Enable Javscript for better performance
கபில் சிபல் வேட்புமனுவை ரத்து செய்ய வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    மத்திய அமைச்சர் கபில் சிபல் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டைத் தொடர்ந்து அவரது வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் அசுதோஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.

    தில்லி பிரதேசத்தில் மக்களவைத் தேர்தல் வியாழக்கிழமை (ஏப்ரல் 10) நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலையுடன் ஓய்ந்தது. சாந்தினி செளக் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபலும், ஆம்ஆத்மி கட்சியின் சார்பில் அசுதோஷும் போட்டியிடுகின்றனர். இத் தொகுதியில் பாஜக சார்பில் ஹர்ஷ் வர்தன் களத்தில் உள்ளார்.

    இந் நிலையில், தொகுதி வாக்காளர்களுக்கு மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபல் பணம் விநியோகம் செய்து வருவதாகவும், அவரது வேட்புமனுவை ரத்து செய்ய வேண்டும் என்றும் அசுதோஷ் புகார் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தனது டுவிட்டர் இணையதளத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர், "சாந்தினி சௌக்கில் வாக்காளர்களுக்குப் பணம் விநியோகம் தொடர்பான புகார் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில், தொடர்புடையவர்களைக் கைது செய்ய வேண்டும். மேலும், இத் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ள காங்கிரஸ் வேட்பாளர் கபில் சிபலின் வேட்புமனுவை ரத்து செய்ய வேண்டும்' என்று கூறியுள்ளார்.

    "கபில் சிபல் போன்ற தலைவர்கள் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது என்பது தாங்கள் தோற்றுவிடுவோம் என்ற அச்சத்தில்தான். ஆகவே, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், அவரது கட்சியும் இந்த விவகாரத்தை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அவரைக் கட்சியில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai