Enable Javscript for better performance
நஜஃப்கர் கால்வாய் சுத்திகரிப்பில் அலட்சியம்: தில்லி அரசுக்கு உயர் நீதிமன்றம் கண்டிப்பு- Dinamani

சுடச்சுட

    

    நஜஃப்கர் கால்வாய் சுத்திகரிப்பில் அலட்சியம்: தில்லி அரசுக்கு உயர் நீதிமன்றம் கண்டிப்பு

    By dn  |   Published on : 10th April 2014 12:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லி புறநகர் பகுதியில் உள்ள நஜஃப்கர் கால்வாய் சுத்திகரிப்பு நடவடிக்கையில் அலட்சியம் காட்டுவதை இனியும் அனுமதிக்க முடியாது என்று தில்லி அரசுக்கு உயர் நீதிமன்றம் புதன்கிழமை கண்டிப்புடன் தெரிவித்தது.

    இது தொடர்பாக சக்தி நகர் குடியிருப்புவாசிகள் சார்பில் வழக்குரைஞர் ஷிவ்சரண் கர்க் பொது நல மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதன் மீது நீதிபதிகள் பிரதீப் நந்திரஜோக், தீபா சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு புதன்கிழமை விசாரணை நடத்தியது.

    அப்போது ஆஜரான வழக்குரைஞர் ஷிவ்சரண் கர்க் கூறியது:

    யமுனை நதி ஓடும் நஜஃப்கர் பகுதி, கழிவுகள் தேங்கி அசுத்தம் நிறைந்த குப்பைக் கூளமாக காட்சியளிக்கிறது.

    கொசு உள்ளிட்டவை பரவலாகக் காணப்படுகிறது. கால்வாய் தூர்வாரப்படாதது, நதியில் உள்ள கழிவுகள் சரிவர சுத்திகரிக்கப்படாதது போன்ற குறைபாடுகளால் அப்பகுதிவாசிகளை டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது.

    உள்ளாட்சி நிர்வாகத்தின் அறிவுரைப்படி நஜஃப்கர் புறநகர் பகுதிவாசிகளின் குடியிருப்புகளில் உள்ள குளிர்சாதனங்கள், ஏர் கூலர்கள் உள்ளிட்டவற்றை சுத்திகரிக்க குடியிருப்புவாசிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    ஆனால், நதியில் காணப்படும் கழிவுகளை சுத்திகரிக்க வேண்டியது அரசின் கடமை. அதை சரியாகச் செய்யத் தவறுவதால் பாதிக்கப்படுவது அப்பாவிப் பொதுமக்கள என்று முறையிட்டார்.

    அவரது குறையைக் கேட்ட நீதிபதிகள் கூறியது: யமுனை நதியை சுத்திகரிக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு செயல் திட்டங்களை வகுத்துள்ளன. ஆனால், உள்ளூரில் அரசுத் துறைகள் காட்டும் அலட்சியத்தால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

    அரசு தனது பொறுப்பில் இருந்து விலகி ஓடவோ, அலட்சியம் காட்டவோ கூடாது. அதை நீதிமன்றம் ஏற்காது. தில்லியை தூய்மையாக வைத்திருக்க விளம்பரம் செய்தால் மட்டும் போதாது. அரசு அதற்கான ஈடுபாட்டைக் காட்ட வேண்டும். நஜஃப்கர் பகுதியில் இதுவரை எடுத்துள்ள நடவடிக்கை என்ன? அப் பகுதியில் கால்வாயை சுத்திகரிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? அதற்கு எவ்வளவு நாள்களில் தீர்வு காண முடியும்? போன்ற விவரங்கள் அடங்கிய அறிக்கையை நான்கு வாரங்களுக்குள் தில்லி ஜல் போர்டு, வடக்கு தில்லி மாநகராட்சி, தில்லி அரசு ஆகியவை தாக்கல் செய்ய வேண்டும்.

    தலைநகரில் உள்ள இயற்கை வளங்களில் முக்கியமானது யமுனை நதி. அது சீர்கெடுவதை அனுமதிக்க முடியாது. இப் பிரச்னைக்குத் தேவை பதில் அல்ல, தீர்வும் அமலாக்கமும்தான் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai