Enable Javscript for better performance
முக்கிய பிரச்னைகளுக்கு பாஜகதான் தீர்வு காணும்- Dinamani

சுடச்சுட

    

    முக்கிய பிரச்னைகளுக்கு பாஜகதான் தீர்வு காணும்

    By புது தில்லி  |   Published on : 08th April 2014 12:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மக்களின் முக்கிய பிரச்னைகளுக்கு பாஜகவால் மட்டுமே தீóர்வு காண இயலும்' என்று அக் கட்சியின் சாந்தினி சௌக் மக்களவைத் தொகுதி வேட்பாளர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.

    அக் கட்சியின் தில்லி பிரதேச தலைவருமான அவர் திங்கள்கிழமை அளித்த பேட்டி: நாட்டில் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையில் ஆட்சி நடைபெற்ற போது மக்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்கள் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படுத்தப்பட்டன. எனினும், 2004-ஆம் ஆண்டில் வாஜ்பாய் தலைமையிலான அரசை மக்கள் ஆட்சியில் இருந்து அகற்றி மிகப் பெரிய தவறை செய்துவிட்டனர்.

    நாட்டில் 2004-ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் ஆதரவுடன் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மத்தியில் ஆட்சிக்கு வந்த போது வளர்ச்சியும், நேர்மறையின் சகாப்தமும் முடிவடைந்தது. தற்போதுள்ள நிலைமையை விட 2004-ஆம் ஆண்டில் மக்கள் நல்ல நிலையில் இருந்தனர். அதைத் தொடர்ந்து வந்த 10 ஆண்டுகளில் நாட்டில் ஊழல், விலைவாசி உயர்வு, வகுப்பு அரசியல், குறைபாடுடைய கொள்கைத் திட்டங்கள் ஆகியவை ஏற்பட்டன.

    இரண்டாம் உலகப் போரில் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் தலைமையிலான அணி வெற்றி பெற்றபோதிலும் 1945-ஆம் ஆண்டில் அவரை பிரிட்டிஷ் மக்கள் ஆட்சியிலிருந்து அகற்றினர். அதேபோன்று 2004-இல் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்று பாஜக ஓர் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்பட்டது.

    தற்போது நரேந்திர மோடிக்கு நாடு முழுவதும் மக்கள் செல்வாக்கு அதிகரித்துவருகிறது. நாடு முழுவதும் மோடி அலை வீசுகிறது. நாட்டு மக்களின் பல்வேறு முக்கிய பிரச்னைகளை பாஜகாவால் மட்டுமே தீர்க்க இயலும். தற்போது நாட்டு மக்கள் ஒரு செயல் திறமிக்க பிரதமரைப் பார்க்க விரும்புகின்றனர். இந்தியாவில் மிகச் சிறந்த பிரதமராக வாஜ்பாய் திகழ்ந்தார். அதற்குக் காரணம் அவரது உறுதியான தொலைநோக்குப் பார்வையும் அவர் ஒரு சர்வதேச ராஜதந்திரியாக இருந்ததும்தான்.

    தற்போதைய மக்களவைத் தேர்தலுக்கான பாஜக தேர்தல் பிரசாரத்தைப் பொருத்தமட்டில், நல்ல நிர்வாகம், குஜராத் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களின் மாதிரியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார வளர்ச்சி, மின் ஆளுகை மூலம் வெளிப்படைத் தன்மை ஆகியவற்றை பாஜக மக்களிடம் எடுத்துக் கூறி வருகிறது.

    அதேபோன்று சீனாவின் ஊடுருவல் மற்றும் பாகிஸ்தான் மீதான அச்சம் ஆகியவற்றில் இருந்து மக்களளை விடுவிக்கச் செய்யும் உறுதியை அளித்துள்ள ஒரே கட்சி பாஜகதான்.

    கல்வி, பயிற்சி வசதிகள், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவை மூலம் இளைஞர்களின் நிலைமையை உயர்த்துவதை பாஜக நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார் ஹர்ஷ் வர்தன்.

    தில்லி பாஜக மக்களவை தேர்தல் நிர்வாகம் மற்றும் பிரசார குழுவின் தலைவர் பேராசிரியர் விஜய் குமார் மல்ஹோத்ரா கூறுகையில், "தில்லியின் அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் வாக்காளர்களிடம் வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்யும் பணியை பாஜக தொண்டர்கள் செய்துவருகின்றனர்' என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai