Enable Javscript for better performance
தெற்கு தில்லி மாநகராட்சியில் உலக சுகாதார நாள் கொண்டாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தெற்கு தில்லி மாநகராட்சியில் உலக சுகாதார நாள் கொண்டாட்டம்

    By புது தில்லி  |   Published on : 08th April 2014 12:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தெற்கு தில்லி மாநகராட்சியில் உலக சுகாதார நாள் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

    தெற்கு தில்லி மாநகராட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொசுக்கள் மூலம் பரவும் நோய்களைத் தடுப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. "சிறிய கடி, பேராபத்து' தலைப்பில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.

    குடியிருப்போர் நல சங்கங்களின் பிரதிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி, சுகாதாரம் தொடர்பாக கண்காட்சி, பள்ளி மாணவர்களின் சார்பில் கலை நிகழ்ச்சிகள் சுகாதார விழிப்புண்ரவு குறுநாடகம் ஆகியவையும் நடைபெற்றன.

    நிகழ்ச்சியில் தெற்கு தில்லி மாநகராட்சி ஆணையர் மணீஷ் குப்தா பேசுகையில், "கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா உள்ளிட்ட நோய்களை கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்' என்றார்.

    தெற்கு தில்லி மாநகராட்சி சுகாதாரத் துறை தலைமை அதிகாரி டாக்டர் என்.கே. யாதவ் பேசுகையில், தெற்கு தில்லி மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

    2 பேருக்கு டெங்கு: இதனிடையே தில்லி மாநகராட்சிகள் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

    கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், டெங்கு கொசு பெருக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பரிசோதனையில் இருவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்துள்ளது. இவர்களில் ஒருவர் வடக்கு தில்லியைச் சேர்ந்தவர், மற்றொருவர் அண்டை மாநிலத்தைச் சேர்ந்தவர்.

    டெங்கு கொசுப் பெருக்கம் உள்ளதா என்று இதுவரை 81,17,678 வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. கொசுப் பெருக்கம் இருப்பது கண்டறியப்பட்ட 3,848 வீடுகளின் உரிமையாளர்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது என்று மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai