Enable Javscript for better performance
முலாயம், ஆஸம் கான், அஜித் சிங்கின் பேச்சுகள்: அறிக்கை கேட்கிறது தேர்தல் ஆணையம் - Dinamani

சுடச்சுட

    

    முலாயம், ஆஸம் கான், அஜித் சிங்கின் பேச்சுகள்: அறிக்கை கேட்கிறது தேர்தல் ஆணையம்

    By dn  |   Published on : 10th April 2014 12:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உத்தரப்பிரதேச மாநில தேர்தல் பிரசாரத்தின் போது சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், அக்கட்சியின் அமைச்சர் ஆஸம் கான், ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சித் தலைவர் அஜித் சிங் ஆகியோர் வெளிப்படுத்திய சர்ச்சைக்குரிய கருத்துகள் குறித்து விரிவான அறிக்கை தருமாறு மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது.

    இது குறித்து தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறுகையில், "உத்தரப்பிரதேச மாநில தலைமை தேர்தல் அதிகாரி இந்த சர்ச்சைக்குரிய கருத்துகள் குறித்த குறுந்தகடுகளை எங்களிடம் வழங்கியுள்ளார். தற்போது மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் இந்தக் கருத்துகள் குறித்து விரிவான அறிக்கை கேட்கப்பட்டுள்ளது' என்றார்.

    முன்னதாக, லக்னெüவில் செய்தியாளர்களிடம் சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் செவ்வாய்க்கிழமை கூறுகையில், "குஜராத் மாநில முன்னாள் உள்துறை அமைச்சரான பாஜகவைச் சேர்ந்த அமித் ஷா போன்றவர்கள் சிறையில் அடைக்கப்படாமல் வெளியில் சுற்றிக் கொண்டிருப்பது துரதிருஷ்டவசமானது. அவரைப் போன்றவர்கள் மக்களைப் பிளவுபடுத்தக்கூடிய பேச்சுகளை பேசி வருகின்றனர். நாங்கள் பாஜகவுடன் சண்டையிட்டு, அமித் ஷாவை அழிப்போம்' என்று தெரிவித்திருந்தார்.

    அதில் "அமித் ஷாவை நாங்கள் அழிப்போம்' என்று முலாயம் சிங் யாதவ் கூறிய கருத்து குறித்து தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தி வருகிறது.

    அதேபோல், அக்கட்சியைச் சேர்ந்த அமைச்சரான ஆஸம் கான் திங்கள்கிழமை மேற்கொண்ட தேர்தல் பிரசாரத்தின்போது கார்கில் போர் குறித்து பேசுகையில், "1999ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற கார்கில் யுத்தத்தின்போது யார் வெற்றிக்காக போராடியது? ஹிந்து ராணுவ வீரர்கள் இல்லை. உண்மையில் அது முஸ்லிம் வீரர்கள் மூலம் கிடைத்த வெற்றி' என்று தெரிவித்தார். மேலும் பாஜகவைச் சேர்ந்த அமித் ஷா "நம்பர் 1 ரவுடி' என்றும், உத்தரப்பிரதேசத்துக்கு மோடி வந்தால் தீவிரவாதிகளை உருவாக்கி விடுவார்' என்றும் தெரிவித்திருந்தார்.

    முன்னதாக, ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சித் தலைவர் அஜித் சிங் கூறுகையில், "மதவாதத்தை தடுக்க, பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடியை கடலில் தூக்கி என்னால் வீச முடியும்' என்று பேசி இருந்தார்.

    அதிகாரிகள் பரிசீலனை: "உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத் பகுதியில் திங்கள்கிழமை ஆஸம் கான் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    அப்போது கார்கில் போர் மற்றும் பல சம்பவங்கள் குறித்து அவர் பேசியபோது எடுக்கப்பட்ட 30 நிமிட விடியோ பதிவை பரிசீலனை செய்து வருகிறோம். அவர் சர்ச்சையை ஏற்படும் விதமாக பேசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அவர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்று உத்தரப்பிரதேச மூத்த தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai