Enable Javscript for better performance
வாக்குப்பதிவுக்கு ஏற்பாடுகள் தயார்- Dinamani

சுடச்சுட

    

    தில்லியில் மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலையுடன் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து வியாழக்கிழமை (ஏப்ரல் 10) வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

    இது குறித்து தில்லி தலைமைத் தேர்தல் அதிகாரி விஜய் தேவ் செவ்வாய்க்கிழமை நிருபர்களிடம் கூறியது: தில்லி பிரதேசத்தில் சாந்தினி செüக், வடகிழக்கு தில்லி, கிழக்கு தில்லி, புது தில்லி, வடமேற்கு தில்லி (தனி), மேற்கு தில்லி, தெற்கு தில்லி ஆகிய 7 மக்களவைத் தொகுதிகளிலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

    தில்லி பிரதேசத்தில் தற்போதைய நிலவரப்படி 1,27,06,372 பேர் வாக்களிக்கத் தகுதி வாய்ந்தவர்களாக தேர்தல் ஆணையம் கண்டறிந்துள்ளது. இதில் ஆண்கள் 70,47,885 பேர், பெண்கள் 56,57,648 பேர், மற்றவர்கள் 839 பேர் உள்ளனர்.

    தில்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளிலும் மொத்தம் 11,763 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 417 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், 90 வாக்குச்சாவடிகள் மிகப் பதற்றமானவை என்றும் கண்டறியப்பட்டுள்ளன. 70 மாதிரி வாக்குச்சாவடிகளும் அமைக்கப்படவுள்ளன.

    வாக்காளர்கள் வியாழக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 வணி வரை வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்கலாம். முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க வசதியாக சிறப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

    பதற்றனமான, மிகப் பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேர்தலை அமைதியாகவும் பாதுகாப்பாகவும் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

    வாக்குப்பதிவை முழுமையாக விடியோ மூலம் பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இப் பகுதிகளில் கூடுதல் போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். வாக்குச்சாவடிகள் அனைத்திலும் மொபைல் போன்களை எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    வாக்குப்பதிவு விகிதத்தை அதிகரிக்கும் வகையில், ஏற்கெனவே பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த இரண்டு நாள்களாக மொபைல் போன்கள் வழியாக "வாக்களிக்கும் உரிமையை மறக்க வேண்டாம்' என்று தில்லிவாசிகளுக்கு குறுந்தகவல்களும் அனுப்பப்பட்டு வருகின்றன என்றார் விஜய் தேவ்.

    நாளை அரசு விடுமுறை: தில்லியில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் நாளான வியாழக்கிழமை (ஏப்ரல் 10) அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் உள்பட அனைத்து அலுவலக ஊழியர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை விடப்பட்டுள்ளதாக தில்லி அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai