Enable Javscript for better performance
ஓபிசி பட்டியலில் ஜாட் பிரிவு சேர்ப்புக்கு தடையில்லை- Dinamani

சுடச்சுட

    

    பிற பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் "ஜாட்' பிரிவினரை சேர்க்க மத்திய அரசு எடுத்த முடிவுக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் புதன்கிழமை மறுத்து விட்டது.

    இது தொடர்பாக "ஓபிசி இடஒதுக்கீடு பாதுகாப்பு அமைப்பு' சார்பில் நீதிமன்றத்தில் கடந்த மாதம் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதன் மீது தலைமை நீதிபதி பி. சதாசிவம் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது.

    அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கே.கே. வேணுகோபால், பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர் பட்டியலில் "ஜாட்' சமுதாயத்தைச் சேர்க்கும் அரசாணையை மத்திய அரசு கடந்த மார்ச் 4-ஆம் தேதி வெளியிட்டது. அன்றைய தினம்தான் மக்களவைத் தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. வட மாநிலங்களில் பெரும்பான்மையாக உள்ள ஜாட் சமுதாய வாக்குகளைக் கவரும் வகையில் மத்திய அரசின் நடவடிக்கை அமைந்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகளையும் அது மீறுவதாக உள்ளது. ஆகவே, ஜாட் சமுதாயத்தை ஓபிசி பட்டியலில் சேர்த்த மத்திய அரசின் நடவடிக்கைக்குத் தடை விதிக்க வேண்டும்' என்று வாதிட்டார்.

    அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் "இந்த விவகாரத்தில் இப்போது தலையிட நீதிமன்றம் விரும்பவில்லை. அரசு ஏற்கெனவே எடுத்த முடிவைத்தான் அரசாணை மூலம் செயல்படுத்தியுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கும், இந்த நடவடிக்கைக்கும் தொடர்பு இருப்பதாகத் தோன்றவில்லை' என்றனர்.

    அப்போது, "ஜாட்' சமுதாயத்தை பிற பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசு மேற்கொண்ட முடிவு, அமைச்சரவையில் அளிக்கப்பட்ட ஒப்புதல், அதன் பிறகு அதை அரசாணையில் வெளியிட எடுத்த நடவடிக்கை போன்றவற்றை விவரிக்கும் ஆவணங்களை மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர் பராசரன் தாக்கல் செய்தார்.

    இதையடுத்து "இந்த ஆவணங்களை மனுதாரரின் மனுவுக்கு அளிக்கும் பதில் மனுவாக முறைப்படி மத்திய அரசு தாக்கல் செய்யட்டும். தற்போதைய நிலையில், மனுதாரரின் கோரிக்கைப்படி அரசாணைக்குத் தடை விதிக்க முடியாது. இந்த மனு மீதான அடுத்த விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது' என்று நீதிபதிகள் கூறினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai