Enable Javscript for better performance
மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்- Dinamani

சுடச்சுட

    

    சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான திட்டம் தொடர்பாக தமிழக அரசு தெரிவிக்கும் புகார்களை ஆய்வு செய்ய புதிய நிபுணர்கள் குழுவை நியமிக்கலாமா என்பது குறித்து நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்க தேசிய நெடுஞ்சாலைத் துறை, தமிழக அரசு ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இத் திட்டத்தைத் தொடரலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கடந்த மாதம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தது. அந்த மனு தலைமை நீதிபதி பி. சதாசிவம், நீதிபதி ரஞ்சன் கோகோய் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

    அப்போது, தேசிய நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் டி.ஆர். அந்தியருஜினா, "மக்களின் நலன் கருதி சென்னை துறைமுகம்-மதுரவாயல் இடையிலான பறக்கும் சாலைத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. ஆனால், அரசியல் காரணங்களுக்காக அத் திட்டத்தை தமிழக அரசு எதிர்க்கிறது' என்றார்.

    அப்போது குறுக்கிட்ட தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ராகேஷ் திரிவேதி முன்வைத்த வாதம்: "மக்கள் நலன், பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் மாநில அரசுக்கு அதிக அக்கறை உள்ளது. ஆனால், பறக்கும் சாலைத் திட்டத்தை பொருத்தவரை, அரசாணைகளில் கூறப்பட்டுள்ள விதிகளுக்கு மாறான பல நடவடிக்கைகளை தேசிய நெடுஞ்சாலைத் துறை செய்துள்ளது.

    கூவம் நதிக்கரையோரம் தூண்கள் அமைக்கப்படும் என்று கூறி அனுமதி பெற்றுவிட்டு, கூவம் ஆற்றின் நீர் வழிப்பாதையின் மையப் பகுதியில் அனுமதியின்றி தூண்கள் எழுப்பப்பட்டுள்ளன.

    இதனால்தான் இத் திட்டத்தை தமிழகம் ஆட்சேபிக்கிறது. இது தொடர்பாக நிபுணர் குழுவின் ஆலோசனைகளைப் பெற்ற பிறகே பணிகளைத் தொடர வேண்டும்' என்று ராகேஷ் திரிவேதி கேட்டுக் கொண்டார்.

    அப்போது நீதிபதிகள், "இத் திட்டம் தொடர்பாக தமிழக அரசு ஆட்சேபம் தெரிவிப்பதால், அதன் சந்தேகத்தைத் தீர்க்க வேண்டியது மத்திய அரசின் கடமை. இந்த விவகாரத்தில் புதிய நிபுணர் குழுவை நியமித்து ஆய்வு மேற்கொள்ளலாமா?' என்று கேட்டனர்.

    அதை ஏற்றுக் கொண்ட வழக்குரைஞர் ராகேஷ் திரிவேதி, "புணே அல்லது அண்ணா பல்கலைக்கழக நிபுணர்கள் கொண்ட குழுவை நியமித்து ஆய்வு மேற்கொள்ளலாம்' என்றார்.

    ஆனால், அதை ஏற்க மறுத்த வழக்குரைஞர் தேசிய நெடுஞ்சாலைத் துறை வழக்குரைஞர், "இத் திட்டம் தொடர்பாக ஏற்கெனவே 3 பேர் அடங்கிய நிபுணர்கள் குழு ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளது. இந் நிலையில் புதிதாக ஒரு குழுவை நியமித்தால் தேவையில்லாத குழப்பமும் காலதாமதமும் ஏற்படும்' என்று வாதிட்டார்.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், "நிபுணர்கள் குழுவை அமைப்பது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத் துறையும் தமிழக அரசும் நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம்' என்று கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.

    பின்னணி: தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் சென்னை துறைமுகம்-மதுரவாயல் இடையே சுமார் ரூ. 1,800 கோடி மதிப்பில் நான்கு வழி பறக்கும் சாலைத் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு 2008-ஆம் ஆண்டு டிசம்பரில் ஒப்புதல் தெரிவித்திருந்தது. மொத்தம் 18.3 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இத் திட்டத்துக்காக கூவம் ஆற்றின் நடுவே 35 தூண்களை தேசிய நெடுஞ்சாலைத் துறை எழுப்பியது. இதனால், கூவம் நதியின் நீரோட்டம் பாதிக்கப்படுவதாகக் கூறி திட்டத்துக்கு தமிழக அரசு கடந்த ஆண்டு தடை விதித்தது.

    இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறை வழக்குத் தொடர்ந்தது.

    தமிழக அரசின் உத்தரவுக்குத் தடை விதித்து, பறக்கும் சாலைத் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்தலாம் என்று கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai