Enable Javscript for better performance
தலைநகரில் 64% வாக்குப்பதிவு- Dinamani

சுடச்சுட

    

    தலைநகர் தில்லியில் உள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளுக்கும் வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தலில் சுமார் 64 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இருப்பினும் அதிகாரப்பூர்வமாகப் பதிவான வாக்குகள் விவரம் வெள்ளிக்கிழமை வெளியிடப்படும்.

    மக்களவைக்கு ஒன்பது கட்டங்களாக தேர்தல் நடைபெற்றுவருகிறது. இதில் மூன்றாவது கட்டமாக தில்லி உள்ளிட்ட 14 மாநிலங்களில் உள்ள 92 தொகுதிகளுக்கு வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது.

    தில்லியில் உள்ள சாந்தினி சௌக், புது தில்லி, வடகிழக்கு தில்லி, கிழக்கு தில்லி, வடமேற்கு தில்லி (தனி), மேற்கு தில்லி, தெற்கு தில்லி ஆகிய ஏழு மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. முக்கியப் பிரமுகர்கள் பலரும் வசிக்கும் தில்லியில் இம் முறை வாக்குப்பதிவு தொடங்கிய காலை 7 மணி முதலே பெருமளவில் வாக்காளர்கள் திரண்டு ஆர்வத்துடன் வாக்களித்தனர். பிற்பகல் 3 மணியளவில் சுமார் 51 சதவீத வாக்குகள் தலைநகரில் பதிவாகியிருந்தன. அதைத் தொடர்ந்து மாலையில் வாக்குப்பதிவு முடிவடைவடையும் 6 மணிக்கு சில மணி நேரத்துக்கு முன்னதாக இளம் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்த வந்தனர். இதனால், விறுவிறுப்படன் வாக்குப்பதிவு நடைபெற்றது.

    வாக்களித்த விஐபிக்கள்: குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் புது தில்லி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் வசித்துவருகின்றனர். இதையடுத்து, காலை 8.30 மணிக்கு ஹமீது அன்சாரி, நிர்மாண் பவன் வாக்குச்சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தார். அதே வாக்குச்சாவடியில் காலை 9.20 மணிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாக்களித்தார். புது தில்லி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் அஜய் மாக்கன், தில்லி பிரதேச காங்கிரஸ் தலைவர் அர்விந்தர் சிங் ஆகியோர் வாக்குச்சாவடி அறை வரை சோனியாவுடன் சென்றனர். நிர்மாண் பவன் வாக்குச்சாவடியில் பாஜக இளம் தலைவர் வருண் காந்தி உள்ளிட்டோர் வாக்களித்தனர்.

    வரிசையில் ராகுல், பிரியங்கா: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஒளரங்கசீப் சாலையில் உள்ள வாக்குச்சாவடிக்கு காலை 10.30 மணிக்குச் சென்றார். அங்கு வரிசையில் நின்று வாக்கைப் பதிவு செய்தார். வாக்களிக்க வந்தவர்களுடன் அவர் சிறிது நேரம் பேசினார். ராகுலின் சகோதரி பிரியங்கா, தனது கணவர் ராபர்ட் வதேராவுடன் லோதி எஸ்டேட் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்தார். அங்கு நின்றிருந்த வாக்காளர்களிடம் ஜனநாயக கடமையை நிறைவேற்ற பிரியங்கா வாழ்த்துத் தெரிவித்தார்.

    நஜீப் ஜங், கேஜரிவால்..: தில்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் சௌக் தொகுதிக்குள்பட்ட ராஜ்புரா சாலை வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு செய்தார். தில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால், தனது மனைவி சுனிதா, தந்தை கோவிந்த் ராம், தாய் கீதா ஆகியோருடன் திலக் மார்க் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தார். தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் துக்ளக் கிரசென்ட் சாலையில் உள்ள வாக்குச்சாவடியிலும், தில்லி தலைமைத் தேர்தல் அதிகாரி விஜய் தேவ் ஹனுமான் சாலையில் உள்ள வாக்குச்சாவடியிலும் வாக்களித்தனர்.

    முக்கிய வேட்பாளர்கள்: சாந்தினி சௌக், கிழக்கு தில்லி, வடகிழக்கு தில்லி, வடமேற்கு தில்லி, மேற்கு தில்லி, தெற்கு தில்லி, புது தில்லி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ், பாஜக, ஆம்ஆத்மி உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்குப்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் தங்கள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தனர். இத் தேர்தலில் மத்திய அமைச்சர்கள் கபில் சிபல், கிருஷ்ணா தீரத், முன்னாள் அமைச்சர் அஜய் மாக்கன், முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தின் மகன் சந்தீப் தீட்சித், ஜெய் பிரகாஷ் அகர்வால், பாஜக பிரதேச தலைவர் ஹர்ஷ் வர்தன், மீனாட்சி லேகி, போஜ்பூரி பாடகரும் நடிகருமான மனோஜ் திவாரி, தலித் தலைவர் உதித் ராஜ், ஆம்ஆத்மியின் ராக்கி பிர்லா, ஆசுதோஷ், காந்திஜியின் பேரன் ராஜ்மோகன் காந்தி உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    வழக்காமாக மக்களவைத் தேர்தலில் வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசுவதை வழக்கமாகக் கொள்ளும் காங்கிரஸ், பாஜக மூத்த தலைவர்கள், இம் முறை வாக்களித்த பிறகு வாக்களித்த அடையாளமாக "மை' பதித்த விரலை உயர்த்திக் காட்டியபடி சென்றனர். அவர்களின் சார்பில் கட்சிகளின் செய்தித் தொடர்பாளர்கள் மட்டுமே செய்தியாளர்களிடம் பேசினர்.

    பலத்த பாதுகாப்பு: தில்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளில் உள்ள 11,763 வாக்குச்சாவடிகளில் 417 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், 90 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என்றும் அறிவிக்கப்பட்டிருந்தன. இதனால், அந்த வாக்குச்சாவடிகளில் மத்திய துணை ராணுவத்தினர் பெருமளவில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர். தேர்தலையொட்டி தில்லிக்கு அண்டை மாநிலங்களான உத்தர பிரதேசம், ஹரியாணா ஆகியவற்றில் இருந்துவரும் சுற்றுலா வாகனங்கள், லாரிகளில் வந்தவர்கள் கடுமையான சோதனைக்கு உள்படுத்தப்பட்ட பிறகே தலைநகருக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டனர்.

    காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. இதன் முடிவில் தலைநகரில் உள்ள ஏழு தொகுதிகளுக்கும் சுமார் 64 சதவீத வாக்குகள் பதிவாகியதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். வாக்கு எண்ணிக்கை மே 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai