Enable Javscript for better performance
தில்லியில் 100 வயதைக் கடந்த வாக்காளர்கள் 324 பேர்!- Dinamani

சுடச்சுட

    

    தில்லியில் 100 வயதைக் கடந்த வாக்காளர்கள் 324 பேர்!

    By புது தில்லி  |   Published on : 08th April 2014 12:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லியில் மொத்தமுள்ள 1.2 கோடி வாக்காளர்களில் 100 வயதைக் கடந்தவர்கள் 324 பேர் உள்ளனர் என்று தில்லி தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக தில்லி கூடுதல் தேர்தல் ஆணையர் நீரஜ் பார்தி திங்கள்கிழமை கூறியது: 100 வயதைக் கடந்த 324 வாக்காளர்களில் 164 பேர் பெண்கள். அதிகபட்சமாக மேற்கு தில்லி திலக் நகரில் 17 பேர் நூறு வயதைக் கடந்த வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 12 பேர் விரைவில் 125-ஆவது வயதை எட்டவுள்ளனர். 90 முதல் 100 வயது வரையிலான வாக்காளர்கள் 10,104 பேர் உள்ளனர்.

    முதியவர்கள், மாற்றுத் திறானிகள் ஆகியோர் வாக்களிக்க வசதியாக வாக்குப்பதிவு மையங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சக்கர நாற்காலி, சாய்தள படிக்கட்டு உள்ளிட்டவை தயாராக வைக்கப்படும். ஆர்வமாக வாக்களிப்பதை முதியவர்களிடமிருந்து இளைஞர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

    சித்தரஞ்சன் பார்க், புது தில்லி மக்களவைத் தொகுதி, சித்தரஞ்சன் பார்க்கில் உள்ள காளிதாரா மண்டல் (124) கூறுகையில், "வங்கதேச போரின் போது, 1971-ஆம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தானில் இருந்து வந்தேன்.

    வழக்கம் போல இம் முறையும் வாக்களிக்க விரும்புகிறேன். இத் தேர்தல் எனக்கு கடைசித் தேர்தலாக இருக்கும் எனக் கருதுகிறேன். என்னுடைய மகன் சொல்லும் வேட்பாளருக்கே வாக்களிப்பேன். ராகுல் காந்தி, மோடி குறித்து தெரியாது. எனக்குத் தெரிந்தெல்லாம் இந்திரா காந்திதான்' என்றார்.

    வடமேற்கு தில்லி தொகுதி, கராலாவில் உள்ள மமன்சந்த் அகர்வால் (104) கூறுகையில் "தொடக்கத்தில் காங்கிரஸ் ஆதரவாளராக இருந்தேன். இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் 1975-ஆம் ஆண்டு நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கவில்லை. இத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்கு அளிப்பேன்' என்றார்.

    மமன்சந்த் அகர்வாலின் மகன் ஜெகதீஷ் சரண் கூறுகையில், "தேர்தலில் தொடர்ந்து வாக்களித்து வருவதற்காக எனது தந்தையை தேர்தல் ஆணையம் பாராட்டியுள்ளது. இம் முறை நடைபெறும் தேர்தலிலும் அவர் வாக்களிப்பார்' என்றார்.

    தேர்தலில் வாக்களிக்க குறைந்தபட்ச வயது வரம்புதான் உண்டே தவிர அதிகபட்ச வயதில்லை என்பதை நிரூபிக்கின்றனர் இந்த மூத்த குடிமக்கள்!

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai