Enable Javscript for better performance
தலைமைத் தேர்தல் ஆணையர் சம்பத் சென்னையில் நாளை ஆலோசனை- Dinamani

சுடச்சுட

    

    தலைமைத் தேர்தல் ஆணையர் சம்பத் சென்னையில் நாளை ஆலோசனை

    By புது தில்லி  |   Published on : 11th April 2014 12:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்தில் ஏப்ரல் 24-ஆம் தேதி நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத், ஆணையர்கள் எச்.எஸ். பிரம்மா, நஸீம் ஜைதி ஆகியோர் அடங்கிய மூவர் குழு சென்னைக்கு சனிக்கிழமை (ஏப்ரல் 12) செல்கிறது.

    தில்லியில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் மதர் கிரசன்ட் சாலை வாக்குச்சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: நாட்டில் நடைபெறும் ஒவ்வொரு தேர்தலும் தேர்தல் ஆணையத்துக்கு பொன்னாள். ஜனநாயகத்தின் மிகப்பெரிய நாள் இது. மக்களவைத் தேர்தலில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

    மொத்தம் திட்டமிடப்பட்டுள்ள ஒன்பது கட்டத் தேர்தலில் வியாழக்கிழமையுடன் சேர்த்து மூன்று கட்டத் தேர்தல் முடிந்துள்ளது. மீதமுள்ள ஆறு கட்டத் தேர்தலை அமைதியாக நடத்தி முடிக்க ஆணையம் முழு ஈடுபாடு காட்டிவருகிறது. இத் தேர்தலில் நம்பிக்கையுடன் தங்கள் வாக்களிக்கும் கடமையை வாக்காளர்கள் ஆற்றினால்தான் ஜனநாயகத்தின் நோக்கம் நிறைவேறும்.

    வரும் 24-ஆம் தேதி தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதைக் கருத்தில் கொண்டு தமிழகத் தேர்தல் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக நானும், தேர்தல் ஆணையர்கள் எச்.எஸ். பிரம்மா, நஸீம் ஜைதி ஆகியோரும் சனிக்கிழமை சென்னை செல்கிறோம். தமிழகத்தில் உள்ள தலைமைச் செயலர், மாநில உள்துறைச் செயலர், தேர்தல் பணிகளுக்கான காவல் துறை தலைமை இயக்குநர், மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் சனிக்கிழமை காலையில் ஆலோசனை நடத்தவுள்ளோம்.

    அக் கூட்டத்தில், தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள தேர்தல் பணிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து விவாதிப்போம். தமிழகத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள தேர்தல் பணிகள் திருப்தியாக உள்ளது.

    அமைதியான மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. அங்கு அரசியல் வேறுபாடுகள் அதிகம் காணப்பட்டாலும், மக்களிடையே ஜனநாயகக் கடமை ஆற்ற வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக உள்ளது' என்றார் சம்பத்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai