Enable Javscript for better performance
தாக்கத்தை ஏற்படுத்தாத \\\"நோட்டா\\\'!- Dinamani

சுடச்சுட

    

    தில்லி மக்களவைத் தேர்தலில் மின்னணு இயந்திரத்தில் அமைக்கப்பட்ட "யாரையும் தேர்ந்தெடுக்க விருப்பவில்லை' என்பதைக் குறிக்கும் "நோட்டா' வசதி வாக்காளர்களிடம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை எனத் தெரிகிறது.

    தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவில் பங்கேற்ற நோட்டா பற்றி கேட்ட போது பலரும் தங்களுக்கு நோட்டா குறித்தும் தெரிந்தும் அதைப் பயன்படுத்த வரும்பவில்லை என்று கூறினர். தில்லியில் கடந்த சட்டப் பேரவைத் தேர்தலின்போது "நோட்டா' வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது, நோட்டா வசதியை 47,972 பேர் பயன்படுத்தினர். இந் நிலையில், மக்களவைத் தேர்தலிலும் நோட்டா வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இது குறித்து லட்சுமி நகரைச் சேர்ந்த பெண் வாக்காளர் ஒருவரிடம் கேட்ட போது, "நோட்டாவைப் பயன்படுத்துவதாக இருந்தால் வாக்குச்சாவடிக்கு வராமல் நாங்கள் வீட்டிலேயே இருந்திருக்க முடியும். வாக்குச்சாவடியில் வரிசையில் காத்திருந்து நோட்டா பொத்தானை அழுத்த வேண்டிய தேவையில்லை. இது பயன்படாத ஒன்று" என்றார். சாந்தினி சௌக் மக்களவைத் தொகுதியில் வாக்காளிக்கச் சென்று கொண்டிருந்த முதல்முறை வாக்காளர் ரிஷி (24) கூறுகையில், "நாட்டின் அரசியல் அமைப்பு மீது அதிருப்தி அடைந்துள்ளேன். எனக்கு வாக்கு அளிப்பது கூட பிடிக்கவில்லைதான். அதேவேளை நோட்டா ஒரு மாற்றத்தை ஏற்படுத்திவிடும் என்று நான் கருதவில்லை' என்றார். தெற்கு தில்லி தொகுதியைச் சேர்ந்த ஷிவ் சஹாய் குப்தா (58) கூறுகையில், "வாக்குச் சாவடிக்குள் நுழையும் போதே யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது மனதில் தோன்றிவிடுகிறது. இதனால், நோட்டாவைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. உங்களுக்கு வாக்கு அளிக்க தேவையான விருப்பத் தேர்வு இருக்கும்போது பிறகு ஏன் வாக்கை விரயமாக்க வேண்டும்? என்றார்.

    தில்லி பல்கலைக்கழக மாணவர் சுனநாதா கூறுகையில், "பல்வேறு தேர்தல் பிரசாரத்தின் போது நோட்டா குறித்து எனக்குத் தெரிய வந்தது. இதழ்கள் மூலமாகவும் தெரிந்து கொண்டேன். ஆனால், இதை நான் பயன்படுத்தவில்லை. இதைப் பயன்படுத்துவதை தேர்தலைப் புறக்கணிப்பது போன்றது என நான் கருதுகிறேன்' என்றார்.

    மாற்றுக் கருத்து: அதேசமயம், சிலர் இதை நல்ல விருப்பத் தேர்வாகவும் நம்புகின்றனர். கிழக்கு தில்லி தொகுதி, ஆசாத் நகரைச் சேர்ந்த வாக்காளர் ஒருவர் கூறுகையில், "நோட்டா ஒரு பயனுள்ள விரும்பத் தேர்வாக இருப்பதாக நம்புகிறேன். வேட்பாளர்கள் அனைவரும் குற்றப் பின்னணி உடையவர்களாக இருக்கும்பட்சத்தில் நோட்டாவை பயன்படுத்தி வாக்காளிப்பது சிறந்ததாக இருக்கும்' என்றார்.

    புது தில்லி தொகுதியைச் சேரந்த வாக்காளர் ஜúஸாத் சிங் (63) கூறுகையில், "நோட்டா அமல்படுத்தப்பட்டிருப்பதால் பயன் இருக்கும். மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் மீது போதுமான இடம் அளிப்பதற்காக இந்த ஏற்பாடு குறித்து முடிவு செய்தவர்கள் புத்திசாலிகள். அவர்கள் சிந்தித்து உருவாக்கிய இந்த வசதியை நாம் கைவிடக் கூடாது' என்றார்.

    நோட்டா வசதி குறித்து பரவலாக பிரசாரம் செய்தபோதிலும் இதுபற்றி இன்னும் வாக்காளர்கள் சிலருக்கு தெரியாத நிலை உள்ளது. திமர்பூரைச் சேர்ந்த முதல்முறை வாக்காளர் சந்தீப் இது குறித்து கூறுகையில், "நோட்டா வசதி மின்னணு வாக்கு இயந்திரத்தில் இருப்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், இந்த வசதி இருந்தாலும் நான் ஏதாவது ஒரு கட்சிக்குத்தான் எனது வாக்கைப் பதிவு செய்வேன். விலை மதிக்கமுடியாத எனது வாக்கை நான் ஏன் விரயமாக்க வேண்டும்? என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai