Enable Javscript for better performance
\\\"டிசம்பர் 16\\\' பாலியல் வழக்கு: குற்றவாளிகளின் தூக்கு தண்டனைக்கு விதித்த தடை நீடிப்பு- Dinamani

சுடச்சுட

    

    "டிசம்பர் 16' பாலியல் வழக்கு: குற்றவாளிகளின் தூக்கு தண்டனைக்கு விதித்த தடை நீடிப்பு

    By புது தில்லி  |   Published on : 09th April 2014 12:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

     தில்லியில் துணை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் முகேஷ் சர்மா, பவன் குப்தா ஆகியோரின் தூக்கு தண்டனைக்கு விதித்த இடைக்கால தடையை உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.

    இது தொடர்பாக அவர்கள் இருவரின் சார்பில் வழக்குரைஞர் மனோகர் லால் சர்மா தாக்கல் செய்த மனு நீதிபதிகள் பி.எஸ். செüஹான், ஜே. செலமேஸ்வர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

    அப்போது, "துணை மருத்துவ மாணவிக்கு சிகிச்சை அளித்த சிங்கப்பூர் மருத்துவமனை, பின்னர் அவர் உயிரிழந்ததும் நடத்திய பிரேத பரிசோதனை அறிக்கை இதுவரை கிடைக்கவில்லை.

    ஆகவே, அந்த அறிக்கையை தாக்கல் செய்யும் வரை இருவருக்கு விரைவு நீதிமன்றம் அளித்த தண்டனைக்கு விதித்த இடைக்காலத் தடையை நீட்டிக்க வேண்டும்' என்று வழக்குரைஞர் மனோகர் லால் சர்மா கோரினார்.

    அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், "இருவருக்கும் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறைவேற்ற பிறப்பிக்கப்பட்ட தடை வரும் 14-ஆம் தேதி வரை நீடிக்கும்' என்றனர்.

    தில்லியில் ஓடும் பேருந்தில் 2012-ஆம் ஆண்டு டிசம்பர் 16-ஆம் தேதி துணை மருத்துவ மாணவியை ஆறு பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது. இதனால் பாதிக்கப்பட்ட அந்த மாணவி சிகிச்சை பலனின்றி அதே ஆண்டு டிசம்பர் 29-ஆம் தேதி சிங்கப்பூரில் உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான ராம் சிங் விசாரணை காலத்திலேயே தில்லி திஹார் சிறையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மைனர் நபர் மீதான வழக்கு சிறார் நீதிமன்றத்தில் நடத்தப்பட்டு மூன்று ஆண்டுகள் அவரை காப்பகத்தில் வைத்திருக்க உத்தரவிட்டது.

    மற்ற குற்றவாளிகள் முகேஷ் சர்மா, பவன் குப்தா, அக்ஷய் தாக்குர், வினய் சர்மா ஆகியோருக்கு பாலியல் வழக்குகளை விசாரிக்கும் தெற்கு தில்லி விரைவு நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பரில் தூக்குத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

    அத் தண்டனையை பின்னர் தில்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. இந் நிலையில், உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து குற்றவாளிகளின் சார்பில் வழக்குரைஞர் எம்.எல். சர்மா உச்ச நீதிமன்றத்தில் கடந்த மாதம் மனு தாக்கல் செய்திருந்தார். அதை கடந்த 16-ஆம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், தண்டனையை நிறைவேற்ற 31-ஆம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்திருந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai