஆஜராகாமல் இருக்கவும் விலக்கு அளிக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்.

    இந்த மனு மீதான விசாரணையின்போது கர்நாடகம் சார்பில் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

    "பவானி சிங் மனு தொடர்பாக கர்நாடக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் பெங்களூரு நீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கை நடத்திவரும் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ஏப்ரல் 28-ஆம் தேதிக்குள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிடுகிறோம்.

    அதுவரை மூன்று வாரங்களுக்கு வழக்கு விசாரணையை நிறுத்தி வைக்குமாறு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிடுகிறோம்.

    மூன்று வாரங்களுக்குப் பிறகு ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கில் அரசுத் தரப்பு வழக்குரைஞராக பவானி சிங் தினந்தோறும் ஆஜராகி வாதிட வேண்டும்.

    அவ்வாறு அவரால் ஆஜராக முடியாவிட்டால், அரசு சிறப்பு வழக்குரைஞராக வேறு ஒருவரை நியமிக்கும் மனுவை முறைப்படி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பவானி சிங் தாக்கல் செய்ய கேட்டுக் கொள்வோம்' என்று உத்தரவில் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai