Enable Javscript for better performance
வாக்களிக்க ஆர்வம் காட்டிய முதியவர்கள்!- Dinamani

சுடச்சுட

    

     தில்லி மக்களவைத் தேர்தலில் பல இடங்களில் முதியோர்கள் ஆர்வமுடன் வந்து தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.

    தில்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ஏப்ரல் 10-ஆம் தேதி நடைபெற்றது. மொத்தம் 1.27 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதியுடையவர்கள் என்றும், அதில் 100 வயதை கடந்தவர்கள் 324 பேர் உள்ளதாகவும், 90 முதல் 100 வயதுடையவர்கள் 10,104 பேர் என்றும் தில்லி தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

    இந் நிலையில் புது தில்லிக்கு உள்பட்ட தொகுதியில் முதியோர் பலர் ஆர்வமுடன் வாக்களிக்க வந்தனர். தன் வாக்கை பதிவு செய்துவிட்டு வந்த, பல்பீர் சிங் (80) என்பவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கடந்த 55 ஆண்டுகளாக என் வாக்கை பதிவு செய்து வருகிறேன். வாக்களிப்பது நம் அடிப்படை உரிமைகளில் ஒன்று. எனவே, நம் இறுதி மூச்சு உள்ளவரை ஒவ்வொருவரும் வாக்களிக்க வேண்டும். நான் வாக்களித்தற்கு பெருமைப்படுகிறேன்' என்றார்.

    அதேபோல் தில்லி வாசியான மகேந்தர் சிங் (75) என்பவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "வாக்களிக்க இளைஞர்களை ஊக்கப்படுத்தி வரும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு நன்றாக உள்ளது.

    இத் தேர்தலில் இளைஞர்கள் அதிகளவு வாக்களித்து மாற்றத்தை கொண்டு வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது' என்றார். மற்றொரு வாக்காளரான 80 வயதான மூதாட்டி ஒருவர் கூறுகையில், "ஏன் உனக்கு சொல்ல வேண்டும்? நீ தேர்தலில் போட்டியிடுகிறாயா?' என்று கூறி தன் விவரத்தைக் கூட தெரிவிக்க மறுத்து விட்டார். இதுபோல் பலர் ஆர்வமுடன் வாக்குசாவடிகளை தேடிச் சென்று வாக்களித்தனர்.

    போதிய வசதிகள் இல்லை: எனினும், முதியோர்கள் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களிக்கப் போதிய வசதிகளை தேர்தல் ஆணையம் செய்து தரவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

    முன்னதாக தில்லி தேர்தல் ஆணையம் சார்பில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு தேர்தல் நடைபெறும் அன்று வாக்குச்சாவடிகளில் சக்கர நாற்காலிகள், சாய்தள படிக்கட்டு உள்ளிட்ட சிறப்பு வசதிகள் செய்துதரப்படும் என்று தெரிவித்திருந்தது. ஆனால், வாக்குசாவடி அருகே வாகனங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டதால் 75 மீட்டர் சுற்றளவுக்கு வெளியே நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. நடக்க முடியாத முதியவர்களுக்கு சக்கர நாற்காலிகள் வசதிகளும் செய்து தரப்படாததால், பல வாக்குச்சாவடிகளில் முதியோர்கள், தங்கள் உறவினர்களால் தூக்கி சென்று வாக்களிக்கும் நிலைதான் இருந்தது.

    அதேபோல் ஆர்வமுடன் வாக்களிக்க வந்த முதியவர்கள், பல மணிநேரம் வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்ய வேண்டிய நிலைதான் இருந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai