Enable Javscript for better performance
3 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்: பயணிகள் அவதி- Dinamani

சுடச்சுட

    

    3 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்: பயணிகள் அவதி

    By புது தில்லி,  |   Published on : 09th April 2014 12:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லியில்ஜோர் பாக், ஐஎன்ஏ, ரேஸ் கோர்ஸ் ஆகிய 3 மெட்ரோ ரயில் நிலையங்கள் செவ்வாய்க்கிழமை மூடப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

    தில்லி ஜோர் பாக் பகுதியில் உள்ள நிலத்தில் உள்ள மசூதியை அகற்றும் விவகாரத்தில் அரசுக்கு சாதகமாக தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதற்கு எதிராக தில்லியில் ஒரு பிரிவு முஸ்லிம்கள் கடந்த சில மாதங்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    அவ்வப்போது வன்முறையும் வெடித்துள்ளது. இதனால், அப் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இப் போராட்டத்துக்கு ஆதரவாக உத்தர பிரதேச மாநிலம், காஜியாபாத் பகுதியில் உள்ள ஒரு பிரிவு முஸ்லிம்களும் ஜோர் பாக் வந்து வன்முறையில் ஈடுபடக் கூடும் என்று காவல் துறைக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, உத்தர பிரதேசத்தில் இருந்து காஜியாபாதை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் செவ்வாக்கிழமை காலை 8 மணி முதல் தீவிர வாகன தணிக்கை செய்யப்பட்டது. இதேபோல, மசூதி அமைந்துள்ள ஜோர் பாக் பகுதியிலும் ஏராளமான மத்திய துணை ராணுவப் படையினர், தில்லி போலீஸார் குவிக்கப்பட்டனர்.

    இந் நிலையில், மெட்ரோ ரயில் வழியாக போராட்டக் குழுவினர் ஜோர் பாக் வரக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    இதையடுத்து, ஜோர் பாக், அதன் அருகே உள்ள ஐஎன்ஏ, ரேஸ் கோர்ஸ் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களை மூடும்படி தில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனை (டிஎம்ஆர்சி) தில்லி போலீஸ் கேட்டுக் கொண்டது. அதன்படி செவ்வாய்க்கிழமை காலை 10.17 மணிக்கு ஐஎன்ஏ, ஜோர் பாக் ரயில் நிலையங்களின் புறக் கதவுகள் மூடப்பட்டன. பகல் 1.35 மணி முதல் ரேஸ் கோர்ஸ் ரயில் நிலைய புறக் கதவுகளும் மூடப்பட்டன.

    இதன் எதிரொலியாக, மூன்று மெட்ரோ ரயில் நிலையங்களிலும் ரயில்கள் நிற்காமல் சென்றன. வெளியிலிருந்தும் பயணிகள் நிலையத்துக்கு உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    இந் நிலையில், மாலை 4.30 மணிக்கு பிறகு ஜோர் பகுதியில் பதற்றம் தணிந்தது. அதைத் தொடர்ந்து, மாலை 4.55 மணிக்கு போலீஸார் அறிவுறுத்தலின்படி மூன்று மெட்ரோ ரயில் நிலைய கதவுகளும் திறக்கப்பட்டன.

    இதற்கிடையே, தில்லியில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 10-ஆம் தேதி நடைபெறவுள்ளதால், மெட்ரோ ரயில் சேவை அதிகாலை 4 மணி முதல் தொடங்கும் என்றும், காலை 5 மணி வரை அரை மணி நேரத்துக்கு ஒரு முறை ரயில் சேவை இருக்கும் என்றும் டிஎம்ஆர்சி தெரிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai