Enable Javscript for better performance
ரூ. 8 லட்சத்துடன் ஏடிஎம் இயந்திரத்தை கொள்ளையடித்த கும்பல்- Dinamani

சுடச்சுட

    

    ரூ. 8 லட்சத்துடன் ஏடிஎம் இயந்திரத்தை கொள்ளையடித்த கும்பல்

    By புது தில்லி,  |   Published on : 09th April 2014 12:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லியில் ரூ. 8 லட்சம் வைக்கப்பட்டிருந்த ஒரு பொதுத் துறை வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை 6 பேர் கொண்ட கும்பல் அதிகாலை நேரத்தில் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இது குறித்து போலீஸார் திங்கள்கிழமை கூறியது: இக் கொள்ளை சம்பவம் வடகிழக்கு தில்லி, பஜன்புராவில் உள்ள சுபாஷ் மார்க்கெட் பகுதியில் நிகழ்ந்துள்ளது.

    கொள்ளையர்கள் ஏடிஎம் இயந்திரத்தை மட்டுமின்றி, சிசிடிவி கேமரா மற்றும் அதில் பதிவான காட்சிகள் அடங்கிய ரெக்கார்டர்களையும் அவர்கள் எடுத்துச் சென்றுவிட்டனர்.

    இருப்பினும், அருகில் உள்ள நகைக் கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமாராவில் கொள்ளையர்கள் நடமாட்டம் பதிவாகியுள்ளது. அந்த ஏடிஎம் உள்ள இடத்தில் காவலாளி யாரும் இல்லை. சிசிடிவி கேமாரவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில் சில தகவல்கள் கிடைத்துள்ளன.

    கொள்ளையர்கள் பச்சை நிற மினி டிரக்கில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமார் 2.35 மணியளவில் வந்துள்ளனர். ஏடிஎம் இயந்திரத்தை அதிகாலை 3.05 மணிக்கு எடுத்துச் சென்றுள்ளனர். அதில் வந்தவர்களில் சிலர் முகத்தை மூடிக் கொண்டிருந்த நிலையில் இருந்துள்ளனர். மற்றவர்களின் முகம் சிசிடிவி கேமாராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது.

    அவர்கள் ஏடிஎம் உள்ள அறையில் நுழைந்ததும், அந்த இயந்திரத்தின் அடிப்பகுதியை கேஸ் கட்டர் கொண்டு அறுத்து இயந்திரத்தை அகற்றி டிரக்கில் ஏற்றியுள்ளனர். அவர் ஏடிஎம் அறைக்கு சென்றபோது அப் பகுதியில் இருந்த நாய்கள் குரைத்துள்ளன. ஆனால், அவர்கள் பிஸ்கட்டுகளைக் கொடுத்ததும் குரைப்பதை நாய்கள் நிறுத்திக் கொண்டுள்ளன.

    இதிலிருந்து கொள்ளையடிப்பதற்கு தயாராகவே அவர்கள் வந்துள்ளது தெரியவருகிறது. இந்த சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. ஏடிஎம் இயந்திரத்தில் ரூ. 7.88 லட்சம் வைக்கப்பட்டிருந்ததாகத் தெரியவந்துள்ளது.

    வங்கி அதிகாரிகள் அந்த ஏடிஎம் மையத்துக்கு பணத்தை நிரப்ப வந்த போதுதான் ஏடிஎம் இயந்திரம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது என்று போலீஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர்களைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது என்று போலீஸார் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai