Enable Javscript for better performance
வரதட்சிணைக் கொடுமை வழக்கில் கணவர் விடுதலை- Dinamani

சுடச்சுட

    

    வரதட்சிணைக் கொடுமை வழக்கில் போதிய சாட்சியங்கள், ஆதாரங்கள் இல்லாததால் கணவரை விடுவித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்த வழக்கு விவரம் வருமாறு: தில்லியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவருக்கும் சந்தோஷ் என்பவருக்கும் 1982-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு ராஜ்குமாரும் அவரது குடும்பத்தினரும் கூடுதல் வரதட்சிணை கேட்டு சந்தோஷை கொடுமைப்படுத்தியதாக புகார் எழுந்தது.

    இந் நிலையில், 2000-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8-ஆம் தேதி சந்தோஷ் போலீஸில் புகார் அளித்தார். அதில், தனது கணவர் ராஜ்குமாரும் குடும்பத்தினரும் கூடுதல் வரதட்சிணை கேட்டு தன்னை தன்னை உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் துன்புறுத்துவதாக தெரிவித்திருந்தார்.

    அதன்பேரில், போலீஸார் வரதட்சிணைக் கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் ராஜ்குமார், அவரது சகோதரர், பெற்றோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

    இது தொடர்பான வழக்கு தில்லி பெருநகர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இந்த வழக்கின் போது நீதிமன்றத்தில் ஆஜரான ராஜ்குமார், "என் மீது வேண்டுமென்றே மனைவி தரப்பில் பொய்ப் புகார் அளிக்கப்பட்டுள்ளது' என்று முறையிட்டார்.

    இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு பெருநகர் மாஜிஸ்திரேட் கீதாஞ்சலி அளித்த உத்தரவு:

    கணவர் கொடுமைப்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாருக்கு வலுசேர்க்கும் தெளிவான ஆதாரங்கள் இல்லை. இந்த வழக்கில் தொடர்புடைய பெண்ணை அவரது கணவர் கொடுமைப்படுத்தியற்கான உரிய ஆதாரங்களை அளிக்க அரசுத் தரப்பும் தவறிவிட்டது.

    மேலும், திருமணத்தின் போது போதுமான வரதட்சிணை அளிக்கப்பட்டதாகப் புகார்தாரர் தெரிவித்திருந்தபோதிலும், அவை சொந்த விருப்பத்தின் பேரில் தரப்பட்டதாக அவரே கூறியுள்ளார். அதனால், குற்றம்சாட்டப்பட்ட ராஜ்குமாரை வழக்கில் இருந்து விடுவித்து நீதிமன்றம் உத்தரவிடுகிறது என்று நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டார்.

    இது தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தால் ராஜ்குமாரின் பெற்றோரும் சகோதரரும் ஏற்கெனவே விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai