Enable Javscript for better performance
தில்லியில் பிரசாரம் ஓய்ந்தது; நாளை வாக்குப்பதிவு- Dinamani

சுடச்சுட

    

    தில்லியில் பிரசாரம் ஓய்ந்தது; நாளை வாக்குப்பதிவு

    By புது தில்லி,  |   Published on : 09th April 2014 12:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி பிரதேசத்தில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது. இறுதிகட்ட பிரசாரத்தின்போது வாக்காளர்களைக் கவர்வதில் அனைத்து அரசியல் கட்சிகளும் முனைப்புக் காட்டின.

    தில்லி பிரதேசத்தில் மொத்தமுள்ள 7 மக்களவைத் தொகுதிகளிலும் வியாழக்கிழமை (ஏப்ரல் 10) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காங்கிரஸ், பாஜக, ஆம்ஆத்மி, பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் தங்களது வேட்பாளர்களை களத்தில் இறக்கியுள்ளன.

    பெரும்பாலான தொகுதிகளில் பாஜக-ஆம்ஆத்மி-காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளுக்கிடையேதான் போட்டி இருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக பாஜக-ஆம்ஆத்மி கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

    பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி ஆகிய மூன்று கட்சிகளும் அனைத்துத் தொகுதிகளிலும் திங்கள், செவ்வாய் ஆகிய இரு தினங்களிலும் பேரணி, பொதுக்கூட்டம் ஆகியவற்றை நடத்தின. இதில் கட்சியின் முன்னணித் தலைவர்கள் பங்கேற்று வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டுப் பிரசாரம் செய்தனர். வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டனர்.

    பாஜக: பாஜக மூத்த தலைவர்களில் பெரும்பாலோர் தலைநகரில் முகாமிட்டு தேர்தல் பிரசாரம் செய்தனர். பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை விளக்கினர். மேலும், ஊழல் கட்சியான காங்கிரûஸ தூக்கி எறிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அக் கட்சியின் பிரதேச தலைவர் ஹர்ஷ் வர்தன் காங்கிரஸ், ஆம்ஆத்மி ஆகிய இரு கட்சிகளையும் கடுமையாகச் சாடினார்.

    காங்கிரஸ்: காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ஏற்கெனவே பிரசாரம் செய்திருந்தனர். இந் நிலையில், ஞாயிற்றுக்கிழமை தக்ஷிணபுரியில் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததாக அக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் முகேஷ் சர்மா தெரிவித்துள்ளார். இதையடுத்து, கடைசி கட்ட பிரசாரமும் தீவிரப்படுத்தப்பட்டதாக அவர் கூறினார். அக் கட்சியின் பிரதேச தலைவர் அர்விந்தர் சிங் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற இறுதிக் கட்ட பிரசாரத்தில் பங்கேற்றார்.

    ஆம்ஆத்மி: ஆம்ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் வீதி வீதியாக நடத்தினார். திங்கள், செவ்வாய் ஆகிய இரு தினங்களிலும் நகரின் பல்வேறு இடங்களில் திறந்த ஜீப்பில் சென்று பிரசாரம் மேற்கொண்டார்.

    தில்லி பிரதேசத்தில் கடைசி நிலவரப்படி மொத்த வாக்காளர்கள் 1,27,06,372 பேர். இதில் 70,47,885 பேர் ஆண்கள். 56,57,648 பேர் பெண்கள். மற்றவர்கள் 638 பேர் உள்ளனர். கடந்த 2009 தேர்தலின்போது மொத்த வாக்காளர் எண்ணிக்கை 1.11 கோடியாக இருந்தது. கடந்த மக்களவை தேர்தலில் 7 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

    முக்கிய வேட்பாளர்கள்: இத் தேர்தலில் மத்திய அமைச்சர்கள் கபில் சிபல், அஜய் மாக்கன், கிருஷ்ணா தீரத், முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தின் மகன் சந்தீப் தீட்சித், ஜெய் பிரகாஷ் அகர்வால், பாஜக பிரதேச தலைவர் ஹர்ஷ் வர்தன், மீனாட்சி லேகி, போஜ்பூரி பாடகரும் நடிகருமான மனோஜ் திவாரி, தலித் தலைவர் உதித் ராஜ், ஆம்ஆத்மியின் இளம் வேட்பாளர் ராக்கி பிர்லா, ஆசுதோஷ், காந்திஜியின் பேரன் ராஜ்மோகன் காந்தி உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai