Enable Javscript for better performance
சித்திரை இசை, நாட்டிய விழா ஏப்ரல் 18-இல் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    சண்முகானந்த சங்கீத சபா, இந்திரா காந்தி தேசிய கலைகளுக்கான மையம் (ஐஎன்ஜிசிஏ) ஆகியவை இணைந்து தமிழ் இசைக் கலைஞர்களுக்கு அர்ப்பணிக்கும் சித்திரை இசை, நடனத் திருவிழா ஏப்ரல் 18 முதல் 20-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.

    தில்லி ஜன்பத் சாலையில் உள்ள ஐஎன்ஜிசிஏ அரங்கில் நடைபெறும் இந்த விழாவை பிரசார் பார்தியின் தலைமைச் செயல் அதிகாரி ஜவஹர் சர்க்கார் தொடங்கி வைக்க உள்ளார்.

    தமிழ் வருடப்பிறப்பையொட்டி ஏப்ரல் 18, 19, 20 ஆகிய தேதிகளில் நடைபெறும் இந்த விழாவில் காலஞ்சென்ற பிரபல தமிழ் இசை வல்லுநர்கள் எம்.எம். தண்டபாணி தேசிகர், டாக்டர் எஸ். ராமநாதன், கோடீஸ்வர ஐயர், அருணாசல கவி, அம்புஜம் கிருஷ்ணா, பெரியசாமி தூரன், டி.எம். தியாகராஜன், மதுரை டி. ஸ்ரீநிவாசன், கோபாலகிருஷ்ண பாரதி, பாபநாசம் சிவன், நீலகண்ட சிவன் மற்றும் அருணகிரிநாதர், குலசேகர ஆழ்வார், ராமலிங்க வள்ளலார் ஆகியோர் இயற்றிய தமிழ்ப் பாடல்களை இசைக் கலைஞர்கள் பாட உள்ளனர்.

    நிகழ்ச்சி விவரம்:

    ஏப்ரல் 18: மாலை 6 மணிக்குத் தொடக்க விழா நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து இசைக் கலைஞர் டாக்டர் எஸ். சௌம்யா பங்கேற்கும் வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சி.

    ஏப்ரல் 19: மாலை 6 மணிக்கு இசைக் கலைஞர் குன்னக்குடி எம்.பாலமுரளி கிருஷ்ணா பங்கேற்கும் வாய்பாட்டு இசை நிகழ்ச்சி.

    இந்த இரு நிகழ்ச்சிகளிலும் பக்கவாத்தியக் கலைஞர்களாக பரூர் எம்.எஸ். அனந்தகிருஷ்ணன் (வயலின்), பூங்குளம் சுப்பிரமணியன் (மிருதங்கம்) ஆகியோர் பங்கேற்கின்றனர்.

    ஏப்ரல் 20: மாலை 6 மணிக்கு பிரியா வெங்கட்ராமன் குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெறும்.

    இதற்கான ஏற்பாடுகளை சண்முகானந்த சங்கீத சபாவின் கௌரவச் செயலர்கள் பி.வி. சுப்பிரமணியன், எஸ். கிருஷ்ணசாமி ஆகியோர் செய்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai