Enable Javscript for better performance
தலைநகரில் இன்று வாக்குப்பதிவு- Dinamani

சுடச்சுட

    

    தில்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளிலும் வியாழக்கிழமை (ஏப்ரல் 10) வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேர்தலை அமைதியாகவும், பாதுகாப்புடனும் நடத்துவதற்காக தொகுதி முழுவதும் பாதுகாப்புப் பணியில் சுமார் 50,000 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் ஆணைய உத்தரவின்படி இதற்கான விரிவான ஏற்பாடுகளை மத்திய உள்துறை அமைச்சகம் செய்துள்ளது.

    அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் நியமிக்கப்பட்ட தேர்தல் அலுவலர்கள், ஊழியர்கள் புதன்கிழமை இரவே அந்தந்த வாக்குச்சாவடிகளில் தங்கி தேர்தலுக்கு ஆயத்தமாகினர்.

    தில்லி பிரதேசத்தில் சாந்தினி செளக், வடகிழக்கு தில்லி, கிழக்கு தில்லி, புது தில்லி, வடமேற்கு தில்லி (தனி), மேற்கு தில்லி, தெற்கு தில்லி ஆகிய 7 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. மொத்தம் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, திரிணமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள், 63 சுயேச்சைகள் உள்பட மொத்தம் 150 பேர் களத்தில் உள்ளனர். இதில் 16 பேர் பெண் வேட்பாளர்கள். அதிகபட்சமாக புதுதில்லி மக்களவைத் தொகுதியில்தான் 29 பேர் போட்டியிடுகின்றனர். குறைந்த அளவாக தனி தொகுதியான வடமேற்கு தில்லியில் 14 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

    கடந்த தேர்தல்களில் காங்கிரஸ்-பாஜக ஆகிய கட்சிகளுக்கிடையேதான் போட்டி இருந்து வந்தது. இந் நிலையில், தில்லி பேரவைத் தேர்தலில் கிடைத்த பெரும் மக்கள் ஆதரவைத் தொடர்ந்து மக்களவைத் தேர்தலிலும் ஆம் ஆத்மி கட்சி களம் காண்கிறது. இதனால், முதல் முறையாக தலைநகரில் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

    தில்லியில் தற்போதைய நிலவரப்படி 1,27,06,372 பேர் வாக்களிக்கத் தகுதி வாய்ந்தவர்களாக தேர்தல் ஆணையம் கண்டறிந்துள்ளது. இதில் ஆண்கள் 70,47,885 பேர், பெண்கள் 56,57,648 பேர், மற்றவர்கள் 839 பேர் உள்ளனர். மொத்த வாக்காளர்களில் சுமார் 3.37 லட்சம் பேர் இத் தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்கவுள்ளனர்.

    11,763 வாக்குச்சாவடிகள்: தில்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளிலும் மொத்தம் 11,763 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 417 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும் 90 வாக்குச்சாவடிகள் அதி பதற்றமானவை என்றும் கண்டறியப்பட்டுள்ளன. 70 மாதிரி வாக்குச்சாவடிகளும் அமைக்கப்படவுள்ளன.

    வாக்காளர்கள் வியாழக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 வணி வரை வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்கலாம். முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க வசதியாக சிறப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. வாக்குப்பதிவை முழுமையாக வீடியோ மூலம் பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிகள் அனைத்திலும் மொபைல் போன்கள் எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு விகிதத்தை அதிகரிப்பதற்காக தேர்தல் ஆணையம் ஏற்கெனவே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. வாக்குப்பதிவை முன்னிட்டு வியாழக்கிழமை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    பாதுகாப்பில் 50,000 போலீஸார்:தேர்தலை அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடத்தும் வகையில், அனைத்துத் தொகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வாக்குச் சாவடிகளிலும் கூடுதல் போலீஸார் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் 7 தொகுதிகளிலும் மொத்தம் 31,025 தில்லி போலீஸார், 4,000 ஊர்க்காவல் படையினர், 40 கம்பெனி மத்திய துணை ராணுவத்தினர் உள்பட 50,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் புதன்கிழமை மாலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் காவல் படையினர் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டன.

    அமைதியாக தேர்தல் நடைபெறுவதை உறுதிப்படுத்த போலீஸ் பார்வையாளர்கள் மேற்பார்வையில் வீடியோ பதிவாளர்கள் அடங்கிய 161 பறக்குப் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் தொகுதிகளில் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டிருப்பர்.

    வாக்குப் பதிவு ஆவணங்கள்: வாக்குப் பதிவின்போது புகைப்படுத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை, வாக்காளர் ஸ்லிப்புகளை வாக்காளர்கள் அவசியம் வைத்திருக்க வேண்டும். மேலும், வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், அவர்களது பெயர்கள் பட்டியலில் இருந்தால் தகுந்த ஆவணங்களைக் காட்டி வாக்களிக்க அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வாக்குப்பதிவை அதிகரிக்க நடவடிக்கை: 2009 மக்களவைத் தேர்தலின்போது சராசரியாக 52.30 சதவீதம் வாக்குகள் பதிவாகின. ஆனால், தேர்தல் ஆணையம் மேற்கொண்ட பல்வேறு உத்வேக நடவடிக்கைகள் காரணமாக கடந்த ஆண்டு நடைபெற்ற பேரவைத் தேர்தலில் வாக்குப்பதிவு 66 சதவீதமாக அதிகரித்தது. இத் தேர்தலில் வாக்குப்பதிவு விகிதத்தை மேலும் அதிகரிக்க ஆணையம் துரிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

    தலைவர்கள் முகாம்: கடந்த 2009 தேர்தலில் 7 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து இத் தேர்தலில் முக்கிய எதிர்க்கட்சியான பாஜக களத்தில் தீவிரமாகப் பணியாற்றியுள்ளது. அதன் முன்னணித் தலைவர்கள் அனைவரும் தில்லியில் முகாமிட்டு பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி மற்றும் முன்னணி தலைவர்கள், ஆம்ஆத்மி தேசிய அமைப்பாளர் கேஜரிவால் உள்ளிட்ட தலைவர்கள் என அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தலைநகரில் கடந்த சில நாள்களாக தீவிர பிராசாரத்தை மேற்கொண்டு தமது வேட்பாளர்களுக்கு ஆதரவைத் திரட்டினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai