Enable Javscript for better performance
தில்லி தேர்தல் களத்தில் 2 மத்திய அமைச்சர்கள்!- Dinamani

சுடச்சுட

    

    தில்லியில் மொத்தமுள்ள 7 மக்களவைத் தொகுதிகளிலும் முக்கியக் கட்சிகளான பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி (ஏஏபி) கட்சி வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    அதில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் 2 பேர் மத்திய அமைச்சர்கள். இதுவரை இல்லாத வகையில், முதல் முறையாக தலைநகரில் மும்முனைப் போட்டி நிலவுகிறது.

    தில்லியில் சாந்தினி செளக், வடகிழக்கு தில்லி, கிழக்கு தில்லி, புது தில்லி, வடமேற்கு தில்லி (தனி), மேற்கு தில்லி, தெற்கு தில்லி ஆகிய 7 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. மொத்தம் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, திரிணமூல் காங்கிரஸ் ஆகிய முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள், 63 சுயேச்சைகள் உள்பட மொத்தம் 150 பேர் களத்தில் உள்ளனர். இதில் 16 பேர் பெண் வேட்பாளர்கள். அதிகபட்சமாக புதுதில்லி மக்களவைத் தொகுதியில்தான் 29 பேர் போட்டியிடுகின்றனர். குறைந்த அளவாக தனி தொகுதியான வடமேற்கு தில்லியில்தான் 14 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

    சாந்தினி செளக்: இத் தொகுதியில் மூன்றாவது முறையாக மத்திய அமைச்சர் கபில் சிபல் காங்கிரஸ் சார்பில் களம் இறக்கப்பட்டுள்ளார். பாஜக சார்பில் கட்சியின் பிரதேச தலைவரும், எம்எல்ஏவுமான ஹர்ஷ் வர்தன் நிறுத்தப்பட்டுள்ளார். பத்திரிகையாளராக இருந்து பின்னர் ஆம் ஆத்மியில் இணைந்த அசுதோஷ் அக்கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார். 2004 மக்களவைத் தேர்தலில் இத் தொகுதியில் பாஜகவின் ஸ்மிரிதி இராணியை கபில் சிபல் தோற்கடித்து எம்.பி.யானார். அதற்கு அடுத்த முறை 2009 தேர்தலில் பாஜகவின் விஜேந்தர் குப்தாவை அவர் தோற்கடித்தார்.

    வடமேற்கு தில்லி: இத் தொகுதியில் தற்போதைய எம்.பி.யும், மத்திய அமைச்சருமான கிருஷ்ணா தீரத்தை காங்கிரஸ் மீண்டும் களம் இறக்கியுள்ளது.

    இவர் ஏற்கெனவே 2004, 2009 மக்களவைத் தேர்தலில் இதே தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 2004-இல் பாஜக வேட்பாளர் அனிதா ஆர்யாவையும், 2009-இல் மீரா கன்வாரியாவையும் தோற்கடித்தவர். இந் நிலையில், இந்த முறை அண்மையில் கட்சியில் இணைந்த தலித் தலைவர் உதித் ராஜை வேட்பாளராக பாஜக களம் இறக்கியுள்ளது. ஆம் ஆத்மி சார்பில் இளம் வேட்பாளரான ராக்கி பிர்லா (27) நிறுத்தப்பட்டுள்ளார்.

    புது தில்லி: அரசு ஊழியர்கள் அதிகம் வசித்து வரும் புது தில்லி மக்களவைத் தொகுதியில் தற்போதைய எம்.பி.யும், முன்னாள் அமைச்சருமான அஜய் மாக்கனையே காங்கிரஸ் மீண்டும் களம் இறக்கியுள்ளது. தொண்டர்களே வேட்பாளர்களை தேர்வை உறுதி செய்யும் வகையில் காங்கிரஸ் தொடங்கிய "பிரைமரீஸ்' திட்டத்தில் இவர் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

    பாஜக சார்பில் செய்தித் தொடர்பாளர் மீனாட்சி லேகி போட்டியிடுகிறார். பத்திரிகையாளராக இருந்து அரசியல்வாதியாகிய ஆசிஷ் கேத்தன் ஆம்ஆத்மி சார்பில் களம் காண்கிறார்.

    தெற்கு தில்லி: காங்கிரஸ் சார்பில் தற்போதைய எம்.பி. யான ரமேஷ் குமார் இத்தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார். பாஜக சார்பில் குஜ்ஜார் தலைவரும் துக்ளகாபாத் எம்எல்ஏவுமான ரமேஷ் பிதூரி நிறுத்தப்பட்டுள்ளார். ஆம் ஆத்மி சார்பில் தேவேந்தர் ஷெராவத் களம் இறக்கப்பட்டுள்ளார். அனைத்துத் தொகுதிகளிலும் மும்முனைப் போட்டியில் வேட்பாளர்கள் உள்ளனர். இவர்களின் வெற்றியை நிர்ணயிப்பதற்கான வாக்குப்பதிவு வியாழக்கிழமை (ஏப்ரல் 10) நடைபெறுகிறது.

    கிழக்கு தில்லி: தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்று முறை தொடர்ந்து வெற்றி பெற்று முதல்வராக இருந்த ஷீலா தீட்சித்தின் மகனும், இத் தொகுதியின் எம்.பி.யுமாகவுள்ள சந்தீப் தீட்சித் காங்கிரஸ் சார்பில் களம் காண்கிறார். ஆம்ஆத்மி சார்பில் மகாத்மா காந்தியின் பேரன் ராஜ்மோகன் காந்தி, பாஜக சார்பில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் ஆர்ட் ஆஃப் லிவிங்' அமைப்புடன் தொடர்புள்ள மகேஷ் கிரி போட்டியிடுகின்றனர்.

     

    மேற்கு தில்லி: இத் தொகுதியில், தற்போதைய எம்.பி.யான மஹாபல் மிஸ்ராவையே காங்கிரஸ் நிறுத்தியுள்ளது. பாஜக சார்பில் முன்னாள் முதல்வர் சாகிப் சிங் வர்மாவின் மகனும் மெஹ்ரெளலி தொகுதி எம்எல்ஏவுமான பர்வேஷ் வர்மா போட்டியிடுகிறார். ஆம் ஆத்மி சார்பில் பத்திரிகையாளராக இருந்து அரசியலுக்குள் நுழைந்த ஜர்னைல் சிங் களம் காண்கின்றார்.

    வடகிழக்கு தில்லி: இத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஜெய் பிரகாஷ் அகர்வால் மீண்டும் போட்டியிடுகிறார். பிரதேச காங்கிரஸ் தலைவராக இருந்த இவர், சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்ற அப் பதவியை ராஜிநாமா செய்தார். பின்னர் காங்கிரஸின் "பிரைமரீஸ்' திட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பாஜக சார்பில் போஜ்பூரி பாடகரும், நடிகருமான மனோஜ் திவாரி களம் இறக்கப்பட்டுள்ளார். ஆம் ஆத்மி சார்பில் ஆனந்த் குமார் போட்டியிடுகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai