Enable Javscript for better performance
நிதின் கட்கரி தொடர்ந்த அவதூறு வழக்கு: கேஜரிவாலுக்கு தில்லி நீதிமன்றம் நோட்டீஸ்- Dinamani

சுடச்சுட

    

    நிதின் கட்கரி தொடர்ந்த அவதூறு வழக்கு: கேஜரிவாலுக்கு தில்லி நீதிமன்றம் நோட்டீஸ்

    By புது தில்லி,  |   Published on : 08th April 2014 12:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாஜக மூத்த தலைவர் நிதின் கட்கரி தொடர்ந்த அவதூறு வழக்கில் முன்னாள் தில்லி முதல்வரும், ஆம்ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் மே 21-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப தில்லி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

    நாடு முழுவதும் ஊழல் செய்ததாகக் கூறப்படும் அரசியல் தலைவர்களின் பட்டியலை அரவிந்த் கேஜரிவால் கடந்த ஜனவரி 31-ஆம் தேதி தில்லியில் வெளியிட்டார். அதில், பாஜகவின் மூத்த தலைவரான நிதின் கட்கரியின் பெயரும் இடம்பெற்றிருந்தது.

    இதையடுத்து, அரவிந்த் கேஜரிவால் மீது தில்லி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றவியல் அவதூறு வழக்கை நிதின் கட்கரி தொடர்ந்தார்.

    இது தொடர்பாக கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி கேஜரிவாலுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. ஆனால், அவர் ஆஜராகவில்லை.

    இந் நிலையில் இந்த வழக்கு தில்லி பெருநகர மாஜிஸ்திரேட் கோமதி மனோச்சா முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, கேஜரிவால் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், "நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து கேஜரிவாலுக்கு விலக்கு அளிக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார். இதற்கு நிதின் கட்கரி தரப்பு வழக்குரைஞர் ஆட்சேபம் தெரிவித்தார்.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட மாஜிஸ்திரேட் கோமதி மனோச்சா, "நிதின் கட்கரி தொடர்ந்து வழக்கு தொடர்பாக கேஜரிவால், மே 21-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும்' என்று உத்தரவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai