Enable Javscript for better performance
காஜியாபாதில் 2.50 லட்சம் போலி வாக்காளர்கள்- Dinamani

சுடச்சுட

    

    காஜியாபாத் மக்களவைத் தொகுதியில் சுமார் 2.50 லட்சம் போலி வாக்காளர்கள் உள்ளதாகவும், இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் இத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் முன்னாள் ராணுவத் தலைமை தளபதி வி.கே. சிங் புகார் தெரிவித்துள்ளார்.

    காஜியாபாத் மக்களவைத் தொகுதி தலைநகர் வலயத்தில் இருந்தாலும் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தது. இத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராஜ் பப்பர், பாஜக சார்பில் முன்னாள் ராணுவத் தளபதி வி.கே. சிங், ஆம் ஆத்மி சார்பில் ஷாஸியா இல்மி, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் முகுல் உபாத்யாய, சாமாஜ்வாதி கட்சி சார்பில் சுகன் ராவத் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    லோனி, முராத்நகர், சாஷிபாபாத், காஜியாபாத், தெளலானா ஆகிய 5 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய காஜியாபாத் மக்களவைத் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. சுமார் 22.64 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட இத் தொகுதியில் சுமார் 2.50 லட்சம் போலி வாக்காளர்கள் இருப்பதாக வி.கே. சிங் புகார் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இத் தொகுதியில் வாக்காளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே குடும்பத்தில் பெற்றோருடன் சேர்ந்து வாழும் நபர்கள், வாக்காளர்கள் அடையாள அட்டையுடன் கூடிய தனி வாக்காளர் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளனர்.

    இதுபோன்று தொகுதி முழுவதும் சுமார் 2.50 லட்சம் போலி வாக்காளர்கள் உள்ளனர். இது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளோம். அவர்கள் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறோம். இதுவரை இது தொடர்பாக எவ்விதத் தகவலும் தேர்தல் ஆணையத்திடம் இருந்து எங்களுக்குக் கிடைக்கப் பெறவில்லை.

    இப்போலி வேட்பாளர்களை யார் சேர்த்தார்கள் என்பது பற்றி கருத்து ஏதும் கூறமாட்டேன். ஆனால், போலி வாக்காளர்கள் இருப்பது உண்மை.

    தொகுதியில் பல வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை இன்னும் கிடைத்தபாடில்லை. அதற்கான ரசீது மட்டும் அவர்கள் வைத்துள்ளனர். தொகுதியில் உள்ள தௌலானா பகுதியில் கட்சி அலுவலகத்தைத் திறப்பதற்கு பகுஜன் சமாஜ் கட்சியினர் இடையூறு ஏற்படுத்துகின்றனர்.

    இது தொடர்பாகவும் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றால் அங்கு 144 தடையுத்தரவு அமலில் இருப்பதாகக் கூறி உள்ளூர் கோட்டாட்சியர் கூறுகிறார்.

    காஜியாபாத் தொகுதியில் சாலைகள் மேம்பாடு, மெட்ரோ விரிவாக்கம், பெண்கள் பாதுகாப்பு, அங்கீகாரமற்ற காலனிகளை முறைப்படுத்துவது, அனைத்து வசதிகளையும் வழங்குவதற்கான திட்டங்களை வைத்துள்ளேன். ஹிண்டன் ஆற்றை மேம்படுத்துவதற்கும், கிராமப்புறங்களில் மின்வசதியை உருவாக்கவும் தேவையான திட்டங்கள் வைத்துள்ளேன்.

    கடந்த தேர்தலில் இத் தொகுதியில் வெற்றி பெற்ற பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங், தொகுதியை மேம்படுத்த ரூ. 650 கோடியில் திட்டத்தை உருவாக்கியிருந்தார். ஆனால், மத்தியில் பாஜக ஆட்சியில் இல்லாததால் அத் திட்டத்தைச் முன்னெடுத்துச் செல்ல இயலவில்லை என்றார் வி.கே. சிங்.

    கடந்த தேர்தலில் ராஜ்நாத் சிங் 3,59,637 (43.34%) வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சுரேந்தர பிரகாஷ் கோயல் 2,68,956 (32.41%) வாக்குகள் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai