Enable Javscript for better performance
ரேபரேலி, அமேதியில் மட்டுமே பிரசாரம்- Dinamani

சுடச்சுட

    

    மக்களவைத் தேர்தலில் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ரே பரேலி, அமேதி ஆகிய தொகுதிகளில் மட்டுமே பிரசாரம் செய்யவுள்ளேன்' என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் சோனியாவின் மகளுமான பிரியங்கா காந்தி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

    42 வயதாகும் பிரியங்கா காந்தி தனது கணவர் ராபர்ட் வதேராவுடன் லோதி எஸ்டேட் பகுதியில் வசித்து வருகிறார்.

    அவரது தந்தையும், முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்துக்குப் பிறகு அவருக்கு சிறப்புப் பாதுகாப்புக் குழுவின் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், பொது இடங்களிலும் அரசியல் நிகழ்வுகளிலும் பங்கேற்பதை தவிர்க்கும் பிரியங்கா, முக்கியமான காங்கிரஸ் கூட்டங்களில் மட்டும் கலந்துகொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

    தேர்தல் காலங்களில் அவர் முழு நேர அரசியலில் ஈடுபடுவார் என்று அவ்வப்போது செய்திகள் வெளியாவதும் பின்னர் அதை காங்கிரஸ் தலைமை மறுப்பதும் வாடிக்கையாகிவிட்டது.

    இந் நிலையில், மக்களவைத் தேர்தலையொட்டி லோதி எஸ்டேட் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் கணவருடன் வியாழக்கிழமை பிரியங்கா காந்தி வாக்களித்தார். வாக்குச்சாவடியில் இருந்து புறப்படும் முன்பு அவரை செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டு, நீங்கள் ஏன் தேர்தலில் போட்டியிடுவதில்லை? காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடையும் என்று கூறப்படுகிறதே? என பல்வேறு கேள்விகள் கேட்டனர்.

    அதற்குப் பிரியங்கா பதலளிக்கையில், "எனது தாயும் சகோதரரும் தேர்தலில் போட்டியிடுகின்றனர். அவர்கள் போட்டியிடும் ரே பரேலி, அமேதி தொகுதியில் வழக்கம் போலப் பிரசாரம் செய்வேன்' என்று மட்டும் பதில் கூறிவிட்டுச் சென்றார்.

    ""காங்கிரஸ் கட்சியில் முக்கியப் பொறுப்பு இல்லாதபோதும், பிரியங்காவுக்கு வட மாநிலங்களில் மக்களிடையே செல்வாக்கு உள்ளது. ஆகவே, அவர் ரே பரேலி, அமேதி ஆகிய தொகுதிகளில் மட்டுமின்றி மற்ற தொகுதிகளிலும் பிரசாரம் செய்ய வேண்டும்'' என்று காங்கிரஸ் தொண்டர்கள், தலைவர்கள் விரும்பினர்.

    இதை பிரியங்கா காந்தி உறுதிப்படுத்தவும் இல்லை, மறுக்கவும் இல்லை. இதனால், அவர் பிரசாரம் செய்ய வரக் கூடும் என்ற நம்பிக்கையில் உத்தர பிரதேச மாநிலத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் இருந்தனர்.

    ஆனால், அச் செய்தியில் உண்மையில்லை என்று கடந்த சில வாரங்களுக்கு முன்பு காங்கிரஸ் பொதுச் செயலர் ஜனார்தன் துவிவேதி திட்டவட்டமாக மறுத்தார். இதனால், காங்கிரஸார் ஏமாற்றம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai