Enable Javscript for better performance
கெளதம புத்த நகர் தொகுதியில் தேர்தல் தேதியை மாற்றக் கோரிய மனு தள்ளுபடி- Dinamani

சுடச்சுட

    

    கெளதம புத்த நகர் தொகுதியில் தேர்தல் தேதியை மாற்றக் கோரிய மனு தள்ளுபடி

    By dn  |   Published on : 10th April 2014 12:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உத்தரப் பிரதேச மாநிலம், கெளதம புத்த நகர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரமேஷ் சந்த் தோமர் பாஜகவில் சேர்ந்து விட்டதால் அத்தொகுதியில் வியாழக்கிழமை (ஏப்ரல் 10) நடைபெறும் தேர்தலை வேறு தேதிக்கு ஒத்திவைக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது.

    உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் கெளதம புத்த நகர் உள்பட 15 மக்களவைத் தொகுதிகளுக்கு வியாழக்கிழமை தேர்தல் நடைபெறவுள்ளது. இந் நிலையில், அங்கு காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட மனு தாக்கல் செய்திருந்த ரமேஷ் சிங் தோமர் அண்மையில் பாஜகவில் இணைந்தார். இதையடுத்து, தேர்தலை வேறு தேதிக்கு மாற்றக் கோரி நொய்டாவில் வசிக்கும் முகேஷ் யாதவ், விக்ராந்த் சிங் கஸானா ஆகியோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அதில் "காங்கிரஸ் கட்சி சார்பில் மார்ச் 21-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்த ரமேஷ் சந்த் தோமர், ஏப்ரல் 3-ஆம் தேதி வரை "கை' சின்னத்துக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். ஆனால், காஜியாபாத் தொகுதியில் ஏப்ரல் 3-ஆம் தேதி நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்ற குஜராத் முதல்வர் நரேந்திர மோடியுடன் ஒரே மேடையில் ரமேஷ் சந்த் தோமர் காணப்பட்டார். பின்னர் பாஜகவுக்கு சாதகமாகவும் அவர் செயல்படத் தொடங்கினார். அவரது செயல் கட்சித் தாவலுக்கு ஒப்பானதாகும்.

    அவரது செயல்பாடு தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே, கெளதம புத்த நகர் மக்களவைத் தொகுதியில் நடைபெறவுள்ள தேர்தலை வேறு தேதிக்கு மாற்ற தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்' என்று மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

    இம் மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சனா பிரகாஷ் தேசாய், மதன் பி. லோகுர் ஆகியோர் அடங்கிய அமர்வு புதன்கிழமை விசாரித்தது. அப்போது நீதிபதிகள், "தேர்தல் வாக்குப் பதிவு தேதி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந் நிலையில், தேர்தலை வேறு தேதிக்கு மாற்றம் செய்வது தொடர்பாக புதிதாக உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க முடியாது' எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

    ரமேஷ் சந்த் தோமர்: 1991-ஆம் ஆண்டு முதல் உத்தரப் பிரதேச மாநிலம், ஹாபூர் (தற்போது காஜியாபாத்) தொகுதி மக்களவை உறுப்பினராக நான்கு முறை இருந்தவர் ரமேஷ் சந்த் தோமர்.

    இவர், 2004 மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்தார். அதைத் தொடர்ந்து, மீண்டும் போட்டியிட அவருக்கு பாஜக மேலிடம் வாய்ப்பு மறுத்ததால், 2009-இல் காங்கிரஸில் சேர்ந்தார். அவருக்கு கௌதம புத்த நகர் தொகுதியில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் மேலிடம் வாய்ப்பளித்தது. அதன்படி காங்கிரஸ் சார்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால், திடீரென பாஜகவில் கடந்த 3-ஆம் தேதி இணைந்து தேர்தலில் போட்டியிடவுள்ளார்.

    இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியும் ரமேஷ் சந்த் தோமரின் வேட்பு மனுவை நிராகிரக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தது. அதை ஏற்ற ஆணையம், கௌதம புத்த நகர் தொகுதி வாக்குச்சாவடிகளில் உள்ள மின்னணு வாக்குப் பதிவு கருவியில் காங்கிரஸ், பாஜக வேட்பாளருக்கு அடுத்த நிலையில் ரமேஷ் சந்த் தோமர் பெயரை வேட்பாளராகச் சேர்த்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai