Enable Javscript for better performance
91 தொகுதிகளில் இன்று 3வது கட்ட வாக்குப்பதிவு- Dinamani

சுடச்சுட

    

    மக்களவைத் தேர்தலுக்கான 3வது கட்ட வாக்குப்பதிவு 91 தொகுதிகளில் வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 1,418 பேர் போட்டியிடுகின்றனர். அவர்களில், மக்களவை சபாநாயகர் மீரா குமார், மத்திய அமைச்சர்கள் கமல்நாத், கபில் சிபல், சசி தரூர், ராஷ்ட்ரீய லோக்தளக் கட்சித் தலைவர் அஜித் சிங் மற்றும் பாஜக முன்னாள் தலைவர் நிதின் கட்கரி உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்கள் ஆவார்கள்.

    மக்களவைக்கு கடந்த திங்கள்கிழமை (ஏப்ரல் 7) தொடங்கி, அடுத்த மாதம் 12ஆம் தேதி வரை 9 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் தில்லி (7), உத்தரப் பிரதேசம் (10), ஒடிஸா (10), சத்தீஸ்கர் (1), பிகார் (6), மகாராஷ்டிரம் (10), மத்தியப்பிரதேசம் (9), கேரளம் (20), ஜார்க்கண்ட் (4), ஜம்மு-காஷ்மீர் (1), ஹரியாணா (10) ஆகிய 11 மாநிலங்கள் மற்றும் சண்டீகர் (1), அந்தமான் - நிக்கோபார் (1), லட்சத்தீவு (1) ஆகிய 3 யூனியன் பிரதேசங்களிலுமாக மொத்தம் 91 தொகுதிகளில் வியாழக்கிழமை 3வது கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    தில்லி: தில்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

    இதில் சாந்தினி சௌக் தொகுதியில் மத்திய அமைச்சர் கபில் சிபல் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் ஹர்ஷவர்த்தன் களமிறக்கப்பட்டுள்ளார்.

    உத்தரப் பிரதேசம்: நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில், முசாஃபர்நகர், சஹாரன்பூர், பிஜ்னோர், மீரட், பாக்பத், காஜியாபாத் உள்ளிட்ட 10 தொகுதிகளுக்கு வியாழக்கிழமை தேர்தல் நடைபெறுகிறது.

    பாக்பத் தொகுதியில் ராஷ்ட்ரீய லோக் தளக் கட்சித் தலைவரும், மத்திய அமைச்சருமான அஜித் சிங் போட்டியிடுகிறார்.

    காஜியாபாத்தில் ராணுவ முன்னாள் தலைமைத் தளபதி வி.கே. சிங் (பாஜக), திரைப்பட நடிகர் ராஜ் பாப்பர் (காங்கிரஸ்), பிஜ்னோரில் நடிகை ஜெயப்ரதா (ராஷ்ட்ரீய லோக் தளம்), மீரட்டில் நடிகை நக்மா (காங்கிரஸ்) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    மகாராஷ்டிரம்: மகாராஷ்டிரத்தில் 10 தொகுதிகளுக்கு நடைபெறும் தேர்தலில், 201 பேர் போட்டியிடுகின்றனர். அவர்களில் மத்திய அமைச்சர் பிரஃபுல் படேல், காங்கிரஸ் மூத்த தலைவர் முகுல் வாஸ்னிக், பாஜக முன்னாள் தலைவர் நிதின் கட்கரி ஆகியோர் முக்கிய வேட்பாளர்கள்.

    பிகார்: பிகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 6 தொகுதிகளுக்கு வியாழக்கிழமை தேர்தல் நடைபெறுகிறது. இதில் மக்களவை சபாநாயகர் மீராகுமார் (சாசாராம் தொகுதி), கேரள முன்னாள் ஆளுநர் நிகில் குமார், லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் ராம்விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான் உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.

    கேரளம்: கேரளத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கும் வியாழக்கிழமை ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

    இதில் போட்டியிடும் வேட்பாளர்களில் மத்திய அமைச்சர் சசி தரூர், கே.வி. தாமஸ், முல்லபள்ளி ராமச்சந்திரன், பி.சி. சாக்கோ (காங்கிரஸ்) மற்றும் இ. அகமது (ஐயுஎம்எல்) உள்ளிட்டோர் முக்கியமானவர்கள் ஆவர்.

    மத்தியப்பிரதேசம்: மத்தியப்பிரதேசத்தில் (மொத்தம் 29 தொகுதிகள்) 9 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் போட்டியிடும் வேட்பாளர்களில் காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான கமல்நாத், மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் அஜய் சிங் ஆகியோர் முக்கிய வேட்பாளர்கள்.

    ஹரியாணா: ஹரியாணாவில் மொத்தமுள்ள 10 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வியாழக்கிழமை தேர்தல் நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ், பாஜக கூட்டணி, இந்திய தேசிய லோக் தளம் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் இடையே 4 முனை போட்டி நிலவுகிறது.

    ஒடிஸா: ஒடிஸாவில் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து, அந்த மாநில சட்டப்பேரவைக்கும் வியாழக்கிழமை தேர்தல் நடைபெறுகிறது. மொத்தமுள்ள 21 மக்களவைத் தொகுதிகளில் 10 தொகுதிகளுக்கும், 147 பேரவைத் தொகுதிகளில் 70 இடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் முன்னாள் முதல்வர்களும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுமான கிரிதர் கமாங், ஹேமநாத் பிஸ்வால் ஆகியோர் முக்கியமானவர்கள் ஆவர்.

    பேரவைத் தேர்தலில் முதல்வர் நவீன் பட்நாயக் (பிஜு ஜனதா தளம்) உள்ளிட்டோர் களம் காண்கின்றனர். தேர்தல் நடைபெறும் பல தொகுதிகள், மாவோயிஸ்ட்டுகளின் ஆதிக்கம் நிறைந்ததாகும். இதனால் அப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 56 பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நேரம் காலை 7 மணியில் இருந்து மாலை 4 மணி வரைக்கும், 16 பேரவைத் தொகுதிகளில் காலை 7 மணியில் இருந்து மாலை 6 மணி வரைக்கும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai