Enable Javscript for better performance
\\\"காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சிகளுக்கு தோல்வி நிச்சயம்\\\'- Dinamani

சுடச்சுட

    

    "காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சிகளுக்கு தோல்வி நிச்சயம்'

    By புது தில்லி  |   Published on : 09th April 2014 12:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    : வரும் மக்களவைத் தேர்தலில் தில்லியில் காங்கிரஸ், ஆம்ஆத்மி ஆகிய கட்சிகளுக்கு தோல்வி நிச்சயம் என்று பாஜக மூத்த தலைவர் விஜய்குமார் மல்ஹோத்ரா தெரிவித்தார்.

    மக்களவைத் தேர்தலுக்கான இறுதிகட்ட தேர்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலையுடன் ஓய்ந்தது. இதையொட்டி பிரதேச பாஜக தலைமையகத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

    தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவைப்போலவே, மக்களவைத் தேர்தலிலும் வெற்றி வாய்ப்பு இல்லை என்பதை காங்கிரஸ் கட்சி நன்கு உணர்ந்துள்ளது. அதனால்தான் அக் கட்சித் தலைவர்கள் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் மிகப் பெரிய அளவில் ஈடுபாடு காட்டவில்லை.

    அதன் மூத்த தலைவர்கள் பலரும் தேர்தல் பிரசாரத்துக்கு வரவில்லை. பிரதமர் மன்மோகன் சிங்கூட தில்லியில் பிரசாரம் செய்ய ஆர்வம் காட்டவில்லை.

    ஆனால், ஆம்ஆத்மி கட்சித் தலைவர்கள் தில்லியில் குறைந்தது 4 முதல் 5 இடங்களைக் கைப்பற்றுவோம் என்று பிரசாரம் செய்துவருகின்றனர்.

    ஊடகங்கள், சமூக ஆய்வு அமைப்புகள் உள்ளிட்டவை நடத்திய கருத்துக் கணிப்புகளில் கூட காங்கிரஸýக்கும் ஆம்ஆத்மி கட்சிக்கும் வெற்றி வாய்ப்பு உறுதி என்பதைத் தெரிவிக்கவில்லை. தில்லியை பொருத்தவரை, ஆம்ஆத்மி கட்சிக்கு கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது மக்களிடையே காணப்பட்ட ஆதரவு அலை இப்போது நீடிக்கவில்லை.

    முந்தைய தேர்தலின் போது கொள்கைக்கு முரணாக காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியை அமைத்த ஆம்ஆத்மி கட்சி, கவர்ச்சிகர வாக்குறுதிகளை நிறைவேற்றத் துணிவின்றி, 49 நாள்கள் மட்டுமே ஆட்சியில் இருந்தது. அதன் செயல்பாடு மக்களால் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. மக்களை நேரடியாக சந்திக்க தைரியம் இல்லாமல் தெருமுனைக் கூட்டங்கள், வீதியோர நாடகங்கள் நடத்தி பிரசாரம் செய்யும் நடவடிக்கையை ஆம்ஆத்மி மேற்கொண்டுள்ளது. ஆனால், வீதி, வீதியாக மக்களைச் சந்தித்துப் பிரசாரம் செய்ய அக் கட்சிக்கு ஆர்வம் இல்லை. செல்லும் இடங்களில் எல்லாம் மக்களின் ஏளனங்களை அக்கட்சித் தலைவர்கள் சந்தித்துவருகின்றனர்.

    சாதாரண மக்களுக்காக தொடங்கப்பட்டதாகக் கூறப்பட்ட ஆம்ஆத்மி கட்சியின் பெரும்பாலான வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள். அதன் வேட்பாளர்களில் சுமார் 50 சதவீதத்தினர் குற்றப் பின்னணி உடையவர்கள்.

    ஜுக்கி-ஜோப்ரி குடிசைப் பகுதிகள், அங்கீகாரமற்ற காலனிகள், கிராமப்புற தில்லி, நடுத்தர வர்க்கம் ஆகியவைதான் ஆம்ஆத்மி கட்சியின் வாக்கு வங்கியாக கடந்த தேர்தலில் விளங்கின. ஆனால், அந்த வாக்கு வங்கிகள் இம் முறை அக்கட்சிக்கு எதிராகத் திரும்பியுள்ளது.

    அதன் தலைவர்களை நம்பி வாக்களித்ததன் பயனை தில்லிவாசிகள் உணர்ந்துவிட்டனர். இத்தகைய சூழலில் காங்கிரஸ், ஆம்ஆத்மி ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக நிரந்தரமாக ஆட்சி அமைக்கக் கூடிய தகுதியும் திறனும் பாஜகவுக்கு மட்டுமே உள்ளது என்று தில்லிவாசிகள் நம்புகின்றனர்.

    ஆகவே, வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ், ஆம்ஆத்மி ஆகிய கட்சிகள் நிச்சயம் தோல்வியைத் தழுவப் போகின்றன என்றார் மல்ஹோத்ரா.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai