தில்லியில் வியாபாரியிடம் ரூ.5.40 கோடி பறிமுதல்
By dn | Published on : 10th April 2014 12:37 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
தேசியத் தலைநகரில் ஹவாலா பணத்துக்கு எதிராக நடத்தப்பட்ட அதிரடி நடவடிக்கையாக சாந்தினி சௌக் பகுதியைச் சேர்ந்த வியாபாரியிடம் இருந்து ரொக்கம் ரூ.5.40 கோடி, இறக்குமதி செய்யப்பட்ட 170 கிலோ வெள்ளி ஆகியவற்றை அமலாக்க இயக்கக அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.
இவை ஹவாலா மூலம் கொண்டு வரப்பட்டவையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தில்லியில் வியாழக்கிழமை நடைபெற உள்ளது. இதையொட்டி, கடந்த சில வாரங்களாகவே பணப் பரிவர்த்தனை குறித்து தேர்தல் செலவினக் கண்காணிப்பு குழுவினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஹவாலா பணம் தடுப்பு நடவடிக்கையில் அமலாக்க இயக்கக அதிகாரிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந் நிலையில், சாந்தினி சௌக் பகுதியில் ஹவாலா பணம் கையாளுவதில் வியாபாரி ஒருவர் ஈடுபட்டு வருவதாக அமலாக்க இயக்கக அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அதிகாரிகள் கடந்த இரு தினங்களாக சம்பந்தப்பட்ட நபரைக் கண்காணித்து வந்தனர். அந்த நபரின் அலுவலகத்தில் அமலாக்க இயக்கக அதிகாரிகள் புதன்கிழமை திடீர் சோதனை நடத்தினர். அப்போது, ரொக்கம் ரூ.5.40 கோடி, இறக்குமதி செய்யப்பட்ட 170 கிலோ வெள்ளி, வெளிநாட்டு நோட்டுகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.
அவர் சாந்தினி சௌக் பகுதியைச் சேர்ந்த வியாபாரி அனுஜ் பன்சால் என்பது விசாரணையில் தெரிய வந்தது. அவருக்கு எதிராக வெளிநாட்டு பணப்பரிவர்த்தனை மேலாண்மைச் சட்டப் பிரிவுகளின் கீழ் விளக்கம் கேட்டு அமலாக்க இயக்கக அதிகாரிகள் நோட்டீஸ் அளித்தனர்.