Enable Javscript for better performance
தலைநகரில் உச்சகட்ட தேர்தல் பிரசாரம்!- Dinamani

சுடச்சுட

    

    தலைநகரில் மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில், மொத்தம் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளிலும் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள், கட்சித் தொண்டர்கள் கடைசிகட்ட பிரசாரத்தை தீவிரமாக மேற்கொண்டுள்ளனர்.

    தில்லி பிரதேசத்தில் மொத்தமுள்ள 7 மக்களவைத் தொகுதிகளிலும் காங்கிரஸ், பாஜக, ஆம்ஆத்மி, பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாதி கட்சி ஆகியவற்றின் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    சாந்தினி செüக், புது தில்லி, கிழக்கு தில்லி,வடமேற்கு தில்லி, வடகிழக்கு தில்லி, மேற்கு தில்லி, தெற்கு தில்லி ஆகிய 7 தொகுதிகளிலும் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். பெரும்பாலான தொகுதிகளில் மும்முனைப் போட்டி நிலவுகிறது.

    மொத்தம் உள்ள 7 தொகுதிகளில் பாஜக 4 முதல் 5 இடங்களிலும், ஆம்ஆத்மி 2 இடங்கள், காங்கிரஸ் ஓர் இடத்திலும் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக தனியார் நிறுவனங்கள் நடத்திய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

    பாஜக: தலைநகரில் மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் தலைநகரில் முகாமிட்டு பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். பாஜக சார்பில் அதன் தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங், மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்டோர் கடந்த இரண்டு நாள்களாக பிரசாரம் மேற்கொண்டனர்.

    ஊழல், பொருளாதார சீர்குலைவு, சீனாவுடனான எல்லைப் பிரச்னை, தலைநகரில் பெண்கள் பாதுகாப்புக்கு சரிவர நடவடிக்கை எடுக்காதது, விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றுக்கு மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசுதான் காரணம் என்று பாஜக தலைவர்கள் கடுமையாகக் குற்றம்சாட்டினர்.

    மேலும், தில்லியில் அண்மையில் ஆட்சியைப் பிடித்து திடீரென்று பதவி விலகிய ஆம்ஆம்தி கட்சியையும் பாஜக தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர். ஆட்சியைக் கைப்பற்ற மக்களை ஆம்ஆத்மி கட்சி ஏமாற்றிவிட்டதாகச் சாடினர்.

    மேலும், வளமான இந்தியாவை உருவாக்கவும் பொருளதார வளர்ச்சியை ஏற்படுத்தவும் ஊழலற்ற நிர்வாகத்தை அளிக்கவும் பாஜகவுக்கு வாக்களிக்குமாறு அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

    மேலும் கட்சித் தொண்டர்களும் அனைத்துத் தொகுதிகளையும் கைப்பற்றும் நோக்கத்தில் வீடு வீடாகச் சென்று தீவிரம் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

    ஏற்கெனவே பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி கட்சியின் பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு பிரசாரம் செய்தது குறிப்பிடத்தக்கது. பாஜக வேட்பாளர்களை ஆதரித்து "வாழும் கலை' ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரும் பிரசாரம் மேற்கொண்டார்.

    காங்கிரஸ்: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தில்லியில் தனது கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பொதுக்கூட்டத்தில் பேசினார். இதைத் தொடர்ந்து கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொண்டார்.

    "கடந்த 2004-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் "இந்தியா ஒளிர்கிறது' என முழங்கி தேர்தல் பிரசாரம் செய்த பாஜகவின் பலூன் வெடித்துச் சிதறியது. 2009-ஆம் ஆண்டும் தோல்வியைத் தழுவியது. இத் தேர்தலில் பறக்கவிட்டுள்ள "குஜராத் மாதிரி' பலூனும் வெடிக்கும்' என்று பாஜகவை அவர் கடுமையாக விமர்சித்தார். பாஜக ஆளும் மாநிலங்களில் ஊழல்கள் அதிகம் நடைபெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

    "தில்லியில் ஆட்சி அமைக்க ஆம்ஆத்மி கட்சிக்கு ஆதரவு அளிக்க காங்கிரஸ் கட்சி முன் வந்தது. ஆனால், தொடர்ந்து ஆட்சியை நடத்தாமல் ஓடிவிட்டனர்' என்று அக் கட்சியையும் கடுமையாகச் சாடினார் ராகுல் காந்தி.

    ஆம்ஆத்மி: பல்வேறு மாநிலங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டிருந்த ஆம்ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் கடந்த சில நாள்களுக்கு முன் தலைநகர் திரும்பினார். உடனடியாக கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வீதிவீதியாகப் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். தில்லியில் தனது கட்சியை ஆட்சி செய்ய விடாமல் பாஜகவும், காங்கிரஸýம் இணைந்து நாடகமாடிவிட்டன என்று கடுமையாகச் சாடினார்.

    ஊழலை ஒழிக்கவும், பெண்கள் பாதுகாப்பாக வாழவும் ஆம்ஆத்மியை ஆதரிக்கும்படி அவர் கேட்டுக் கொண்டு வருகிறார். மேலும், அக் கட்சித் தொண்டர்களும் அனைத்துத் தொகுதிகளிலும் வீடுவீடாகச் சென்று வாக்குசேகரிப்பில் தீவிரம் காட்டிவருகின்றனர்.

    மேலும், அனைத்துத் தொகுதிகளிலும் அதன் வேட்பாளர்களும் கடைசி கட்டப் பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    தில்லி பிரதேசத்தில் மொத்த வாக்காளர்கள் 1.21 கோடி பேர். இதில் 66.85 லட்சம் பேர் ஆண்கள். 53.75 லட்சம் பேர் பெண்கள். மற்றவர்கள் 638 பேர் உள்ளனர். கடந்த 2009 தேர்தலின்போது மொத்த வாக்காளர்கள் 1.11 கோடியாக இருந்தது. கடந்த தேர்தலில் 7 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai