Enable Javscript for better performance
தில்லி பல்கலை. பேராசிரியர் மீது ஷூ பாலிஷ் வீசிய மாணவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    தில்லி பல்கலை. பேராசிரியர் மீது ஷூ பாலிஷ் வீசிய மாணவர் கைது

    By புது தில்லி  |   Published on : 09th April 2014 12:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி பல்கலைக்கழக பேராசிரியர் மீது ஷூ பாலிஷ் வீசிய மாணவரை போலீஸார் கைது செய்தனர்.

    தில்லி பல்கலைக்கழகத்தில் உள்ள சௌத் கேம்பஸ் கல்வி வளாகத்தின் இயக்குநராக பேராசிரியர் உமேஷ் ராய் பணியாற்றிவருகிறார். இவர் விலங்கியல் துறைக்கும் தலைமை வகிக்கிறார். இந் நிலையில், பல்கலைக்கழக நார்த் கேம்பஸ் கல்வி வளாகத்தில் உள்ள ஆய்வகத்தில் அவர் இருந்தபோது, அங்கு பல்கலைக்கழக மாணவரணித் தலைவர் ராஜு ராவத் தலைமையிலான மாணவர்கள் குழுவினர் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவரைச் சூழ்ந்து கொண்டு கேலி செய்ததாகக் கூறப்படுகிறது.

    அதைத் தொடர்ந்து, உமேஷ் ராய் மீது அக் குழுவினர் கருப்பு ஷூ பாலிஷ் வீசினர். மேலும், மாணவர்களுக்கு விரோதமாக செயல்பட்டால் விபரீதத்தை சந்திக்க நேரிடும் என்றும் அவர்கள் எச்சரித்து விட்டுச் சென்றனர்.

    இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பல்கலைக்கழக நிர்வாகம் போலீஸில் புகார் அளித்தது. அதன் பேரில், போலீஸார் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து. விசாரணை முடிவில், ராஜு ராவத்தை போலீஸார் திங்கள்கிழமை இரவு கைது செய்தனர்.

    இது குறித்து வடக்கு தில்லி காவல் துறை துணை ஆணையர் சிந்து பிள்ளை செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறுகையில், "ராஜு ராவத், ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவிலும் உறுப்பினராக உள்ளார். பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்காதது தொடர்பாக விளக்கம் கேட்க இயக்குநரை அவரது தலைமையிலான குழுவினர் சென்றுள்ளனர்.

    அப்போது இயக்குநர் ராய், நரேந்திர மோடி குறித்த தவறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த ராவத், கருப்பு ஷூ பாலிஷை அவர் மீது வீசியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அரசு ஊழியரை கடமையாற்ற விடாமல் தடுத்தது தொடர்பான சட்டப் பிரிவின் கீழ் ராஜு ராவத் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம்' என்றார்.

    இதற்கிடையே, பேராசிரியர் மீதான தாக்குதலைக் கண்டித்து, தேசிய மாணவர்கள் பேரவை அமைப்பு சார்பில் ஜந்தர் மந்தரில் ஒரு பிரிவு மாணவர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai