Enable Javscript for better performance
வாராணசியில் மோடிக்கு எதிராக காங்கிரஸ் எம்எல்ஏ போட்டி- Dinamani

சுடச்சுட

    

    வாராணசியில் மோடிக்கு எதிராக காங்கிரஸ் எம்எல்ஏ போட்டி

    By புது தில்லி,  |   Published on : 09th April 2014 12:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசி தொகுதியில் பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி, ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் ஆகியோருக்கு எதிராக அப்பகுதி எம்எல்ஏ அஜய் ராயை வேட்பாளராக காங்கிரஸ் கட்சி செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

    மோடிக்கு எதிராக போட்டியிட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் விருப்பம் தெரிவித்திருந்தபோதிலும், நீண்ட ஆலோசனைக்கு பிறகு அஜய் ராயை அக்கட்சி தேர்ந்தெடுத்துள்ளது.

    வாராணசி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட பிண்ட்ரா தொகுதியின் எம்எல்ஏவான அஜய் ராய், கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சமாஜவாதி கட்சியின் சார்பில் போட்டியிட்டு, பாஜக வேட்பாளர் முரளி மனோகர் ஜோஷியிடம் தோல்வியடைந்தார். அந்தத்தேர்தலில் ராய் 3-வது இடமும், பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் முக்தார் அன்சாரி 2-வது இடமும் பெற்றனர்.

    அதன்பின்னர் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு அஜய் ராய் எம்எல்ஏ ஆனார்.

    இந்த 2 கட்சிகளில் சேர்வதற்கு முன்பு அஜய் ராய் பாஜகவிலும் இருந்துள்ளார்.

    அஜய் ராய் தேர்வு குறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா, "காங்கிரஸ் கட்சியின் அடிமட்டத் தொண்டரான அஜய் ராய் அப்பகுதியில் நடைபெற்ற பல்வேறு தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி கண்டுள்ளார்.

    அந்தப் பகுதியின் எம்எல்ஏவான அஜய் ராய் தொகுதி மக்களின் கோரிக்கையை நன்கு அறிந்துள்ளார். மக்களின் ஆதரவை அஜய் ராய் நிச்சயம் பெறுவார்' என்று கூறினார்.

    நரேந்திர மோடி போட்டியிடும் மற்றொரு தொகுதியான குஜராத் மாநிலம் வதோதராவில் கட்சியின் தேசியச் செயலாளரான மதுசூதன் மிஸ்திரியை களம் இறக்கிய காங்கிரஸ், வாராணசியில் மோடிக்கு எதிராக வலுவான வேட்பாளரை களம் இறக்கவில்லையே என்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி தொகுதியில், பாஜக வலுவான வேட்பாளரை களம் இறக்காததற்கு இது கைமாறா? என்றும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    இவை அனைத்துக்கும் மறுப்பு தெரிவித்த ரண்தீப் சுர்ஜேவாலா, வாராணசி தொகுதியில் போட்டியிடும் அஜய் ராய்க்கு பாஜகவுக்கு எதிராக உள்ள பிற கட்சிகளும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai